Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

'மளிகைக்கடை டூ மக்களவை’- 22 ரூபாயில் எச் வசந்தகுமார் தொடங்கிய வாழ்க்கைக் கதை!

கடின உழைப்பின் மூலம் எதையும் சாதிக்கலாம் என்ற மிகப் பெரிய வாழ்க்கைப் பாடத்தை நமக்கு தந்து விட்டுப் போய் இருக்கிறார் வசந்தகுமார்.

'மளிகைக்கடை டூ மக்களவை’- 22 ரூபாயில் எச் வசந்தகுமார் தொடங்கிய வாழ்க்கைக் கதை!

Friday August 28, 2020 , 6 min Read

மிகச் சிறிய அளவில் எளிமையாக வாழ்க்கையை தொடங்கிய வசந்த் அண்ட் கோ கடையை, தனி ஒருவனாக போராடி வித்தியாசமாகச் சிந்தித்து, இன்று 64 கிளைகளுடன் மிகப் பெரிய சாம்ராஜ்ஜியமாக உருவாக்கி வர்த்தகத் துறையில் மாபெரும் சாதனை படைத்த எச் வசந்தகுமார் இன்று நம்மிடையே இல்லை.


தமிழகத்தின் தென் கோடியில் பிறந்து, உழைப்பு ஒன்றே வளர்ச்சிக்கு முதலீடு என்பதை செயலில் காட்டி இன்று ரூ. 412 கோடி சொத்தின் அதிபதியாக உயர்ந்ததின் பின்னணியில் உள்ள வெற்றிச் சூத்திரம் என்ன தெரியுமா?

 H Vasanthkumar

வெளிநாடு சென்று மேற்படிப்புகள் படித்தால் மட்டும் தான் தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் என்பதில்லை. அடித்தட்டில் இருந்து ஆரம்பித்து தன் அனுபவம் மூலம் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக தொழிலில் ஒரு புதியபாதை அமைத்து வெற்றி பெற்ற தொழிலதிபராக உயர முடியும் என்பதற்கு உதாரணமாக தன் வாழ்க்கையை விட்டுச் சென்றவர் தான் வசந்த் அண்ட் கோ எச் வசந்தகுமார்.


வசந்த் அண்ட் கோ என்ற பெயரைக் கேட்டதுமே சிரித்த முகத்தோடு காட்சியளிக்கும் எச்.வசந்தகுமாரின் முகம் தான் மக்கள் மனதில் தோன்றும். அந்தளவிற்கு வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையில் தனக்கென தனியொரு அடையாளத்தை உருவாக்கி, தொழிலில் மட்டுமல்லாது அரசியல், பொழுதுபோக்கு ஊடகம் என பன்முகத் திறமையாளராக திகழ்ந்தவர் தான் வசந்தகுமார்.

வசந்த்குமார் பின்னணி

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் 1950ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி பிறந்தவர் வசந்தகுமார். பள்ளிப் படிப்பை வெற்றிகரமாக முடிந்தவர், மேற்கொண்டு நேரடியாக கல்லூரிக்குச் செல்லாமல் தனது பட்டப்படிப்பை அஞ்சல் வழியில் தொடங்கினார். காரணம் வேலை பார்த்துக் கொண்டே படிப்பது தான் வசந்தகுமாரின் திட்டம்.


இதற்கிடையே 70களில் தனது மூத்த அண்ணன் குமரி அனந்தனுக்கு அரசியலில் உதவுவதற்காகச் சென்னை வந்தார். சென்னைப் பிடித்துப் போகவே அங்கேயே தங்கி விடுவது என முடிவெடுத்தார். அதன்படி அஞ்சல் வழியில் படித்துக் கொண்டே விஜிபி நிறுவனத்தில் வீட்டுப் பொருட்கள் விற்பனையாளராகச் சேர்ந்தார்.

தவணை முறையில் பொருட்கள் வாங்கியவர்களிடம் பணம் வசூலிப்பது தான் வசந்தகுமாரின் வேலை. மாத சம்பளம் ரூ.70. எட்டு ஆண்டுகள் அங்கேயே வேலை பார்த்தார்.

அங்கு தான் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை பற்றிய அனைத்து விசயங்களையும் அவர் கற்றுக் கொண்டார். தேவையான அனுபவத்தைப் பெற்றபின் இனி தனது சொந்தக் காலில் நிற்பது என துணிந்து முடிவெடுத்தார்.

