கிரிப்டோகரன்சியால் 18 வயதில் கோடீஸ்வரர் ஆகி; இன்று மில்லியன் டாலர்களை இழந்த யூடியூபர்!
18 வயதிலேயே பிட்காயின் மற்றும் கிரிப்டோ கரன்சி முதலீடுகள் மூலமாக ஜெர்மனியின் மிகவும் பிரபலமான யூடியூபர்களில் ஒருவராக மாறிய இவர் 22 வயதில் செய்த தவறால் மில்லியன் டாலர்கள் கணக்கிலான பணத்தை இழந்துள்ளார்.
18 வயதிலேயே பிட்காயின் மற்றும் கிரிப்டோ கரன்சி முதலீடுகள் மூலமாக ஜெர்மனியின் மிகவும் பிரபலமான யூடியூபர்களில் ஒருவராக மாறிய இவர், 22 வயதில் செய்த தவறால் மில்லியன் டாலர்கள் கணக்கிலான பணத்தை இழந்துள்ளார்.
ஜெர்மனியின் மிகவும் பிரபலமான கிரிப்டோ யூடியூபர்களில் ஒருவரான கியாராஷ் ஹொசைன்போர் (Kiarash Hossainpour) பிட்காயின் மற்றும் கிரிப்டோ கரன்சி முதலீடுகள் மூலமாக 18 வயதிலேயே கோடீஸ்வரரானவர். தற்போது இவரை இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப்பில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.
கிரிப்டோ முதலீட்டால் கோடீஸ்வரர் ஆகி, பல மில்லியனை இழந்தது எப்படி?
எந்த கிரிப்டோ கரன்சி முதலீடுகள் கியாராஷை இளம் வயதிலேயே கோடீஸ்வரராக மாற்றியதோ, அதே க்ரிப்டோ முதலீடுகள் மூலமாக தற்போது அகல பாதாளத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். சமீபத்தில் இவரது கிரிப்டோ கரன்சி முதலீடுகள் 60 சதவீதம் வரை சரிந்துள்ளது. இதனால் தனது 18 வயதில் சம்பாதித்த மில்லியன் கணக்கான டாலர்களை 22 வயதில் இழந்துள்ளார்.
இதற்குக் காரணம் அவர் டெர்ரா லூனா (Terra Luna) என்ற கிரிப்டோ கரன்சியில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளார். மே 2022ல் லூனா அதன் மதிப்பில் 99% க்கும் அதிகமாக சரிந்ததால், மில்லியன் கணக்கில் பணத்தை இழந்துள்ளார்.
டெர்ரா லூனா என்பது உலக அளவில் பிரபலமாக உள்ள கிரிப்டோகரன்சிகளில் ஒன்று. ஏப்ரல் மாதம் வரை 120 ரூபாய் வரை மதிப்புமிக்கதாக இருந்தது, மே மாதத்தில் ஒரு ரூபாய் என்ற அளவுக்கு சரிந்தது.
இதுகுறித்து கியாராஷ் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில்,
"நான் இன்னும் சற்று கவனமாக இருந்திருக்க வேண்டும், நான் தவறு செய்துவிட்டேன். நீங்கள் எப்போதும் சரியாக இருக்க முடியாது, துரதிர்ஷ்டவசமாக, நீங்கள் கணிக்க முடியாத சில விஷயங்கள் உள்ளன. எதிர்பாராதவிதமாக நடந்த சம்பவத்தால் இவ்வளவு பெரிய தொகையை இழந்ததாலும் எனக்கு எவ்வித பாதிப்பும் இல்லை,” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், எந்த சூழ்நிலையிலும் மீதமுள்ள பிட்காயின்களை விற்க மாட்டேன் எனத் தெரிவித்துள்ள அவர், 14 வயதில் கிரிப்டோ முதலீட்டில் கால் வைத்த போது தனக்கிருந்த உணர்வு பணத்தை இழந்த பிறகும் தொடர்வதாகத் தெரிவித்துள்ளார்.
சுயமான கிரிப்டோ வர்த்தகர்
22 வயதாகும் கியாராஷ், கிரிப்டோகரன்சியைப் பற்றி தனக்குத்தானே கற்றுக்கொண்டு வர்த்தகரானார். இவர் 13 வயதில் தனது முதல் யூடியூப் சேனலைத் தொடங்கினார். அவரது தற்போதைய இழப்புகள் அவரை அதிகம் பாதித்திருக்கும், ஆனால் அதிர்ஷ்டவசமாக, அவர் YouTube கணக்கின் வருமானம் மற்றும் பிற வருமானங்களும் இருப்பதால் இந்த சறுக்கலை சமாளித்துவிடுவார் என்று தெரிகிறது.
”நான் பீதி அடையக்கூடாது என்ற மந்திரத்தை பின்பற்றுகிறேன், அதனால், என் எழுச்சி மற்றும் வீழ்ச்சியை வாழ்க்கை விளையாட்டின் ஒரு பகுதியாக கருதுகிறேன்," என்று கியாராஷ் கூறுகிறார்.
ஒரு சுய முதலீட்டாளராக தன்னை நிலைநாட்டிக்கொண்டிருக்கும் கியாராஷ், இளம் வயதில் எப்படி பணத்தை சம்பாதிக்க வழியை கண்டுபிடித்தாரோ அதே போல், இந்த இழப்பில் இருந்து மீண்டு வருவதில் வல்லவராகத்தான் இருப்பார் எனச் சொல்லப்படுகிறது.
தகவல் உதவி: இந்தியா டைம்ஸ் | தமிழில்: கனிமொழி