சின்ன கல்லு பெத்த லாபம்: சிறிய முதலீட்டோடு பெரிய கனவுகளை அடைந்தவர்கள்!
வெறும் 20ஆயிரம் ரூபாய் முதலீட்டில் நிறுவனம் தொடங்கி கோடிகளில் வணிகம் செய்யும் 5 இந்திய தொழில் முனைவர்களின் கதை இதோ...
புதிதாக தொழில்முனையும் இந்தியர்களிடம் எப்பொழுதும் அதிகமான யோசனைகள் இருக்கும். ஆனால் அவர்களுக்கு நிறுவனம் துவங்கத் தேவையான நிதி மிகவும் குறைவாக இருக்கும்.
இந்தியாவில் தொழில் முனையும் ஒவ்வொரு மனிதனும் சந்திக்கும் மாபெரும் சவால் நிதி ஆகும். டி&பி இந்தியா ஆய்வின் படி, வெறும் 4% சிறு தொழில் முனைவோர்களுக்கு மட்டுமே தேவையான அளவு நிதி கிடைக்கின்றது என்பதே. அது மட்டும் அல்ல, தொழில் முனைவோருக்கு வங்கிகளில் கடனும் கிடைப்பது அரிதாகி வருகிறது.
அவர்கள் வாழ்நாள் சேமிப்பு அல்லது குடும்பம் மற்றும் நண்பர்களிடம் கடன் பெற்று அதை நம்பியே முதல் முறையாக தொழிலைத் துவங்க வேண்டியுள்ளது. பல தருணங்களில் 20,000 ரூபாய் கூட திரட்ட முடியாமல் தவித்த நிகழ்வுகளும் உண்டு.
கிடைக்கும் முதல் குறைவாக இருந்தாலும், இவர்கள் கனவுகளுக்கு எல்லைகள் இருப்பதில்லை. வெற்றி பெற வேண்டும் என்ற வெறி மட்டுமே பெரிதாக இருக்கிறது. அப்படிப்பட்ட 5 பேரின் கதை இதோ :
ராகுல் ஜெயின் - eCraftIndia.com
ஜெய்ப்பூரில் பிறந்து வளர்ந்த ராகுல் ஜெயினிற்கு எப்பொழுதும் கைவினைப் பொருட்கள் என்றால் அலாதி பிரியம். ஆனால் மும்பையில் ஒரு மாலுக்குள் அவர் நுளைந்த பொழுது அங்கிருந்த ராஜஸ்தான் கைவினைப் பொருட்கள் விலை அதிகமாக விற்கப்பட்டன என்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இந்த அனுபவம், ராகுலை சொந்தமாக ஒரு வணிக வலைத்தளத்தை உருவாக்கி, கைவினைக் கலைஞர்களோடு இணைந்து சரியான விலையில் பொருட்களை விற்கத் தூண்டியது. இதன் மூலம் இடைத்தரகர்கள் தவிர்க்கப் பட்டனர்.
2014ல், ராகுல் அன்கித் அகர்வால், பவன் கோயல் ஆகியோர் இணைந்து, வெறும் 20,000 முதலீட்டில் eCraftIndia.com என்ற வலைத்தளத்தை துவக்கினர். மிகவும் சிறிய வணிக வலைத்தளமாகத் துவங்கிய இதில், விற்பனையான முதல் பொருள் மரத்தால் ஆன ஒரு யானை சிலையாகும். அதன் விலை 250 ரூபாய்.
வருடங்கள் உருண்டோட, குஜராத், மஹாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியபிரதேஷ், டெல்லி, உத்தர்பிரதேஷ் பஞ்சாப் ஆகிய இடங்களில் இருந்து கைவினைக் கலைஞர்கள் இதில் இணைந்தனர். சொந்தமாக உற்பத்தி சாலையை eCraftIndia.com துவக்கியது.
இன்று ராகுலின் நிறுவனத்தில் 9000 அதிகமானப் பொருட்கள் உள்ளன. மேலும் இந்தியாவின் மிகப்பெரிய கைவினை வணிக வலைத்தளங்களில் இதுவும் ஒன்று. வருடத்தில் 12 கோடி ரூபாய் விற்றுமுதல் காண்கின்றது இவரது நிறுவனம்.
முழு கட்டுரையை இங்கு படிக்கவும்.
ஆர் எஸ் ஷான்பாக் - Valuepoint Systems
தொழில்முனையும் முன்பு ஆர்எஸ் ஷன்பக் ஒரு சிறு கிராமத்தில் இருந்து வந்த பொறியாளர் மட்டுமே. 1991 ஆம் ஆண்டு அவரிடம் ஒருங்கிணைந்த சிஸ்டம்ஸ் நிறுவனத்தைத் துவக்க வெறும் 10,000 மட்டுமே இருந்தது. அதை வைத்து தனது கனவை துரத்தத் துவங்கினார்.
