பாலியல் தொந்தரவுக்கு ஆளான பெண்ணை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய கொல்கத்தா பெண்!
நிலஞ்சனா சாட்டர்ஜி பாலியல் தொந்தரவிற்கு ஆளான பெண்ணைக் காப்பாற்றியபோது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கொல்கத்தாவில் வசிப்பவர் 47 வயது நிலஞ்சனா சாட்டர்ஜி. சமீபத்தில் இவரது காலில் மோசமாக அடிபட்டது. எலும்பு முறிவுகூட ஏற்பட்டது. ஆனால் இது விபத்தினால் ஏற்பட்டதல்ல.
இவர் தனது கணவர் தீப் சத்பதி, மகள் ஷ்ரேயாசி சாட்டர்ஜி ஆகியோருடன் சமூக நிகழ்வு ஒன்றிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிகொண்டிருந்தார்.
தெற்கு கொல்கத்தாவின் அனந்தாபூர் பகுதியில் ஒரு காரில் இருந்து பெண் ஒருவரின் கூக்குரல் நிலஞ்சனாவிற்கு கேட்டுள்ளது. இவர்கள் அந்தக் காரின் முன்னே சென்று தங்கள் காரை நிறுத்தியுள்ளனர்.
நிலஞ்சனா அந்தப் பெண்ணிற்கு உதவ முற்பட்டார். அப்போது கூக்குரலிட்ட அந்தப் பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்த அந்த நபர் நிலஞ்சனாவின் காலில் காரை ஏற்றிவிட்டு தப்பித்து விட்டார். அவரது காலில் படுகாயம் ஏற்பட்டது. எலும்பு முறிந்து போனது. உடனே அருகிலிருந்த மருத்துவமனைக்கு நிலஞ்சனா அழைத்து செல்லப்பட்டார்.
கடுமையாக தாக்கப்பட்டு பாலியல் தொந்தரவுக்கு ஆளான அந்த 31 வயது பெண் அந்த நபரின் மீது புகாரளித்தார். அபிஷேக் குமார் பாண்டே என்ற அந்த நபர் கைது செய்யப்பட்டார். அந்தப் பெண்ணுக்கும் காயங்கள் ஏற்பட்டிருந்தது. தையல் போடப்பட்டது.
நிலஞ்சனாவின் செயலை கொல்கத்தாவாசிகள் பாராட்டியுள்ளனர். இவருக்கு மாநில அரசாங்கம் தேவையான உதவிகள் வழங்கும் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
“மற்றொரு பெண்ணைக் காப்பாற்ற முயன்ற இந்த பெண்ணுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இவர் ரூபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது மருத்துவச் செலவுகளை மாநில அரசாங்கம் ஏற்கும்,” என்று மம்தா பானர்ஜி முதலமைச்சர் இல்லத்தில் இருந்து அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக ‘தி டெலிகிராஃப் இந்தியா’ குறிப்பிட்டுள்ளது.
மேலும் “அவருக்கு உதவ நாங்கள் இருக்கிறோம். காவல்துறை தேவையான நடவடிக்கைகள் எடுக்கும்,” என்றும் தெரிவித்துள்ளார்.
நிலஞ்சனாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் வாக்கர் உதவியுடன் நடக்கத் தொடங்கியிருப்பதாகவும் அவரது மகள் ஷ்ரேயாசி ’தி பெட்டர் இந்தியா’ இடம் தெரிவித்துள்ளார்.
“15-18 வாரங்களில் குணமடைந்துவிடுவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்,” என்றார் ஷ்ரேயாசி.
தனது அம்மா மிகப்பெரிய முன்னுதாரணமாகவும் உந்துதலாகவும் இருப்பதாக ஷ்ரேயாசி தெரிவிக்கிறார்.
பரிச்சயமில்லாதவர்களுக்கு நிலஞ்சனா உதவுவது புதிதல்ல என்றும் இனியும் தொடர்ந்து உதவுவார் என்றும் அவரது மகள் ஷ்ரேயாசி தெரிவிக்கிறார்.
கட்டுரை: THINK CHANGE INDIA