தமிழகத்தை விட அதிகம்: சட்டசபைத் தேர்தலில் கேரளா நிலவரம்!
கடுமையான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் ஆர்வத்தை வெளிப்படுத்திய மக்கள்!
தமிழகத்தை போலவே நேற்று கேரளத்திலும் சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி (யு.டி.எஃப்) இடையே இரு முனை போட்டி நிலவினாலும், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் நிலையை வலுவாக நிறுவிட இந்த தேர்தலை எதிர்கொண்டன.
கேரளத்தில் 2.74 கோடி பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர், இதில் 1.3 கோடி ஆண்கள், 1.4 கோடி பெண்கள் மற்றும் 290 திருநங்கைகள் வாக்காளர்கள் உள்ளனர்.
மாநிலத்தில் 140 சட்டமன்றத் தொகுதிகளில் இந்த முறை 957 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சிபிஐ (எம்) தலைமையிலான இடது ஜனநாயக முன்னணிக்கு முதலமைச்சர் பினராயி விஜயன், சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா, தேவஸ்வம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், மின் அமைச்சர் எம்.எம்.மணி மற்றும் உயர் கல்வி அமைச்சர் கே.டி.ஜலீல் ஆகியோர் வேட்பாளர்களாக உள்ளனர்.
ஐக்கிய ஜனநாயக முன்னணி எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, பி.கே.குன்ஹாலிக்குட்டி, மூத்த தலைவர்கள் கே.முரளீதரன் (எம்.பி., திருவஞ்சூர்) உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். பாஜகவைப் பொறுத்தவரை, முக்கிய வேட்பாளர்கள் மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன், கட்சியின் மாநில செயலாளர் சோபா சுரேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவரும் முன்னாள் மிசோரம் ஆளுநருமான கும்மனம் ராஜசேகரன், மெட்ரோமேன் இ.ஸ்ரீதரன் மற்றும் நடிகர் சுரேஷ் கோபி ஆகியோர் களம் கண்டனர்.
அதன்படி, நேற்று காலை 7 மணிக்கே வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை கடைசி மணி நேரம் COVID-19 நோயாளிகளுக்கும் தனிமைப்படுத்தப் பட்டவர்களுக்கும் ஒதுக்கப்பட்டது.
கேரளாவின் சில பகுதிகளில் COVID-19 தொற்றுநோய், கடுமையான வெப்பம் மற்றும் பலத்த மழை இருந்தபோதிலும், வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். இதனால் மதியம் 12 அளவிலேயே அங்கு 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குப்பதிவானது. ஆனால் போக, போக கூட்டம் குறைந்ததது.
சில வன்முறை சம்பவங்கள், வேட்பாளர்கள் வாக்குச் சாவடிகளில் நுழைவது மற்றும் போலி வாக்குகள் ஆகியவற்றைத் தவிர்த்து வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்தது.
தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, செவ்வாய்க்கிழமை மாலை 6.55 மணி வரை முதற்கட்ட மதிப்பீட்டின்படி மாநிலத்தில் மொத்தம் 74.02% வாக்குகள் பதிவாகியுள்ளன.
இது 2016ல் நடந்த முந்தைய சட்டமன்றத் தேர்தலை விட சற்றே குறைவு. 2016ல் ஒட்டுமொத்தமாக 77.35% வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது. நேற்று அதிகபட்சமாக கோழிக்கோடு மாவட்டத்தில் 78.14% வாக்குகளும், பத்தினம் திட்டா மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 66.94% ஆக வாக்குகளும் பதிவானது.
நேற்று தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் விகிதம் அடிப்படையில், கேரளா சற்று முன்னிலையில் உள்ளது என்றே சொல்லவேண்டும். 7 மணி நிலவரப்படி, தமிழகத்தில் மொத்தம் 71.79% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.