போன வாரம் சோலார், இந்த வாரம் ‘பேஷன்' - புதிய நிறுவனங்களை வாங்கும் முகேஷ் அம்பானி!
`பாலிவுட் பிரபலம்' நிறுவனத்தில் முதலீடு!
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இந்திய பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானி, இரண்டு சோலார் நிறுவனங்களை கையகப்படுத்தினார். சீன நிறுவனமான கெம்சீனா நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நார்வே நாட்டின் REC சோலார் என்ற நிறுவனத்தை சுமார் 771 மில்லியன் டாலருக்கு வாங்கிய ரிலையன்ஸ் குழுமம், இந்திய நிறுவனமான ஸ்டெர்லிங் அண்ட் வில்சன் சோலார்-ன் 69.36 சதவீத பங்குகளையும் கையகப்படுத்தியது. இந்த இரண்டு நிறுவனங்களையும் ஒரே நாளில் கைப்பற்றப்பட்டது.
இப்போது, இன்னொரு நிறுவனத்தின் 40 சதவீத பங்குகளை வாங்கியிருக்கிறது முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமம். சில்லறை வணிகத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் ரிலையன்ஸ் தற்போது இந்தியாவின் மிகப்பெரிய சினிமா துறையான பாலிவுட்டின் மிகப் பெரிய பேஷன் டிசைனர் மனிஷ் மல்ஹோத்ராவின் 'பேஷன்' நிறுவனமான ’எம்எம் ஸ்டைல்ஸ்’-இல் முதலீடு செய்துள்ளார் முகேஷ் அம்பானி.
மனிஷ் மல்ஹோத்ராவின் பேஷன் நிறுவனமான எம்எம் ஸ்டைல்ஸ் லிமிடெட்டின் 40% பங்குகளை ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் லிமிடெட் வாங்கி இருக்கிறது. இந்த எம்எம் ஸ்டைல்ஸ் பேஷன் நிறுவனம், 2005-ல் மனிஷ் மல்ஹோத்ராவால் தொடங்கப்பட்டது.
மனிஷ் மல்ஹோத்ரா, பாலிவுட் சினிமாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் பாலிவுட் நட்சத்திரங்களை ஸ்டைலிங் செய்து மூன்று தசாப்தங்களாக தனக்கென நல்ல பெயரை உருவாக்கி வைத்துள்ளார். மேலும், இந்தியாவின் ஆடை வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது இந்த நிறுவனம்.
ஆடை வடிவமைப்பில் சுமார் 30 வருட அனுபவம் கொண்ட மனிஷ் மல்ஹோத்ரா, சுமார் 700 ஊழியர்களைக் கொண்டு பிரம்மாண்டமான முறையில் ஆடைகளை டிசைன் செய்து விற்பனை செய்து வருகிறார். மும்பை, டெல்லி, ஹைதராபாத் ஆகிய இடத்தில் 4 ஆடம்பரமான ஷோரூம்களை கொண்டிருக்கும் மனிஷ் மல்ஹோத்ராவின் பிராண்டுக்கு இணையத்தில் மட்டும் 1.2 கோடி வாசகர்கள் உள்ளனர்.
தற்போதைய நிலையில் பாலிவுட் சினிமா வட்டாரத்தில் அதிகம் நாட்டப்படும் பேஷன் நிறுவனமாக இருக்கும் ’எம்எம் ஸ்டைல்ஸ்’, இந்திய அளவில் பேஷன் துறையில் மிகப்பெரிய வர்த்தகம் செய்து வருகிறது. இந்த நிறுவனம் சமீபத்தில் நிதி முதலீடுகளை திரட்ட முடிவு செய்தது. அதனடிப்படையில் தான் தற்போது, ரிலையன்ஸ் நிறுவனம் முதலீடுகளை செய்துள்ளது. என்றாலும் எவ்வளவு தொகைக்கு முதலீடுகள் செய்யப்பட்டது என்பதை இரு நிறுவனங்களும் வெளிப்படுத்தவில்லை.
இந்த கூட்டணி தொடர்பாக பேசியுள்ள ரிலையன்ஸ் ரீடெயில் பிரிவின் தலைவரும், முகேஷ் அம்பானியின் மகளுமான ஈஷா அம்பானி,
“இந்திய ஆடை கலாச்சாரத்தை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லும் பணியில் மனிஷ் மல்ஹோத்ரா-வின் MM ஸ்டைல்ஸ் நிறுவனத்துடன் நாங்கள் இணைத்திருப்பதன் மூலம் மகிழ்ச்சி அடைகிறோம்," என்றுள்ளார்.