'ட்விட்டரின் புதிய சிஇஓ இவர் தான்...' - எலான் மஸ்க் வெளியிட்ட புகைப்படம் வைரல்!
சர்ச்சை நாயகனாக வலம் வரும் எலான் மஸ்க், ட்விட்டரின் புதிய சிஇஓ இவர் தான் என பதிவிட்டுள்ள புகைப்படம் வேற லெவல் சர்ச்சையுடன் ட்ரெண்டாகி வருகிறது.
சர்ச்சை நாயகனாக வலம் வரும் எலான் மஸ்க், ட்விட்டரின் புதிய சிஇஓ இவர் தான் என பதிவிட்டுள்ள புகைப்படம் வேற லெவல் சர்ச்சையுடன் ட்ரெண்டாகி வருகிறது.
சர்ச்சை நாயகன் எலான் மஸ்க்:
சாதாரண ஆளுங்க தான் சர்ச்சைக்குரிய ட்வீட்டை போட்டு நெட்டிசன்களை வம்புக்கு இழுப்பார்கள். ஆனால், எலான் மஸ்க் ட்விட்டரையே விலைக்கு வாங்கி, அதனை வைத்து புதுப்புது சர்ச்சைகளை உருவாக்கி வருகிறார். பில்லியன் கணக்கில் டாலர்களைக் கொட்டிக்கொடுத்து ட்விட்டரை விலைக்கு வாங்கிய எலான் மஸ்க், அதன் சிஇஓவாக இருந்த பராக் அகர்வால் முதல் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலையை விட்டு தூக்கி முதல் சர்ச்சைக்கு பிள்ளையார் சுழி போட்டார்.
அதன் பின்னர், ட்விட்டர் ப்ளூ டிக் பெற கட்டணம், ட்விட்டருக்கு புதிய சிஇஓ வேண்டுமா?, ஆப்பிள் நிறுவனத்துடன் மோதல், தனியார் நிறுவனங்களின் ட்விட்டர் கணக்குகள் மீதான நடவடிக்கைகள், பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம் என ட்விட்டரில் பல தரமான சம்பவங்களை அரங்கேற்றி வருகிறார். இதனால் இதையடுத்து எலான் ட்விட்டர் சிஇஓ பதவியிலிருந்து விலகினால்தான் ட்விட்டர் உருப்படும், இல்லையெனில் பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கும் எனப் பலர் விமர்சித்திருந்தனர்.
பதவி விலக முடிவெடுத்த எலான்:
டாக் ஆஃப் தி டவுனாக வலம் வரும் ட்விட்டர் நிறுவன சிஇஓ எலான் மஸ்க், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உலகையே திரும்பி பார்க்கும் வகையில் ஒரு ட்வீட்டை பதிவு செய்தார். "நான் ட்விட்டர் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா?" என ட்வீட் செய்து வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினார்.
இந்த வாக்கெடுப்பின் முடிவு எலான் மஸ்கிற்கு எதிராக திரும்பியது. ஆம், இதில் 57.5 சதவிகிதத்துக்கும் அதிகமான பயனர்கள் எலான் பதவி விலக வேண்டும் (ஆம்) என்றும், சுமார் 42.5 சதவிகிதம் பேர் பதவி விலக வேண்டாம் (இல்லை) என்றும் பதிலளித்திருந்தனர்.
இதனையடுத்து, எலான் மஸ்க் ட்விட்டர் சிஇஓ பதவியில் இருந்து விலக வேண்டும் என தொடர்ந்து நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று எலான் மஸ்க் புதிய ட்விட்டர் சிஇஓ குறித்து சர்ச்சைக்குரிய புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
புதிய ட்விட்டர் சிஇஓ யார்?
எலான் மஸ்க் செல்லமாக வளர்த்து வரும் ஃபிளாக்கி (Floki) என்ற நாயின் புகைப்படத்தை பல கோணங்களில், டிசைன், டிசைனாக படம் பிடித்து பதிவிட்டுள்ளார். அத்துடன்,
இது நல்லா இருக்கா???... இந்த போட்டோவில் பார்க்க ஸ்டைலா இல்ல??? என்றெல்லாம் போட்டு நெட்டிசன்களை வெறுப்பேற்றியுள்ளார்.
முதல் ட்வீட்டில் அவரது நாய் Floki கருப்பு கலர் டிஷர்ட் அணிந்து கொண்டு ஆபீஸ் டேபிள் முன்பு அமர்ந்திருப்பது போன்ற ஒரு போட்டோ போட்டுள்ளார். அதில் நாய் அணிந்திருக்கும் கருப்பு கலர் டி-ஷர்ட்டில் சிஇஓ என ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.
“ட்விட்டரின் புதிய சிஇஓ அமேசிங்கா இல்ல...” என பதிவிட்டுள்ளார்.
அடுத்ததாக இரண்டாவது படத்தில், அதே வளர்ப்பு நாய் கோட், சூட் மற்றும் கண்ணாடியுடன் கெத்தாக அமர்ந்திருக்கும் போட்டோவை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு,
“இவர் கணக்கு போடுவதில் கில்லாடி, முன்னாள் சிஇஓவை விட சிறந்தவர்...” என பதிவிட்டுள்ளார்.
அதாவது, ட்விட்டரின் முன்னாள் சிஇஓவான பராக் அகர்வால் போன்று தனது செல்லப்பிராணி கண்ணாடி அணிந்துள்ள போட்டோவை பகிர்ந்து அவரை மறைமுகமாக எலான் மஸ்க் சாடியிருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்துள்ளனர்.
மூன்றாவதாக போட்டுள்ள ட்வீட்டில் தனது செல்ல நாய் கருப்பு நிற டீ-ஷர்ட் அணிந்து ஸ்டைலாக டேபிள் மீது நிற்பது போன்ற போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் புது சிஇஓ ஸ்டைலானவர் என்ற வகையில் எழுதியுள்ளார்.
இந்த ட்வீட்களை எல்லாம் பார்க்கும் நெட்டிசன்கள் எலான் மஸ்க் தன்னைத் தானே கிண்டலடித்துக் கொள்வதாக பதிவிட்டு வருகின்றனர்.
பராக் அகர்வாலை சீண்டிய எலான் மஸ்க்:
எலான் மஸ்க் தனது இரண்டாவது ட்வீட்டில் இந்த சிஇஓ முன்னாடி இருந்த சிஇஓவை விட சிறப்பானவர் என்றும் பதிவிட்டுள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓவாக இருந்த பராக் அகர்வாலுக்கும், எலான் மஸ்கிற்கும் இடையே ட்விட்டரில் வார்த்தை போர் வெடித்தது அனைவரும் அறிந்த விஷயம்.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முடிவெடுத்த எலான் மஸ்க், ஆரம்பம் முதலே அந்நிறுவனம் மீதும், தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த பராக் அகர்வால் எலான் மஸ்க் ட்வீட்களுக்கு பதிலடி கொடுக்க ஆரம்பித்தார். இதனை மனதில் வைத்துக்கொண்டு தான் எலான் மஸ்க், ட்விட்டரை வாங்கிய அன்றே பராக் அகர்வால் உள்ளிட்ட முக்கிய தலைமை அதிகாரிகளை வேலையை விட்டு நீக்கியதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று எலான் மஸ்க் ட்வீட்டியிருக்கும் இந்த ட்வீட் பராக் அகர்வாலை விமர்சிக்கும் தொனியில் இருப்பதாக நெட்டிசன்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்.
'சிஇஒ பதவிக்கு ஒரு முட்டாள் கிடைத்ததும் பதவியை ராஜினாமா செய்றேன்’ - எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!