கொரோனா காலத்தில் 21.8% பேர் ஒருவேளை உணவுகூட இல்லாமல் தவிப்பு –அதிரவைக்கும் சர்வே!
20.6 சதவீத குடும்பங்கள் உணவுப் பற்றாக்குறையால் தவித்துள்ளது தெரியவந்துள்ளது.
கொரோனா தொற்று காலக்கட்டத்தில், பாதிப்புக்குள்ளான மற்றும் ஓரங்கட்டப்பட்ட சமூகங்களிடையே நிலவும் பசி, பட்டினி நிலை குறித்து கண்டறிய குஜராத்தின் அண்ணா சுரக்ஷா ஆதிகர் அபியான் (ASAA) அமைப்பு சார்பில், 'ஹங்கர் வாட்ச்’ என்ற பெயரில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில்,
20.6 சதவீத குடும்பங்கள் உணவுப் பற்றாக்குறையால் தவித்துள்ளது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி, 21.8% மக்கள் ஒருவேளை உணவுக்கூட இல்லாமல், பட்டினியுடன் இரவு தூங்கச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் செப்டம்பர், அக்டோபரில், இந்த சர்வே நடத்தப்பட்டுள்ளது. மக்களின் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறித்த பல்வேறு கேள்விகள் இந்த கணக்கெடுப்பில் இடம்பெற்றிருந்தன.
அஹமதாபாத், ஆன்ந்த் பரூச், பாவ்நகர், மோர்பி, தாஹோத், நர்மதா, பஞ்ச்மஹால்ஸ், வதோதரா உள்ளிட்ட 9 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கான அத்தியவாசிய உணவு தேவையை குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் பல புதிய ரேஷன்கார்டுகள் உருவாக்கபட்டுள்ளதாகவும் இந்த கணக்கெடுப்பு மூலம் வெட்ட வெளிச்சமானது.
ஏறக்குறைய 38 சதவீதம் பேர் அரிசி / கோதுமை பயன்பாட்டை குறைத்துக்கொண்டதாகவும், 40.7சதவீதகம் பேர் பருப்பு வகைகள் பயன்படுத்துவதை நிறுத்திக்கொண்டதாகவும், 57.6 சதவீதம் பேர் காய்கறிகளைப் பயன்படுத்துவதைக் குறைத்ததுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
மாநிலத்தின் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பிராந்தியங்களில் மிகவும் பின்தங்கிய சமூகங்களின் கீழ் வரும் 403 வீடுகளில் இருந்து பதில்கள் சேகரிக்கப்பட்டன.
கணக்கெடுப்பின்போது 91.1 சதவிகிதம் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். 49.4 சதவிகிதம் பேர் பெண்கள். 64.5 சதவீதம் பேர் சாதாரண தினசரி கூலித் தொழிலாளர்களாகவும், 38.7 சதவீதம் பேர் விவசாயிகளாகவும் பணியாற்றுபவர்கள்.
32 சதவிகிதத்தினர் தங்கள் வாழ்வாதாரத்திற்காக ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை நம்பியுள்ளவர்கள். 83 வீடுகளைச் சேர்ந்தவர்களின் குடும்பம் பெண்களின் தலைமையில் (SINGLE WOMEN) நடக்கிறது. 35 சதவிகிதம் பேர் வீடற்றவர்கள் அல்லது குடிசைவாசிகள். 50.4 சதவீதம் பேர் மாதத்திற்கு ரூ.3,000 க்கும் குறைவாக ஊதியம் பெறுபவர்கள்.
ANANDI என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் செஜல் டான்ட், ’கோவிட் -19 காலத்தில் குஜராத்தில் பசி மற்றும் உணவு இறையாண்மையின் நிலைமை' என்ற கூட்டத்தில் பேசுகையில்,
“இந்த கணக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில் பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் குறைத்துள்ளனர். காடுகளுக்குச்சென்று வேட்டையாடி இறைச்சி, கிழங்கு போன்றவற்றையும், வனப்பொருட்களையும் கொண்டு வாழ்வாதாரத்தை நடத்துபவர்களான 15.5சதவீதம் பேர் ஊரடங்கு காலத்தில் காடுகளுக்கு செல்லக் கூடாது என தடுக்கப்பட்டுள்ளனர்,” என்றார்.
பொது விநியோக முறையின் அடிப்படையில், மாதந்தோறும் ரேஷன் கடைகளில் ஒவ்வொரு நபருக்கும் 10 கிலோ தானியங்கள், மொத்தம் 1.5 கிலோ பருப்பு வகைகள் மற்றும் 800 கிராம் சமையல் எண்ணெய் ஆகியவற்றை குறைந்தபட்சம் அடுத்த ஆறு மாதங்களுக்கு (ஜூன் 2021 வரை) வழங்கவேண்டும் என்று மாநில அரசாங்கத்திற்கு பல்வேறு பரிந்துரைகள் கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்டன.
”ஊரடங்கு காரணமாக, குடிமக்களின் வாழ்வாதாரங்கள் முற்றிலுமாக துடைத்தெறியப் பட்டுள்ளதால், தேசிய கிராம வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டத்தின் கீழ் கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் உடனடியாக வேலைவாய்ப்பு வழங்ப்பட வேண்டும், என்று குஜராத்தின் அண்ணா சுரக்ஷா ஆதிகர் அபியான் (ASAA) அமைப்பு சார்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
தகவல் உதவி - இந்தியன் எக்ஸ்பிரஸ், தொகுப்பு: மலையரசு