Business Idea: குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டக் கூடிய 35 வணிகங்கள்!
பல காலங்களாகவே நிதியுதவி தேடுவதே தொழில்முனைவோருக்கு பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்தக் கடினமான போராட்டத்தை எதிர்கொண்டு தங்களது திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி புதுமை படைக்கும் கனவை பலர் கைவிடுகின்றனர். சிறப்பான வணிக திட்டமானது சந்தையில் தனக்கென தனி இடத்தை பிடித்துவிட்டால் செழிக்கத் துவங்கிவிடும் என்பதை இவர்கள் உணர்வதில்லை.
உங்களது திட்டம் வாயிலாக நிறுவனமும் அதன் மூலம் மக்களும் வந்தடைவார்கள். அந்த மக்கள் உங்களுக்கான சந்தையைக் கொண்டு சேர்ப்பார்கள். ஒரு நல்ல திட்டம் சிறப்பான வணிகத்திற்கான வழிவகுக்குமே தவிர அதுவே வருவாய் ஆகாது என்பது நம் அனைவரும் அறிந்ததே. இன்று பில் கேட்ஸ், மார்க் ஸக்கர்பெர்க், எலன் மஸ்க் போன்ற உலகின் வெற்றிகரமான தொழில்முனைவோர் எவருமே சிறியளவில் செயல்படத் துவங்கி படிப்படியாகவே முன்னேறினர்.
ஃபேஸ்புக் ஹார்வர்ட் பலகலைக்கழகத்தின் தங்குமறையிலிருந்து மிகக்குறைந்த செலவிலேயே துவங்கப்பட்டது. பில் கேட்ஸ் கல்லூரிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு இரண்டாண்டுகளுக்கு பிறகு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை உருவாக்கினார்.
எனவே, வெற்றிகரமான தொழில்முனைவுக் கதைகளை நினைவுகூர்ந்தால் அத்தகைய பயணத்தை தேர்ந்தெடுக்கும் பலருக்கு பல முக்கிய படிப்பினைகள் கிடைக்கும். ஒரே ஒரு சிறப்பான திட்டம்தான் மிகப்பெரிய வணிகத்தை உருவாக்குவதற்கான ஆரம்ப புள்ளியாகும். அந்த திட்டமிடல் முறையாக இருப்பின் மிகவும் குறைவான செலவில் அதிக லாபம் ஈட்டக்கூடிய வணிகமாக மாறக்கூடும்.
நம் நாட்டின் வணிகம் சார்ந்த வரலாறை புரட்டிப்பார்த்தோமானால் ஆர்வமுள்ள தொழில்முனைவோர்களுக்கு சந்தையில் சிறப்பான வாய்ப்பு இருப்பது தெரியவரும். சிலருக்கு சந்தையை கைப்பற்றும் அளவிற்கு வணிகம் சார்ந்த புத்திக்கூர்மை இருப்பினும் ஆரம்ப கட்ட திட்டத்தை வகுக்க இயலாதவர்களாக இருப்பார்கள். வால்ட் டிஸ்னி குறிப்பிடுவது போல,
“நீங்கள் கனவு கண்டால் நிச்சயம் உங்களால் சாதிக்க முடியும்.”
ஆரம்பக் கட்ட முதலீடாக 10,000 ரூபாய் கொண்டு துவங்க சாத்தியமான சில வணிகங்கள்
இதோ உங்களுக்காக:
பயண நிறுவனம் (Travel company) : இன்று மக்கள் அதிகம் பயணிக்கின்றனர். இதனால் ஊக்கமுள்ள தொழில்முனைவோர் இந்தப் பகுதியில் செயல்படத் துவங்கினால் சிறப்புறமுடியும். ஹோஸ்ட் ஏஜென்சியுடன் இணைந்து செயல்பட்டால் அதிக பலனடையலாம்.
மொபைல் ரீசார்ஜ் கடை (Mobile Recharge shop) : பலர் ஆன்லைனில் ரீசார்ஜ் செய்து வந்தாலும் இன்று பலர் கடைகளையே நாடுகின்றனர். ஒரு சிறிய இடத்தை வாடகைக்கு எடுத்து அந்தப் பகுதியில் நெட்வொர்க் வழங்குவோருடன் இணைந்து கமிஷன் அடிப்படையில் செயல்படலாம்.
