விண்வெளி சென்றுவந்த ரிச்சர்ட் பிரான்சனின் ‘தமிழ் கனெக்ஷன்' - அவரே பகிர்ந்த பிளாஷ்பேக்!
நான்கு தலைமுறைக்கு முந்தைய பந்தம்!
மிகவும் எதிர்பார்ப்புக்கிடையில் தனது அறிமுக விண்வெளிப் பயணத்தை மேற்கொண்ட உற்சாகத்தில் இருக்கிறார் விர்ஜின் கேலக்டிக் நிறுவன அதிபரும் பிரிட்டிஷ் கோடீஸ்வரருமான ரிச்சர்ட் பிரான்சன். விண்வெளி வரலாற்றில் இந்தப் பயணத்தின் மூலம் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதி இருக்கும் பிரான்சனின், விண்வெளிப் பயணம் இந்தியாவில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது, அதுவும் வித்தியாசமான காரணத்திற்காக கொண்டாடப்படுகிறார். அது அவரின் தமிழ்நாடு கனெக்சனுக்காக என்றால் நம்ப முடிகிறதா...
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மும்பையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தியாவுடனான தனது உறவை பிரான்சன் வெளிப்படுத்தியிருந்தார். மும்பையில் இருந்து லண்டனுக்கு தனது விமான நிறுவனமான விர்ஜின் அட்லான்டிக் விமானத்தைத் தொடங்குவதற்காக இந்தியா வந்திருந்தவர், பிளாஷ்பேக் ஒன்றை பகிர்ந்துகொண்டார். அதாவது, அவரின் முன்னோர்கள் சிலர் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்ற உண்மை தான் அது.
அந்த நிகழ்வில் பேசிய அவர், எனது மூதாதையர்களில் சிலர் டி.என்.ஏ பரிசோதனையை மேற்கொண்ட பின்னர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் எனக் கண்டறியப்பட்டது. எனது மூதாதையர்கள் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இது 1793 ஆம் ஆண்டிற்கு முந்தைய பந்தம்.
எனது பெரிய தாத்தாக்களில் ஒருவர் ஆரியா என்ற தமிழ் பெண்ணை மணந்தார். என் பெரிய, பெரிய, பெரிய பாட்டிகளில் ஒருவரான ஆரியா என்ற இந்தியர் எனது பெரிய, பெரிய, பெரிய தாத்தாக்களில் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். 1793 ஆம் ஆண்டு முதல், நாங்கள் நான்கு தலைமுறைகளாக கடலூரில் வாழ்ந்து வந்தோம், என்றார்.
இந்தியாவில் கடந்த தலைமுறையினர் வாழ்ந்து வருவதை நான் அறிவேன், ஆனால் எங்கள் தொடர்புகள் எவ்வளவு வலிமையானவை என்பதை உணரவில்லை. என்றாலும் ஒவ்வொரு முறையும் நான் ஒரு இந்தியரைச் சந்திக்கும் போது, நாங்கள் உறவினர்களாக இருக்கலாம் என்று நான் நினைத்துக் கொள்வேன், என்று கூறியிருந்தார்.
இதற்கிடையே, பிரான்சன் விண்வெளிப் பயணத்திலும், ஒரு இந்தியர் இடம்பெற்றிருந்தனர் என்பது பெருமைக்குரிய விஷயமாகக் கருதப்படுகிறது. ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிரியா பண்டாலா என்ற பெண் அவருடன் நேற்று முன்தினம் விண்வெளிக்கு பயணமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு: மலையரசு