இன்று இந்தியாவில் ஒன்றில் 10 அலுவலகங்கள் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுடையது!
ஸ்டார்ட் அப்களின் சந்தை மதிப்பு உயர்ந்து வருவது, மெட்ரோ மற்றும் சிறு நகரங்களில் வர்த்தக இடங்கள் வாடகைக்கு எடுக்கப்படும் விதத்தில் பிரதிபலிப்பதாக தெரிய வந்துள்ளது.
சி.ஆர்.இ மேட்ரிக்ஸ் மற்றும் காலியர்ஸ் நிறுவன அறிக்கை இந்தியாவில் அலுவலக இடங்களில் பத்து சதவீதம் ஸ்டார்ட் அப்களுக்கு உரியதாக இருப்பதாகத் தெரிவிக்கிறது.
2017ம் ஆண்டில் 4 சதவீதமாக இருந்த நிலையில் இது 2024ல் 13 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் அண்மை காலமாக யூனிகார்ன் நிறுவனங்கள் அதிகம் உருவாகி வருவதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 2022ல் பாலிகன், டீல்ஷேர் உள்ளிட்ட 9 யூனிகார்ன்கள் உருவாக்கியுள்ளன.
பெருந்தொற்று பாதிப்பை மீறி 2021ல் அலுவலக இடங்கள் வாடகை எடுத்துக்கொள்ளப்படுவது மீட்சி அடைந்து வருவதாக அறிக்கை தெரிவிக்கிறது. ஆரம்ப நிலை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கூட தங்கள் ஊழியர்கள் எளிதாக பொது போக்குவரத்தில் வந்து செல்லக்கூடிய இடங்களை நாடுகின்றன.
இந்தப் பிரிவில், நிதிநுட்பம், லாஜிஸ்டிக்ஸ், உணவு நுட்பம், மருத்துவ நுட்பம் ஆகிய துறைகளில் எதிர்கால வளர்ச்சி நிகழும் என அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும், பெருந்தொற்றுக்கு மத்தியிலான வளர்ச்சி மற்றும் ஸ்டார்ட் அப் நிதி வசதி ஆகிய அம்சங்கள் வழக்கமான பெங்களூரு, தில்லி, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு வெளியே அலுவலக இடங்களுக்கான வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது என்றும் அறிக்கை பேசுகிறது.
2019-21 காலத்தில் பூனாவில் ஸ்டார்ட் அப் அலுவலகங்கள் 9 சதவீதமாகவும் சென்னையில் 4 சதவீதமாகவும் இருந்தன. இருப்பினும் இவை ஸ்டார்ட் அப் மையங்களாகவே கருதப்படுகின்றன.
அகமதாபாத், கோவை, ஜெய்பூர் கொல்கத்தா ஆகிய நகரங்களிலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அலுவலகம் அமைத்து வருகின்றன. இணைய வசதி மற்றும் செலவு குறைவு இதற்கான காரணங்களாக அமைகின்றன.
இந்த வளரும் நகரங்களில் 820க்கு மேல் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகி இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது.
மெட்ரோ அல்லாத நகரங்களில் புதிய ஸ்டார்ட் அப் சூழல் உருவாக இது வழிவகுக்கும் என அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மெட்ரோ அல்லாத நகரங்களைச் சேர்ந்த ஸ்டார்ட் அப்கள் 620 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளன.
குறைந்த செலவு, ஊழியர்களின் எதிர்பார்ப்பு, பெரிய ஸ்டார்ட் அப்களின் விரிவாக்கம், உள்ளூர் வாய்ப்புகள் உள்ளிட்ட காரணங்களினால், மெட்ரோ அல்லாத நகரங்களில் வளைந்து கொடுக்கும் தன்மை கொண்ட அலுவலக பரப்பிற்கான தேவை அதிகரிக்கும் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.
ஆங்கிலத்தில்: தாருதர் மல்கோத்ரா | தமிழில்: சைபர் சிம்மன்