சிற்றுண்டியகம் (Fast-food shop) : உணவு பிரிவிற்கான சந்தை எப்போதும் சிறப்பாகவே இருக்கும். சிறிய அறையை வாடகைக்கு எடுத்து தகுந்த அனுமதி பெற்று துவங்கிவிடலாம். வாடகைக்கும் மூலப்பொருட்களுக்கும் செலவிட்டால் போதும்.
டியூஷன் மையம் (Tuition center) : வீட்டிலிருந்தே செயல்படலாம் என்பதால் எந்தவித செலவும் இல்லை. சமூக ஊடகங்கள் வாயிலாகவோ, துண்டு பிரசுரங்கள் வழங்கியோ, பரிந்துரைகள் மூலமாகவோ உங்கள் முயற்சி மக்களை சென்றடைய முயற்சியெடுக்க வேண்டும்.
பழச்சாறு கடை (Fruit juice shop) : தக்க அனுமதி பெற்றுவிட்டால் ஒரு கடையை வாடகைக்கு எடுத்து துவங்கிவிடலாம். மூலப்பொருட்கள், ஜூஸ் போடுவதற்கான இயந்திரம், உதவியாளர் நியமித்தால் அவருக்கான சம்பளம் ஆகியவையே இந்த வணிகத்திற்கான செலவாகும்.
தையல் பணி (Tailoring Unit) : மக்கள் தாங்களாகவே ஆடைகளை வடிவமைக்கத் துவங்கியுள்ளதால் டெய்லர்களுக்கான தேவை பல இடங்களில் அதிகரித்துள்ளது. அறை வாடகை, தையல் இயந்திரம், மின்சாரம் போன்றவை இந்த வணிகத்திற்கான செலவுகளாகும்.
ஆன்லைன் பேக்கரி (Online Bakery) : தனிப்பட்ட முறையில் மிகக்குறைந்த செலவில் ஆன்லைன் பேக்கிங் சார்ந்த வணிகத்தில் ஈடுபட்டு மூலப்பொருட்களுக்கு மட்டும் செலவிட்டு லாபம் பெறலாம்.
வலைப்பதிவு (Website): டொமெயின் பெயர் பெறுவதற்கு முதலீடு செய்து இணையம் வாயிலாக விளம்பரப்படுத்தினால் போதும்.
யூட்யூப் சானல் (Youtube Channel) : படைப்பாற்றல் திறன் கொண்டவர்களுக்கு யூட்யூப் வாயிலாக வீடியோக்களை பதிவிடலாம்.
நிகழ்ச்சி அமைப்பாளர்கள் (Event Manager) : நிகழ்ச்சிகளுக்கான இடம், ஸ்பான்சர்கள், நிகழ்ச்சிகளை திட்டமிடுதல் போன்ற ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். ஆனலைன் மார்கெட்டிங் உத்திகளை பயன்படுத்தி ப்ராண்ட் இமேஜ் உருவாக்கவேண்டும்.
திருமண ஏற்பாட்டாளர்கள் (Wedding Planner) : இந்த வணிகத்தில் ஈடுபட விரிவான வண்ணமயமான வலைதளத்தை உருவாக்கி வாடிக்கையாளர்களை ஆன்லைன் வாயிலாக அணுகலாம்.
ஆன்லைன் பாடங்கள் (E-Learning) : டொமெயின் பெயர், ஹோஸ்டிங் ஸ்பேஸ், உங்கள் பாடங்களை வெளியிடுவதற்கு டிஜிட்டல் கண்டெண்ட் நிறுவனத்திற்கு செலுத்தும் தொகை ஆகியவற்றிற்கு குறைந்த அளவு செலவிடவேண்டும்.
போட்டோகிராஃபி (Photography) : ஏற்கெனவே உங்கள் வசம் தொழில்முறை கேமரா இருக்குமானால் தனிப்பட்ட விதத்தில் ப்ராஜெக்டுகளை ஏற்றுக்கொள்ளலாம். நேரத்தை மட்டும் செலவிட்டால் போதும்.
சாலையோர புத்தகக் கடை (Street Book shop) : பயன்படுத்தப்பட்ட பழைய புத்தகங்களை வாங்கி மறு விற்பனை செய்யும் கடையை அமைத்து சரியான நபர்களின் அறிமுகம் இருந்தால் சிறப்பிக்கலாம்.