வசந்த் அண்ட் கோ உருவானது எப்படி?

அதன்படி, 1978ம் ஆண்டு வசந்த் அண்ட் கோ என்ற பெயரில் சிறிய அளவில் வீட்டு உபயோகப் பொருட்கள் கடையை ஆரம்பித்தார். ஆறு மாதத்தில் திருப்பித் தருவதாகக் கூறி தன் நண்பர் ஒருவரிடம் இருந்து ரூ. 8,000 கடனாகப் பெற்று தான் அந்த மளிகைக் கடையை அவர் வாங்கினார். ஆனால் தன் அனுபவத்திற்கான களமாகப் பயன்படுத்த நினைத்ததால், அந்தக் கடையில் மளிகைப் பொருட்களுக்குப் பதில் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்வது என முடிவெடுத்தார்.


மனது நிறைய நம்பிக்கை இருந்த போதும், வியாபாரத்தை தொடங்க அது போதுமானதாக இருக்கவில்லை. ஏனென்றால் முதல் போட்டு பொருட்களை வாங்க அவர் கையில் காசில்லை.

அப்போது சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த பக்தவச்சலம் என்பவர் வசந்தகுமாருக்கு 22 ரூபாய் கடனாகக் கொடுத்தார். அந்த 22 ரூபாய் தான் வசந்த் அண்ட் கோ என்ற ஆலமரம் உருவாகப் போடப்பட்ட சிறு விதை. வசந்தகுமாரின் உழைப்பும், தன்னம்பிக்கையும் தான் அந்த விதைக்கு உரமானது.

70களில் ரூ.22 என்பது சிறு தொகையல்ல... மிகப் பெரிய பணம். எனவே, கையில் கிடைத்த அந்தப் பணத்தில் சாமானிய மக்களும் எளிய முறையில் வாங்கும் வகையில் மடக்கி வைத்துக் கொள்ளும் வயர் சேர், அயர்ன் பாக்ஸ் போன்ற அத்தியாவசியமான பொருட்களை வாங்கி விற்பனை செய்யத் தொடங்கினார் வசந்தகுமார்.

vasanth and co

விலை குறைவான பொருட்கள் என்றாலும், அதை சாமானிய மக்களும் வாங்கும்படி செய்ய வேண்டும் என்பது தான் வசந்தகுமாரின் இலக்காக இருந்தது. அதன் மூலமே தனது தொழிலை மேலும் விரிவுப் படுத்த முடியும் என்ற தெளிவு அவரிடம் இருந்தது. அப்போது அவர் கையில் எடுத்த ஆயுதம் தான் தவணை முறையில் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை.

சைக்கிளில் வீடு வீடாக விற்பனை

ஆரம்பத்தில் மிதிவண்டியில் வீடுவீடாக சென்று பொருட்களை விற்று, அவற்றிற்கு தவணை முறையில் பணம் வசூலித்தார். வாங்கும் பொருளின் விலையில் குறிப்பிட்ட தொகையைச் செலுத்தினாலே பொருள் கைக்கு வந்து விடும் என்பது வாடிக்கையாளர்களுக்கும் லாபமானதாகவே இருந்தது. இதனால் வசந்தகுமாரின் இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.


இதனால் கொஞ்சம் கொஞ்சமாக தனது கடையை விரிவுப் படுத்தினார். டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின் விற்பனை என தனது தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லத் தொடங்கினார் வசந்தகுமார்.

இம்முறை குறைந்த வருவாய் உடையோரையும் ஆடம்பரப் பொருட்களை வாங்க வைப்பதே வசந்தகுமாரின் திட்டமாக இருந்தது. எனவே அதற்கேற்றபடி தள்ளுபடியோடு தவணை முறையில் பொருட்களை விற்பனை செய்ய ஆரம்பித்தார். இதற்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

வண்ணத் தொலைக்காட்சி அறிமுகமான காலகட்டம் என்பதால் அதனை சந்தையில் எளிதாக விற்பனை செய்து விட முடியும் என நம்பினார். தனித் தனியாக சென்று வாடிக்கையாளர்களைப் பிடிப்பதைவிட, மொத்தமாக தொழிற்சாலைகளுக்குச் சென்று அங்கு தொழிலாளர்களைச் சந்தித்து ஆர்டர் எடுக்கத் தொடங்கினார். அவரது விடாமுயற்சிக்கு கிடைத்த முதல் வெற்றி தான், அசோக் லேலேண்ட் நிறுவனத்தில் 960 வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளுக்கான ஆர்டர்.


