8,000 மீட்டருக்கு மேல் இருக்கும் 5 சிகரங்களை ஏறியுள்ள முதல் இந்தியப் பெண்!
மகாராஷ்டிராவின் சதாரா பகுதியைச் சேர்ந்த பிரியங்கா மோஹிதே கஞ்சன்ஜங்கா, எவரெஸ்ட், லோட்சே சிகரம், மக்காலு, அன்னபூர்ணா 1 சிகரம் போன்ற சிகரங்களில் ஏறியுள்ளார்.
இந்த ஆண்டு மே மாதம் பிரியங்கா மோஹிதே கஞ்சன்ஜங்கா சிகரத்தில் ஏறினார். இவர் 8,000 மீட்டருக்கு மேல் ஐந்து சிகரங்களில் ஏறியுள்ள முதல் இந்தியப் பெண் என்கிற பெருமைக்குரியவர்.
30 வயதாகும் பிரியங்கா 2013-ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரம், 2018-ம் ஆண்டு லோட்சே சிகரம், 2019-ம் ஆண்டு மக்காலு, 2021-ம் ஆண்டு அன்னபூர்ணா 1 சிகரம் போன்றவற்றில் ஏறியிருக்கிறார். அன்னபூர்ணா 1, மக்காலு சிகரத்தில் ஏறிய முதல் இந்தியப் பெண் பிரியங்கா மோஹிதே.
5 சிகரங்களில் ஏறிய முதல் இந்தியப் பெண்
பிரியங்கா மகாராஷ்டிராவின் சதாரா பகுதியில் பிறந்து வளர்ந்தவர். சிறு வயதில் அவரது உறவினருடன் சயாத்ரி பகுதியில் இருக்கும் பலவிதமான கோட்டைகளுக்கு சென்று பார்வையிட்டுள்ளார்.
இப்படித்தான் இவருக்கு மலையேற்றத்தில் ஆர்வம் பிறந்துள்ளது. இமயமலையில் ஏறிய பிறகு இந்த ஆர்வம் மேலும் அதிகரித்திருக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலையின் சயாத்ரி மலைத்தொடரில் ராஜ்கட் கோட்டை, லிங்கானா கோட்டை, பிரதாப்கர் கோட்டை என பல அற்புதமான கோட்டைகள் இருக்கின்றன.
“சத்ரபதி சிவாஜி மகாராஜின் வீரக்கதைகளைக் கேட்டு வியந்திருக்கிறேன். வெவ்வேறு கோட்டைகளைச் சென்று பார்வையிடுவது எனக்குப் பிடித்தமான ஒன்று. இங்கு 300-க்கும் மேற்பட்ட கோட்டைகள் இருக்கின்றன,” என்கிறார் பிரியங்கா.
உத்தர்கண்ட் Nehru Institute of Mountaineering கல்வி நிறுவனத்தில் 12ம் வகுப்பு முடித்ததும் அடிப்படை மலையேற்ற வகுப்பில் சேர்ந்தார்.
”அதைத் தொடர்ந்து அட்வான்ஸ்ட் கோர்ஸ் சேர்ந்தேன். கிரேட் ஏ எடுக்க கடுமையாக உழைத்தேன். புதிய சூழலுக்கு எப்படி பழக்கப்படுவேன் என்று பெற்றோர் கவலைப்பட்டனர். அந்த சவாலை நான் திறம்பட சமாளித்ததைப் பார்த்து நிம்மதியடைந்தார்கள்,” என்கிறார்.
மலையேற்ற அனுபவம்
20,722 அடியில் Bandarpunch, 18,000 அடியில் BC Roy, 29,000 அடியில் எவரெஸ்ட் என ஒவ்வொரு சிகரமும் பிரமாதமான அனுபவமாக இருந்ததாக பிரியங்கா விவரிக்கிறார்.
”நான் ஒவ்வொரு முறை சிகரத்தில் ஏறும்போது அந்த மலைக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்வேன். ஏனென்றால் மலையேறுவது என் விருப்பத்தால் அல்ல, அந்த மலை அழைப்பதால் மட்டுமே அது சாத்தியமாகிறது. உச்சியில் இருக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உணர்வேன். அதேசமயம் பாதுகாப்பாக மலையடிவார முகாமை சென்றைடையவேண்டும் என்கிற எச்சரிக்கை உணர்வும் இருக்கும்,” என்கிறார்.
கஞ்சன்ஜங்கா சிகரத்தில் இறுதியாக இருக்கும் முகாம் 4-ல் இருந்து உச்சி வரை செல்வதும் மீண்டும் முகாமிற்கு திரும்புவதும் மிகவும் சவாலாக இருந்ததாக பிரியங்கா தெரிவிக்கிறார்.
“ஆக்சிஜன் சிலிண்டர்களைத் தொடர்ந்து செக் செய்யவேண்டியிருந்தது. ஆக்சிஜன் குறைவான Death Zone-ல் முப்பது மணி நேரத்திற்கும் மேலாக இருந்தோம்,” என்று குறிப்பிடும் பிரியங்கா மலையேற்றத்திற்கு மன ஆரோக்கியம் மிகவும் முக்கியம் என்பதை வலியுறுத்துகிறார்.
“நான் யோகா பயிற்சி செய்கிறேன். ஒவ்வொரு நிலையிலும் உடலும் மனதும் சோர்வடைந்துவிடும். உங்களுக்கு உந்துசக்தியாக இருப்பது மனோதிடம் மட்டுமே. எதற்கும் மனம் தளராத மனநிலையுடன் நேர்மறை எண்ணங்களும் இருப்பது அவசியம்,” என்கிறார்.
டயட் மற்றும் ஊட்டச்சத்துக்கு Steadfast Nutrition நிறுவனத்துடன் இணைந்திருக்கிறார். இந்நிறுவனம் அவருக்கு உயர்தர சப்ளிமெண்ட்களை வழங்குகிறது. பிரியங்கா தசைகளை வலுவாக்க வே புரோட்டீன், பீனட் பட்டர் என புரோட்டீன் பொருட்களை உட்கொள்கிறார்.
பெற்றோர் மிகப்பெரிய அளவில் ஆதரவளிப்பதுடன் அவரது ஆலோசகர்களும் தொடர்ந்து வழிகாட்டியதாக குறிப்பிடுகிறார்.
“ஷெர்பா இன மக்களின் உதவியின்றி என்னுடைய மலையேற்றப் பயணம் சாத்தியமாகியிருக்காது,” என்கிறார்.
மலையேற்றம் மற்றும் சாகச செயல்களில் பங்களித்ததற்காக பிரியங்காவிற்கு Tenzin Norgay National Adventure Award 2020 வழங்கப்பட்டுள்ளது.
”ராஷ்டிரபதி பவனில் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் அவர்களிடமிருந்து விருது பெற்றுக்கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது,” என்கிறார்.
பயோடெக்னாலஜி பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு முடித்துள்ள பிரியங்கா பெங்களூருவில் மருந்து நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார்.
Eight-thousanders என்றழைக்கப்படும் 14 உயரமான சிகரங்களிலும் ஏறி முடிக்கவேண்டும் என்று இலக்கு நிர்ணயித்திருக்கிறார் பிரியங்கா. இவர் ஏற்கெனவே இதில் 5 சிகரங்களில் ஏறியிருக்கிறார். 26,795 அடி உயரத்தில் இருக்கும் தௌளகிரி மலையில் ஏறவேண்டும் என்றும் திட்டமிட்டிருக்கிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா