தொடங்கிய ஒன்றரை ஆண்டுகளில் 1 கோடி வருவாய் ஈட்டிய ஜெய்ப்பூர் வெள்ளி நகை தயாரிப்பு நிறுவனம்!
ஆபரணங்கள் அணிவதில் அதே பாரம்பரியத்தைத் தான் மக்கள் இன்றளவும் பின்பற்றி வருகின்றனர். ஆனால், நாளுக்குநாள் எகிறி வரும் தங்கத்தின் விலை உயர்வால் தற்போது மக்களின் கவனம் விதவிதமான வெள்ளி நகைகளின் மேல் திரும்பியுள்ளது.
இந்தியாவில் பண்டைக்காலம் முதலே மக்கள் தங்கள் அங்கங்களில் விதவிதமான ஆபரணங்களை அணிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதில், ஆண்களுக்கான நகைகள், பெண்களுக்கான நகைகள் என பல்வேறு வகைகளும் இருந்துள்ளன.
ஆபரணங்கள் அணிவதில் அதே பாரம்பரியத்தைத்தான் மக்கள் இன்றளவும் பின்பற்றி வருகின்றனர். ஆனால், நாளுக்குநாள் எகிறி வரும் தங்கத்தின் விலை உயர்வால் தற்போது மக்களின் கவனம் விதவிதமான வெள்ளி நகைகளின் மேல் திரும்பியுள்ளது.
நவநாகரீக உலகில் ஆண், பெண் என இருபாலரும் எவ்வித வேறுபாடும் இல்லாமல் காதில் போடும் கம்மல், கைகளில் அணியும் வளையல், சங்கிலி என பல்வேறு விதமான வெள்ளி பேஷன் நகைகளை அணிந்து மகிழ்ச்சியுடன் வலம் வருகின்றனர்.
நகைத் தயாரிப்புத் தொழில் என்பது ஓர் ஆதி காலத் தொழில். இத்தொழிலில் இந்தியாவில் மட்டும் சுமார் 3,00,000-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் பெரும்பாலானவர்கள் சிறு வணிகர்கள் என இந்திய பிராண்ட் ஈக்விட்டி என்ற அறக்கட்டளையின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
இந்த நகைத் தொழில் எனும் கடலில் ஓர் சிறு துளியாக 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரிஷப் கோத்தாரி, தனது வெள்ளி நகை வியாபாரமான ‘தாலிஸ்மேன்’ ‘Talisman'- ஐ தொடங்கினார்.
ரிஷப் இத்தாலிய நகைத் தயாரிப்பு துறையில் 10 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவசாலி. மேலும் இவரது தந்தை சுதிர் கோத்தாரி நகை வர்த்தகத் துறையில் ஒரு முக்கியஸ்தரான ஜெம் இந்தியா எக்ஸ்போர்ட்ஸின் இணை நிறுவனர். எனவே அவரும் ரிஷபுக்கு பயிற்சி அளித்தார். இந்த அனுபவமும், பயிற்சியும் தாலிஸ்மேனை சட்டென ஓர் படி மேலே உயர்த்தியது.
தாலிஸ்மேன் நகரங்களில் வாழும் 22 முதல் 35 வயதுக்குள்பட்ட பெண்களை குறிவைத்தது. ஓர் தெளிவான நோக்கத்துடன் உயர் தரமான, மலிவு விலையில் (ரூ.1,500 - ரூ .3,000 வரை) காதணிகள், வளையல்கள் மற்றும் மோதிரங்கள் போன்றவை தயாரித்து விற்பனை செய்யப்பட்டன.
மேலும், நகைகளை வடிவமைக்க 22 திறமையான நகைக் கைவினைஞர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். தாலிஸ்மேன் தனது தயாரிப்புகளை இணையதளத்தில் விற்பனை செய்தது. இந்தத் தெளிவான திட்டமிடலின் காரணமாக தாலிஸ்மேன் தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே ரூ.5 லட்சம் மாத விற்பனையை பதிவு செய்தது.
இதுகுறித்து தாலிஸ்மேன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ரிஷப் கோத்தாரி அளித்த பேட்டியில் கூறியதாவது,
“நாங்கள் ஒரு மாதத்துக்கு ரூ .10 லட்சத்தை விற்பனை இலக்காகக் கொண்டு செயல்பட்டோம். எங்களுக்கு பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி, மும்பை, ஜெய்ப்பூர், சென்னை மற்றும் அகமதாபாத் போன்ற நகரங்களில் முக்கியமான வாடிக்கையாளர் தளம் அமைந்துள்ளது.