வசந்தகுமாரின் இந்த வணிக முறை மற்ற வியாபாரிகளை திரும்பிப் பார்க்க வைத்தது. இந்த மிகப் பெரிய ஆர்டர் அப்போது இந்திய அளவில் பெரும் சாதனையாகவே பார்க்கப்பட்டது.


உழைப்பு ஒன்றையே முதலீடாகக் கொண்டு, மாற்றிச் சிந்தித்ததன் மூலம் வசந்த் அண்ட் கோ கடையை மக்கள் மத்தியில் மேலும் பிரபலமாக்கினார். எந்தவொரு தொழிலாக இருந்தாலும் அதில் முதல் சில லட்சங்களை ஈட்டுவது தான் கஷ்டம். பிறகு அந்தப் பணமே தொழிலை மேலும் மேலும் வளர்ச்சியடையச் செய்யும் என்ற சொல் வழக்கு உண்டு. வசந்தகுமார் விசயத்திலும் அதுதான் நடந்தது.


தொழில் பக்தி, செய்யும் தொழில் புதுமைகளைப் புகுத்தியது போன்றவை வசந்தகுமாரை வெற்றியாளராக மாற்றியது.


இன்று தமிழகம் மட்டுமின்றி, பெங்களூரு, கேரளா மற்றும் புதுச்சேரியிலும் சேர்த்து மொத்தம் 64 கிளைகளுடன் மிகப் பெரிய சாம்ராஜ்ஜியமாக வளர்ந்து நிற்கிறது வசந்த் அண்ட் கோ.

ரூ.22 முதலீட்டில் ஆரம்பித்த தொழில் இன்று ஆண்டுதோறும் 1000 கோடி விற்று முதலுடன் சிறப்பாக இயங்கி வருகிறது. வசந்த் அண்ட் கோவில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவரின் கடையின் வெற்றிச் சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் தனி ஒரு மனிதனாக வசந்தகுமாரின் உழைப்பு மட்டுமே மூலதனமாக இருக்கிறது.

வசந்த் அண்ட் கோ மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற மற்றுமொரு காரணம், பொருட்களை விற்றவுடன், வாடிக்கையாளருடன் தனது உறவைத் துண்டித்து விடாத அணுகுமுறை தான். இதற்கென தனி வாடிக்கையாளர் சேவை மையத்தை ஆரம்பித்து வெற்றிகரமாக செயல்படுத்தினார் வசந்தகுமார்.


திரும்பிய பக்கமெல்லாம் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையகம் மிகுந்தவை நகரங்கள். ஆனால் கிராமங்கள் அப்படியில்லை. எனவே கிராமங்களையே தனது வியாபாரத்திற்கான களமாக்கினார் வசந்தகுமார்.

கிராமப்புறங்களே வசந்த் அண்ட் கோவின் மிகப்பெரிய மார்க்கெட். அவர்களது விற்பனையில் 60 சதவீதம் ஊரகப் பகுதியில் தான் நடைபெறுகிறது.

வசந்தகுமாருக்கும் தொட்டதெல்லாம் பொன்னாகவில்லை. அவரது தொழில் பாதையிலும் சில சறுக்கல்கள் இருக்கத்தான் செய்தது. மத்த பிரபல நிறுவனங்களிடம் இருந்து வாங்கி விற்ற பொருட்களைத் தவிர, மிக்ஸி, பேன் உள்ளிட்ட சில பொருட்களை சொந்தமாக தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கினார் வசந்தகுமார். ஆனால் பிராண்டுகளை நம்பிய மக்களால் வசந்தகுமாரின் தயாரிப்புகளுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் தொழிலில் சிறு சறுக்கலைச் சந்தித்தார். ஆனால் உடனடியாக உற்பத்தியை கைவிட்டார்.

“வாடிக்கையாளர்கள் என்னை உற்பத்தியாளராகப் பார்க்க விரும்பவில்லை. அதனால் அதை கைவிட்டு விட்டேன். இலக்கை நோக்கி செல்கையில் தடைகள் வந்தால் மாற்றுப் பாதையில் போக வேண்டும். அதுவே வெற்றியைக் கொடுக்கும்,” என தோல்வியில் இருந்து தான் மீண்ட விதம் பற்றி கூறுகிறார் வசந்தகுமார்.