இந்த நிறுவனத்தைத் துவக்க ஒரு காரணம், கிராமத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கவேண்டும, அதன் மூலம் வேலைக்காக அவர்கள் சொந்த ஊரை விட்டு வெளியேறும் நிலையை தவிர்க்க வேண்டும் என்பதே.
நிறுவனத்தை பெங்களூருவில் துவங்கினாலும், சிறு கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்த இளைஞர்களை வேலைக்கு எடுக்கத் துவங்கினார். அவர்களுக்கு தொழில்நுட்பம் மற்றும் சேவைகளில் பயிற்சி கொடுத்தார். ஒரு கிராமத்தில் வேல்யூ பாயிண்ட் நிறுவனம் ஒரு மையம் அமைத்து அங்குள்ளவர்களை வேலைக்கு அமர்த்தும். அவர்கள் மூலம் தேவையான வேலைகளை முடித்துக் கொள்ளும்.
ஆனால் ஐடி நிறுவன அலை துவங்கியபொழுது, அந்தத் துறைக்கு தேவையான கட்டமைப்பு சேவைகளை, பெரும் நிறுவனங்களுக்கு வழங்கத் துவங்கியது. இப்பொழுது Valuepoint Systems ஐடி கட்டமைப்புத் துறையில் தெற்கு ஆசியாவில் முன்னணியில் உள்ள ஒரு நிறுவனம் ஆகும்.
ஃபார்ச்சூன் 500 நிறுவங்களின் 73 நிறுவனங்களுக்கு இவர்கள் சேவை அளித்து வருகின்றனர். இந்த வருடம் 600 கோடி ரூபாய் அளவிற்கு விற்றுமுதல் இருக்கும் என்று எதிர்ப் பார்க்கப்படுகின்றது.
முழு கட்டுரையை இங்கு படிக்கவும்.
புனீத் கன்சால் - ’ரோல்ஸ் மேனியா’
2009 ஆம் ஆண்டில், 18 வயதான புனீத் கன்சால் 'Rolls Mania' துவக்கினார். தனது நண்பனிடம் கடனாக வாங்கிய 20,000 ரூபாயில் ஒரே ஒரு சமையல் கலைஞர் கொண்டு அதைத் துவக்கினார். ஆரம்பத்தில் மகற்பட்டா நகரத்தில் ஒரு சிறிய மேஜை அளவு இருந்த கடையில் பிரபல ஸ்னாக் ஆன ‘கட்டி ரோல்’ விற்பனையை துவக்கினார்.
இவ்வாறு கடை நடந்து வர, வாடிக்கையாளர்களாக வந்த ககன் சியல் மற்றும் ஷுக்ப்ரீத் சியல் ஆகியோர் நண்பர்கள் ஆனார்கள். புனீத்தின் வணிகத்தில் இருந்த வாய்ப்புகளை அவர்கள் கண்டபொழுது அவர்கள் புனீத்தோடு இணைந்து ரோல்ஸ் மேனியாவை பதிவு செய்து அதன் இரண்டாவது மையத்தைத் துவக்கினார்கள்.
மிகவும் பொறுமையான துவக்கம் தான். பல நேரங்களில் பொருளைக் கொண்டு சென்று கொடுக்க வேண்டியவர்கள் வராத நிலையில் இவர்கள் மூவருமே அதனைச் சென்று டெலிவரி செய்ய ஆரம்பித்தனர். சில வருடங்களிலேயே ரோல்ஸ் மேனியா பிரபலம் அடைந்து, நாடுமுழுவதும் செல்வதற்கான நேரமும் வந்தது.
பிரான்ச்சைஸி முறையில் மேலும் பல இடங்களில் கடைகள் திறக்க புனீத் அனுமதிக்க, தற்பொழுது 30 நகரங்களில் கிளை பரப்பியுள்ளது ரோல்ஸ் மேனியா. நாடுமுழுவதும் 100 கடைகள், ஒரு நாளில் 12000 ரோல்ஸ் விற்பனை என ஒரு வருடத்தில் 35 கோடி ரூபாய் அளவில் வணிகம் செய்கின்றது ரோல்ஸ் மேனியா.
முழு கட்டுரையை இங்கு படிக்கவும்.
நிதின் கபூர் - Indian Beautiful Art
தனியாக ஒரு நிறுவனம் துவங்க வேண்டும் என்ற எண்ணம் உதித்த பொழுது நிதின் கபூர் ஒரு தனியார் வங்கியிலும், அமித் கபூர் இ-பேயிலும் வேலை செய்து கொண்டிருந்தனர். ஜவுளித்துறையில் வீணாகப்போகும் கழிவுகள் அவர்கள் கண்ணில் பட்டது. மேலும் மதிப்புமிக்க நீரையும் அவர்கள் அதிகம் பயன்படுத்துவது தெரிந்தது.