பேய் கதை எழுதலாம் (Ghost Stories) : இது முக்கிய தொழிலாக பரிந்துரைக்கமுடியாது என்றாலும் நேரத்தை செலவிட்டால் இப்படிப்பட்ட கதைகளை அதிக தொகை கொடுத்த வாங்குபவர்கள் தயாராக உள்ளனர்.
தனிநபருக்கேற்ற ஆபரணங்கள் (Jewellery Making) : பாரம்பரியமாக இதற்கான தேவை இருந்துவருவதால் உற்பத்தியாளர்களிடம் நேரடியாக மலிவு விலையில் வாங்கி அதிக லாபத்திற்கு விற்பனை செய்யலாம்.
விளம்பரங்களை உருவாக்கும் பணி (Advertising) : பல கார்ப்பரேட் நிறுவனங்கள் விளம்பரம் சார்ந்த பணியை வெளியிலிருந்து பெறுவதால் இதற்கான ஆலோசகரின் தேவை காணப்படுகிறது. உங்களது சேவைகளை விளக்கக்கூடிய வலைதளத்தை உருவாக்கி வணிக வாய்ப்புகளைப் பெறலாம்.
தேநீர்கடை (Tea Shop) : உற்பத்தியாளர்களிடமிருந்து மூலப்பொருளை கொள்முதல் செய்து தேநீர் விற்பனை செய்யலாம். கடைக்கான பெஞ்ச் மற்றும் டேபிளை வாங்க செலவிட்டால் போதுமானது.
சமூக ஊடக உத்தியியலாளர் (Social Media Strategist) : பல நிறுவனங்கள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து தங்களது செயல்பாட்டை மக்களிடையே கொண்டு சேர்க்கும் பணியில் மும்முரமாக இருப்பதால் வணிக வாய்ப்பு அதிகம் உள்ளது.
ஃபேஷன் டிசைனிங் (Fashion Desigining) : பழைய புடவைகளை புத்தம்புதிதாக தனித்துவமாக மாற்றும் பணியில் ஈடுபட்டு பலர் சிறப்பித்துள்ளனர். இவ்வாறு வடிவமைப்பிற்கான பொருட்கள் வாங்குவதற்கும் பணியிடத்திற்கும் தேவையான முதலீடு செய்யவேண்டும்.
ஆன்லைன் உடற்பயிற்சி பயிற்சியாளர்கள் (Online Exercise trainer) : இன்று ஆரோக்கியம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளபோதும் பலரால் வெளியில் சென்று வகுப்புகளில் சேர முடியவில்லை. எனவே இதற்கான பிரத்யேக இடத்திற்கு செலவிடாமல் ஆன்லைன் வாயிலாக பயிற்சியளித்து வருவாய் ஈட்டலாம்.
கிராஃபிக் டிசைனிங் (Graphic Designing) : இதற்கான பிரத்யேக வசதிகள் உங்களிடம் இருக்குமானால் உங்களது ப்ராஜெக்ட் குறித்து மக்களிடையே விளம்பரப்படுத்தினால் இந்தச் சேவைக்கான தேவையிருப்போர் உங்களை அணுகுவார்கள்.
நடனம் / இசை பள்ளி (Dance/Music School) : இதற்குத் தேவையான இடத்தை வாடகைக்கு எடுத்துக் கொள்ளவேண்டும். இது தனிநபர் திறன் சார்ந்தது என்பதால் அதிக பரிந்துரைகள் வாயிலாகவே மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.
வசனம் எழுதுதல் (Script-writer) : இதற்கான பிரத்யேக இடம் தேவையில்லாத காரணத்தால் நேரம் மட்டும் செலவிட்டால் போதும். அதே சமயம் குறிப்பிட்ட காலகெடுவிற்குள் முடிக்க வேண்டியது அவசியமாகும்.
உணவு டெலிவரி (Food Delivery) : இன்று பலர் வீட்டு உணவையே விரும்புகிறார்கள் என்றாலும் அதற்கான நேரம் செலவிட இயலாமல் பலர் சிரமப்படுகின்றனர். அன்றாடம் வீட்டில் சமைக்கும் உணவின் அளவை சற்று கூடுதலாக செய்வதன் மூலம் இந்த வணிகத்தில் ஈடுபடலாம்.