இதுவரை மலிவான மற்றும் குறைந்த தரத்திலான நகைகளால் இந்திய சந்தை நிறைந்திருந்தது கண்டு வேதனை அடைந்தேன். எனவே, சர்வதேச தரத்திலான பேஷன் நகைகளை தயாரித்து விற்க முடிவெடுத்தேன்.
நிறுவனத்தின் இணை நிறுவனர் சம்பவ் கோத்தாரியுடன் சேர்ந்து விலங்குகள், பெயரின் முதலெழுத்துகள் போன்ற பல்வேறு 3 டி வடிவிலான 500-க்கும் மேற்பட்ட தனித்துவமான வடிவமைப்புகளைப் புரிந்துகொள்வதற்கும் கருத்தியல் செய்வதற்கும் ஓர் ஆண்டு செலவிட்டோம். தொடக்கத்தில் இது சற்று கடினமான பணியாக இருந்தது. ஆனால் எங்கள் முக்கிய சித்தாந்தம் இளமை, பேஷன் மற்றும் அழகான நகைகளை உருவாக்குவதாகும் என்கிறார்.
இவர்களது ஜெய்ப்பூரில் உள்ள வடிவமைப்பு தலைமையகத்தில் ஒவ்வொரு நகைத் துண்டுகளும் உருவாக்கப்படுகின்றன. இவற்றுக்கான மூலப்பொருள்கள் ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் சீனாவில் உள்ள சுரங்கங்கள், இத்தாலியில் இருந்து பற்சிப்பி போன்றவற்றில் இருந்து பெறப்படுகின்றன.
மேலும், இவர்களுக்கு ஹாங்காங்கில் ஒரு வடிவமைப்பு ஸ்டுடியோ உள்ளது. இதில் உள்ள 3 டி மாடலிங் மற்றும் அச்சிடுதலுக்கான அதிநவீன இயந்திரங்கள் உள்ளன. தயாரிப்பு மேம்பாட்டுக்காக அங்கீகரிக்கப்பட்ட நகை வடிவமைப்பு மென்பொருளையும் இவர்கள் பயன்படுத்துகின்றனர்.
தாலிஸ்மேன் என்றால் ‘கவர்ச்சி’ என்று அர்த்தம் எனக் கூறும் ரிஷப் கோத்தாரி, நாங்கள் வழங்கும் கவர்ச்சியான பேஷன் நகைகள் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் அவர்களுக்கென்றே தனிப்பட்ட முறையில் தயாரித்ததைப் போன்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.
மேலும், எங்கள் வாடிக்கையாளர்களை அடைய டிஜிட்டல் தளங்களையும் நாங்கள் முழுவீச்சில் பயன்படுத்தினோம் குறிப்பாக இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் யூ-டியூப் போன்ற தளங்களை ப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களைக் கவர பயன்படுத்தினோம். எங்களது 10 வினாடி வீடியோக்கள் எங்களின் தயாரிப்பை விளக்குவதில், பிராண்டை வாடிக்கையாளரின் மனதில் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்கிறார்.
மேலும் பேஷன் நகைகளில் தரத்தை பராமரிப்பது மிகப் பெரிய சவாலாகும். அதிலும் குறிப்பாக சர்வதேச தரத்துக்கு உருவாக்கவேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பாகும்.
தூய ஸ்டெர்லிங் வெள்ளி நகைகள் மற்றும் வெள்ளி பூசப்பட்ட நகைகளுக்கு இடையிலான வேறுபாடுகள் குறித்து நாங்கள் வாங்குபவருக்கு அறிவுறுத்துகிறோம். ஒருவர் தாலிஸ்மேன் நகைகளை வாங்கும்போது, தூய ஸ்டெர்லிங் வெள்ளி தரத்தை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். விற்பனை எங்களது இலக்கு அல்ல. வாங்குபவர்களின் கண்ணோட்டத்தில் எங்கள் பிராண்டில் நம்பிக்கையை வளர்க்கவே நாங்கள் விரும்புகிறோம் என்கிறார் அவர்.
தற்போது, பெண்களுக்கான நகைகளில் மட்டும் கவனம் செலுத்தி வரும் நாங்கள், மாதந்தோறும் 20 தனித்துவமான வடிவமைப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். மேலும், ஆண்களுக்கான வளையல்கள், மோதிரங்கள் போன்றவற்றை உருவாக்குவதும் எங்களது திட்டமாகும்.
மேலும், இவர்கள் 2020ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் மற்றும் ஓமன் போன்ற நாடுகளின் சந்தைகளில் கவனம் செலுத்தி, உலகளவில் விற்பனையைத் தொடங்குவதையே லட்சியமாகக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலத்தில் ரிஷப் மன்சூர் | தமிழில் திவ்யாதரன்