இதை மனதில் வைத்து 10,000 ரூபாய் முதலீட்டில் ஒரு ஆன்லைன் வணிக நிறுவனத்தை துவக்கினர். இந்த நிறுவனம் "ஜஸ்ட் இன் டைம்" என்று சரக்கு மேலாண்மை மாதிரியை பின்பற்றியது. இவர்கள் நிறுவும் ’இந்தியன் பியூட்டிபுல் ஆர்ட்’, வாடிக்கையாளரிடம் இருந்து ஆர்டர் வந்த பின்பே ஆடைகள் தயாரிக்கப்படுவதை உறுதி செய்தது.
நிதின் விலையில் இருந்து, பொருளை அனுப்பும் வரை அனைத்தும் 48 மணிநேரத்தில் நடப்பதையும், தேவையான இயற்கை வளங்கள் வீணாகாமல் இருப்பதையும் உறுதி செய்தார்.
இந்தியா முழுவதில் இருந்தும் கம்பத், அகமதாபாத், ஜெய்ப்பூர், மீரட், கொல்கத்தா, குர்ஜா, மொராதாபாத், லூதியானா, அம்ரித்சர், மும்பை, நியூ டெல்லி, ஹைதராபாத், மற்றும் லக்னோ ஆகிய இடங்களில் இருந்து தங்களுக்குத் தேவையான மூலப்பொருள்களை வாங்கினர். இவற்றை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் விற்பனை செய்கின்றனர்.
ஆன்லைன் வணிகத்துறையில் இன்று இந்தியன் பியூட்டிபுல் ஆர்ட், இந்திய பொருட்களை உலகளவில் விற்பனை செய்வதில் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனத்தில் ஒரு வருடத்தில் 30 கோடி ரூபாய் அளவு விற்றுமுதல் நிகழ்கின்றது.
முழுக்கட்டுரையை இங்கே படிக்கவும் :
சுபைர் ரஹ்மான் - The Fashion Factory
2014ம் ஆண்டு மின் பொறியாளரான சுபைர் ரஹ்மான் திருப்பூரில் சிசிடிவி ஆப்பரேட்டராக பணியாற்றி வந்தார். ஆனால் 21 வயதாகி இருந்த அவருக்கு, தன்னுடைய சொந்த நிறுவனத்தை ஒரு நாள் துவங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது. ஒரு நாள் ஆன்லைன் வணிகம் செய்யும் ஒரு நிறுவனத்தில் சிசிடிவி அமைக்க அவருக்கு ஒரு ஆர்டர் வந்தது.
அந்த நிறுவனத்தின் மேலாளரிடம் பேசி, எவ்வாறு பொருட்களை ஆன்லைனில் வாங்கி விற்று நிறுவனம் பணம் சம்பாதிக்கின்றது என்பதை புரிந்து கொண்டார். உற்பத்திக்காக அதிகம் செலவு செய்ய வேண்டாம் என்பதால், இந்தத் துறை அவருக்கு மிகவும் பிடித்ததாக அமைந்தது.
இதை மனதில் வைத்து, வெறும் 10,000 முதலீட்டில் ’தி பேஷன் பாக்ட்ரி’யை துவக்கினார். திருப்பூரில் இருந்து ஜவுளிகளை வாங்கி ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகியவற்றில் காம்போவாக பொருட்களை விற்கத் துவங்கினார்.
தனித்தனியாக விற்பதை விடவும், காம்போவாக விற்பனை செய்யும் பொழுது, ஆடைகளின் விலை குறைவாக இருந்தது. ஒரு விற்பனையில் இருந்து குறைவான லாபமே வந்தாலும், இவரின் குறைவான விலைகள் அதிக கவனம் பெற்றது. அதன் மூலம் அதிக ஆர்டர்கள் கிடைத்தது.
எந்த அளவிற்கு சுபைரின் முயற்சிக்கு பலன் என்பதை, ஒரு நாளில் 200 முதல் 300 ஆர்டர்கள் அவர் நிறுவனத்திற்கு கிடைப்பதை வைத்து நீங்கள் அறியலாம். மேலும் அமேசானில் மட்டுமே விற்பனை செய்ய தற்பொழுது அவர் ஒப்பந்தம் செய்துள்ளார்.
இவர் நிறுவனம் தற்பொழுது 6.5 கோடி ரூபாய் வரை ஒரு வருடத்திற்கு வருவாய் ஈட்டுகிறது. அடுத்த ஆண்டு 12 கோடி ரூபாய் அளவு வருவாய் கிடைக்கும் என லட்சியம் வைத்துள்ளார்.
முழுக்கட்டுரையை இங்கே படிக்கவும் :
ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில் : கெளதம் தவமணி