'தந்தையாக ப்ரோமோஷன்' - பிறந்த மகளுடன் இருக்க உயர்பதவி பணியை துறந்த அன்பு அப்பா!
நிறுவனத்தின் பணித்துறப்பு கடிதத்தில் 'தந்தையாக ப்ரோமோஷன்' அடைந்திருப்பதை காரணம் காட்டி பணியை துறந்துள்ள இளம் அப்பாவின் செயல், தந்தைமை விடுப்பு பற்றியும் குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்கு குறித்த ஆரோக்கியமான விவாதத்தை இணையத்தார் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
ஒரு புது உயிரை இப்பூவுலகிற்கு அறிமுகப்படுத்துவது அற்புதமான நிகழ்வு. தாய்க்கும், தந்தைக்கும், அவர்களை பெற்றோருக்கும், சுற்றத்தாருக்கும் குழந்தைப் பிறப்பு மட்டற்ற மகிழ்வை தரவல்லது. மனமகிழ்வில் பங்கெடுத்து கொள்ளும் இவர்கள் யாவரும் தாயின் கடினமான நாட்களை எளிதாக்க உதவுவதில்லை.
ஏனெனில், இங்கு குழந்தையைப் பெற்றெடுத்து, வளர்ப்பது தாயின் கடமையாகவே போதிக்கப்பட்டு வருகிறது. குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்கு கேள்விக்குறியாகவே இருக்கும் சூழலில், அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில தந்தையர் அவர்களது பொறுப்பை உணர்ந்துள்ளனர். அப்படியானவர்களில் ஒருவர் தான் அங்கித் ஜோஷி.

குழந்தை பிறந்தவுடன் தந்தையாக பதவி உயர்வடைந்திருப்பதால் அவரது உயர் வருமானமளிக்கும் பணியை உதறி, மகளுடன் முழுநேரத்தை செலவழித்து மனைவியுடன் குழந்தை வளர்ப்பில் சமபங்கெடுத்துள்ளார். நிறுவனத்துக்கான பணி துறப்பு கடிதத்தில்,
தான் அப்பாவாக புரமோஷன் அடைந்திருப்பதை காரணமாக காட்டியுள்ளார். ஜோஷியின் இச்செயல் சமூகத்தில் இயல்பான ஒன்றாக வேண்டியது என்பதால், அவரது முடிவினை பாராட்டியே ஆக வேண்டுமல்லவா!
பிறந்த மகளுக்காக வேலையை ராஜினாமா செய்த தந்தை
அங்கித் ஜோஷியின் கதையை சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் 'ஹியூமன்ஸ் ஆஃப் பாம்பே' எனும் பக்கம் பகிர்ந்திருந்தது. அப்பதிவு நெட்டிசன்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தது.
ஐஐடி கான்பூரில் படித்து, கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராக அதிக சம்பளம் பெறும் பணியில் பணியாற்றியவர் அங்கித் ஜோஷி. பணி நிமித்தமாய் பல நகரங்களுக்கு பயணிக்க வேண்டிய நிலையில் இருந்துள்ளார். அதுவரை அவர் நேசித்து செய்த பிரயாணங்களை மகள் பிறப்பிற்கு பிறகு அவர் தொடர விரும்பவில்லை.
தாய்மார்களுக்கு 6 மாதம் பேறுகால விடுப்பு உள்ளது. ஆனால், தந்தைகளுக்கோ எண்ணிக்கொள்ளும் நாட்கணக்கிலே விடுப்பு அளிக்கப்படுவதால், அக்காலம் போதாது என்பதை உணர்ந்த அவர் பணியை ராஜினாமா செய்தார்.
"என் மகள் பிறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, அதிக சம்பளம் தரும் வேலையை விட்டேன். இது ஒரு விசித்திரமான முடிவு என்று எனக்குத் தெரியும். பணியை விட்டால் எவ்வளவு கஷ்டமாக இருக்கும் தெரியுமா? என்று சுற்றியிருந்தோர் பயம்புறுத்தினர். ஆனால், என் மனைவி அகன்ஷா என் முடிவிற்கு துணை நின்றாள். என் மகள் உலகிற்கு வருவதற்கு முன்பே, எனது ஒரு வார கால மகப்பேறு விடுப்பு போதாது என்றும், என் முழு நேரத்தையும் அவளுடனே செலவிட விரும்புகிறேன் என்று எனக்குத் தெரியும். அது கடினமான செயலாக இருக்கும் என்றும் நான் அறிவேன். சில மாதங்களுக்கு முன்பு தான் தனியார் கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் துணைத்தலைவராக பணியில் சேர்ந்தேன். நிறுவனத்தாலும் எனது தந்தைமை விடுமுறையை நீட்டிக்க முடியாது என்று எனக்குத் தெரியும். அதனால், தந்தையாக பதவி உயர்வு அடைந்திருக்கும் நிலையில், பணியிலிருந்து விலக முடிவெடுத்தேன்," என்று அங்கித் தெரிவித்ததாக இன்ஸ்டா பதிவில் குறிப்பிட்டிருந்தது.
இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஸ்பிதி பள்ளத்தாக்கிற்கு ஜோஷியும் அவரது மனைவி அகன்ஷாவும் சென்றிருந்த போது, அவ்வழகிய பள்ளத்தாக்கில் வருங்கால மகள் பற்றி பேசிக்கொண்டிருக்கையிலே மகளுக்கு பள்ளத்தாக்கின் பெயரான ஸ்பிதி என்று வைக்க தீர்மானித்துள்ளார்.
''ஹிமாச்சலில் உள்ள ஸ்பிதி பள்ளத்தாக்குக்கு பயணித்த போது, நானும்,அகான்க்ஷாவும் எங்கள் வருங்கால மகளுக்கு 'ஸ்பிதி' என்று பெயரிடுவோம் என்று உறுதியளித்தோம். கடந்த மாதம் எங்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்து எங்கள் கனவு நனவாகியது. எங்கள் இதயங்கள் நிறைந்தன, எங்கள் வாழ்க்கை முழுமையடைந்தது. அன்றிலிருந்து அவளால் நிறைந்தது எங்களது வாழ்க்கை.”