அரசியலை நோக்கி...

தொழிலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தனது சகோதரர் குமரி அனந்தன் வழியில் அரசியலில் கவனம் செலுத்தத் தொடங்கினார் வசந்தகுமார். காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.


2006 மற்றும் 2016ம் ஆண்டுகளில் நடந்த சட்டசபைத் தேர்தல்களில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமாருக்கு எம்.பி.யாக வேண்டும் என்பதே கனவாக இருந்தது. எனவே, 2014ம் ஆண்டு கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை எதிர்த்துப் போட்டியிட்டார். ஆனால் அந்தத் தேர்தலில் அவரால் வெற்றி பெற இயலவில்லை.

congress

இருந்தபோதும் தான் வெற்றி பெற்றால் மக்களுக்கு செய்வதாகக் கூறிய வாக்குறுதிகளை பொன்.ராதாகிருஷ்ணன் செய்து முடிக்க வேண்டும் என போஸ்டர் ஒட்டி மக்களின் கவனத்தை ஈர்த்தார். தீவிர சமூக சேவகரான இவர், ஏழை மாணவர்களுக்கு இலவச டியூசன் மையங்களை அமைந்து கொடுத்துள்ளார். மேலும்,

தெருவோர மற்றும் நடைபாதை வியாபாரிகள் பயன்பெரும் வகையில் வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தையும் துவக்கினார். இதனால் கடந்தாண்டு மீண்டும் அதே தொகுதியில் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு, பொன்.ராதாகிருஷ்ணனை அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.

மிகப் பெரிய கட்சித் தலைவர்களே தனது சொத்து மதிப்பைக் குறைத்துக் கூறிய காலகட்டத்தில் ரூ. 300 கோடி, ரூ.400 கோடி என சொத்து மதிப்பை வெளிப்படையாகக் கூறி அசர வைத்தார் வசந்தகுமார். கடந்தாண்டு லோக்சபா தேர்தலின் போது வேட்பு மனுத்தாக்கலில் தனது சொத்து மதிப்பு ரூ.414 கோடி எனக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊடகத்துறையில் கால் பதித்தார்

வர்த்தகம், அரசியல் என தான் சந்தித்த அனுபவங்களைத் தொகுத்து 'வெற்றிகொடிகட்டு' எனும் புத்தகத்தை எழுதினார். அந்தப் புத்தகத்தை கடந்த 2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடிகர் ரஜினிகாந்த மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் சேர்ந்து வெளியிட்டனர். 2008ம் ஆண்டு வசந்த் டிவி என்ற தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சி ஆரம்பித்து, அதனையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

“இங்கு எதுவும் சுலபம் இல்லை. சின்னச் சின்ன விஷயங்களில் இருந்து ஒவ்வொன்றையும் படிப்படியாகத் திட்டமிட வேண்டும். ஏதேனும் தடைகளைச் சந்திக்க நேர்ந்தால், திசையை மாற்றி முன்னேறிச் செல்ல வேண்டும். நீங்கள் முன்னேறிச் செல்ல செல்ல நிறைய அனுபவம் கிடைக்கும். அனுபவங்கள் தடைக்கற்களைச் சுலபமாய்த் தாண்ட உதவி புரியும்” - வசந்தகுமார்.

யாரும் எதிர்பார்க்காத வண்ணம் கொரோனா எனும் கொடூர அரக்கனின் பிடியில் சிக்கினார் வசந்தகுமார். நோய் தொற்று சரியான போதும், திடீரென உடல்நிலை மோசமாகி இன்று உயிரிழந்தார் எச் வசந்தகுமார். அவரது இந்த திடீர் மறைவு வசந்த் அண்ட் கோ வாடிக்கையாளர்களையும், ஊழியர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. வசந்தகுமாரின் மறைவைக் கேட்டு, அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது இரங்கல்களைப் பதிவு செய்து வருகின்றனர்.


கடின உழைப்பின் மூலம் எதையும் சாதிக்கலாம் என்ற மிகப் பெரிய வாழ்க்கைப் பாடத்தை நமக்கு தந்து விட்டுப் போய் இருக்கிறார் வசந்தகுமார். 


கட்டுரையாளர்: ஜெயஸ்ரீத்ரா