தன் பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ.1000 வழங்கிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை!
ஊரடங்கால் தவிக்கும் தனது பள்ளி மாணவர்களுக்கு, துப்பாபுரம் பஞ்சாயத்து பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியை வீடு தேடி சென்று உதவியுள்ளார்.
கொரோனா நோய் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை நாளுக்கும் நாள் உலகமெங்கும் ஏறிக் கொண்டே போகின்றன. இந்தியாவிலும் இதே நிலை தான். இன்னும் சொல்லப் போனால் தமிழ்நாட்டில் தற்போது தான் கொரோனா எண்ணிக்கை மேல் நோக்கிச் செல்லத் தொடங்கியுள்ளது. இது மக்களிடையே அச்சத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்துகிறது.
இப்படி ஒருபுறம் இருக்க, அவரவர் வயிறு நிரம்ப, வெளியே வந்து வேலைக்குச் சென்றால் தான் என்ற நிலையும் இருக்கிறது. அதிலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. தேவையான காய்கறி, உணவு கிடைக்காமல் பல குடும்பங்கள் ஆங்காங்கே தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோரின் குழந்தைகள் அரசுப்பள்ளியில் பயில்பவர்கள். அங்கே சத்துணவோடு கல்வி கிடைத்ததால் அவர்கள் கவலையின்றி இருந்தனர். ஆனால் தற்போது ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டு, வேலை செய்து வருவாய் ஈட்டும் வழியும் இல்லாது குடும்பத்தோடு பட்டினியில் உள்ளனர் பல தொழிலாளர்கள்.
இந்த இக்கட்டான சூழலில் துப்பாபுரம் என்ற பஞ்சாயத்து பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியை தனது பள்ளி மாணவர்களுக்கு உதவிட நினைத்தார். அரசு தொடக்கப்பள்ளியான அதில் பயிலும் ஏழை சிறுவர்கள் உண்ண உணவின்றி வீடுகளில் தவித்தனர். அதனால் மனம் கலங்கிய தலைமை ஆசிரியை கண்ணகி, தனது சக ஊழியர் பரமேஷ்வரி வரதராஜன் உடன் இணைந்து 41 குடும்பங்களுக்கு தலா 1000 ரூபாய் வழங்க முடிவெடுத்தார்.
“இந்த லாக்டவுன் காரணமாக மக்கள் எப்படி கஷ்டப்படுகின்றனர் என்று நான் அறிவேன். அதிலும் என் பள்ளியில் பயிலும் கூலித்தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உணவு இன்றி தவித்தனர். அப்போது என் மகன் கொடுத்த ஐடியா தான் அவர்களுக்கு உதவுவது. சக ஆசிரியர் ஒருவரிடம் ஆலோசித்தேன். அவரும் சம்மதித்தார். நான் 36ஆயிரம் ரூபாய் அளித்தேன், அவர் 5ஆயிரம் கொடுத்தார். என் மாணவ-மாணவியர்களின் வீட்டுக்குச் சென்று அந்த பணத்தைக் கொடுத்தோம்,” என்றார் கண்ணகி.
இந்த ஆசிரியர்கள் வீடு வீடாகச் சென்று அவர்களின் நலம் விசாரித்து, அவர்களுக்குத் தேவையானவற்றை கொடுத்து, சுத்தம், ஆரோக்கியம் பற்றியும் விளக்கிவிட்டு வந்தனர். கொரோனா தொற்று பற்றியும் விளக்கிய ஆசிரியர்கள் அவர்களுக்கு பண உதவியையும் செய்தனர்.
“இது எதிர்பாராதது. நாங்கள் மிகவும் கஷ்டத்தில் இருந்தோம். உதவியை நாடி காத்திருந்தோம். அப்போது ஆசிரியர்களின் இந்த உதவி எங்களுக்கு பெரிதும் உதவியது,” என்று வேம்பக்குடி கிராமத்தைச் சேர்ந்த இளவரசன் கூறினார்.
தங்களைவிட தங்கள் குழந்தைகள் பசியில் தவித்தபோது செய்வதரியாது இருந்த நேரத்தில் ஆசிரியர்களின் இந்த மனிதநேயச் செயல் மறக்கமுடியாதது என்கின்றனர்.
கட்டுரை: Think Change India