இரவில் தாலாட்டு பாடி அவள் தூங்கும் வரை என் கைகளிலே அவளை ஊசலாடுகிறேன். நான் இந்த தருணங்களை ரசிக்கிறேன். சில சமயங்களில் தாலாட்டுப் பாடும் போது நடுவில், அவள் என்னை மிகவும் உன்னிப்பாகப் பார்ப்பாள். அப்போது கிடைக்கும் ஆனந்தம் அளவிட முடியாதது.
இப்படியே ஒரு மாதம் கடந்துவிட்டது. இது ஒரு தூக்கமில்லாத, உற்சாகமான, சோர்வான மற்றும் இன்னும் மகிழ்ச்சியான மாதம்! சில மாதங்களுக்குப் பிறகு நான் வேலைக்கு விண்ணப்பிப்பேன். ஆனால் அதுவரை, நான் இந்த நேரத்தை என் மகளுடன் செலவிடப் போகிறேன்.
அகன்ஷா 6 மாதங்கள் மகப்பேறு விடுப்பில் இருக்கிறார். ஸ்பிதி பிறந்த சில நாட்களுக்குப் பிறகு மேலாளராகவும் பதவி உயர்வு பெற்றார். தொழில் மற்றும் தாய்மை இரண்டிலும் அவர் சிறந்து விளங்கி, அவளுடைய தொழில் & தாய்மை மிகவும் நிறைவாக இருக்கிறது! அதே சமயம்,
”தந்தைகளுக்கு விடுப்பாக சில நாட்களை மட்டும் நிறுவனங்கள் அளிப்பது வருத்தத்தை அளிக்கிறது. குழந்தையுடன் தந்தை எவ்வளவு குறைவாக தொடர்பு கொள்கிறார் என்பதை காட்டிலும் குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்கினை குறைக்கும் வகையில் இது இருக்கிறது. நிறுவனத்தின் இக்கொள்கை, ஒரு குழந்தையின் பெற்றோராக நாம் செயல்படுவதைவிட குடும்பத்தின் முக்கிய பிழைப்பாதாரமாக நம்மை ஆக்குகிறது.”

குழந்தை மற்றும் மகளுடன் அங்கித்.
நான் எடுத்த முடிவு எளிதானது அல்ல. பல ஆண்களால் இதை எடுக்க முடியாது. ஆனால், வரும் ஆண்டுகளில் எல்லாம் மாறும் என்று நம்புகிறேன். ஏனென்றால் கடந்த 1 மாதத்தில் நான் வாழ்ந்த வாழ்க்கை எனது எல்லா ஆண்டுகளையும் விட நிறைவாக இருந்தது," என்று முடிவடைந்த அப்பதிவில் அங்கித் குழந்தையை உச்சிமுகரும் புகைப்படமும் இணைக்கப்பட்டிருந்தது.
ஓரிரு நாட்களிலே 2 லட்சம் லைக்ஸை பெற்ற அப்பதிவு, தந்தைமை விடுப்பு பற்றியும் குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்கு குறித்த ஆரோக்கியமான விவாதத்தை இணையதார்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
தகவல் மற்றும் படங்கள் உதவி: Humans of Bombay instagram page