பழுதுபார்க்கும் சேவை (Repair work) : மேற்கொள்ள விரும்பும் குறிப்பிட்ட பணிக்குத் (எலக்ட்ரிஷியன், ப்ளம்பர்) தேவையான உபகரணங்களுக்கு மட்டும் செலவிடவேண்டும்.
செல்லபிராணிகள் பராமரிப்பு (Pets care) : பணி நிமித்தமாக வெளியே செல்லும் பலர் செல்லப்பிராணியை பராமரிப்பதில் சிக்கலை சந்திக்கின்றனர். யாரும் அதிகம் செயல்படாத இந்தப் பிரிவில் வணிக வாய்ப்புகள் இருப்பதால் வலைதளத்தை உருவாக்கி செயல்படத் துவங்கலாம்.
ஆய்வு சார்ந்த வணிகம் (Research) : புதிதாக அறிமுகமாகும் ஸ்டார்ட் அப்களும் சிறு நிறுவனங்களும் ஆய்வுப் பணியை தனிப்பட்ட ஆய்வாளர்களிடமிருந்து பெறுவதால் நேரடியாகவோ அல்லது உதவியாளரை நியமித்தோ சேவையளித்து வருவாய் ஈட்டலாம்.
ட்ரக் சேவை (Truck service) : ட்ரக் வாடகை, நகரின் முக்கிய பகுதிகளுக்கு ட்ரைக்கை செலுத்த ஓட்டுனருக்கான சம்பளம் போன்றவை இதிலுள்ள செலவுகளாகும்.
விளையாட்டு பயிற்சி (Sports Trainer) : குறிப்பிட்ட விளையாட்டில் தேர்ந்தவர்கள் அதை ஆர்வமாக கற்கத் துவங்குவோருக்கு பயிற்சியளிக்கலாம்.
மொழிபெயர்ப்பு சேவை (Language Translator) : உலகமயமாக்கல் காரணமாக இந்த பிரிவில் வாய்ப்புகள் அதிகம் காணப்படுகிறது. குறிப்பிட்ட மொழியை கற்பதற்கான பயிற்சிக்கு செலவிட்டு நிபுணத்துவம் பெறவேண்டியது அவசியம்.
ஆலோசனை சேவை (Consulting) : குறிப்பிட்ட துறை சார்ந்த நிபுணத்துவம் இருந்தால் அந்த துறையில் ஆலோசனை வழங்கி வருவாய் ஈட்டலாம்.
சுற்றுலா வழிகாட்டி (Tour Guide) : சுற்றுலா சார்ந்த ஏற்பாடுகளை செய்து வழிகாட்டும் சேவையில் இணையதளம் வாயிலாகவே ஈடுபடலாம் என்பதால் அதற்கான பிரத்யேக வலைதளத்தை நிர்வகித்தால் போதும்.
அழைப்பிதழ் உருவாக்குதல் (Invitation card designer) : கண்கவரும் அழைப்பிதழ்கள் வடிவமைத்து அதை வலைதலத்தில் பதிவிட்டு சமூக ஊடகங்களில் சேவையை வெளியிட்டால் மக்களை எளிதாக சென்றடையலாம்.
சமையல் வகுப்புகள் (Cooking Classes) : ஆன்லைனில் யூட்யூப் வாயிலாக வகுப்பெடுக்கலாம். அல்லது ஆஃப்லைனில் ஸ்டூடியோவை புக் செய்து வகுப்பெடுக்கலாம். இரண்டிலுமே குறைந்த செலவில் செயல்படமுடியும்.
ஒவ்வொரு வணிக வாய்ப்பிலும் அதற்கே உரிய ஆபத்துகளும் தடைகளும் உள்ளது. எனினும் வெற்றியடைவதற்கான சாத்தியக்கூறுகளும் அடங்கியுள்ளது. இறுதியாக உங்களுக்கு ஊக்கமளிக்கும் ஹென்ரி ஃபோர்ட் வரிகள்:
“அனைத்தும் உங்களுக்கு எதிராக இருக்கும்போது ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளவேண்டும். விமானம் காற்றுக்கு எதிராக செயல்படுமே தவிர காற்றுடன் அல்ல.”
ஆங்கில கட்டுரையாளர் : சஞ்சனா ராய்