உரிமையாளரை இழந்த திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா: வரலாறும், வளர்ச்சியும்!
உலகப்பிரசித்தி வாய்ந்த இருட்டைக்கடை அல்வாவின் தற்போதைய உரிமையாளர் ஹரி சிங் இன்று காலமானார். பல ஆண்டுகளாக அதே சுவையுடன் திருநெல்வேலி அல்வாவை தயாரிக்கும் அந்நிறுவனத்துக்கு இது ஒரு பெரிய இழப்பு.
திருநெல்வேலியின் முக்கிய அடையாளமாக விளங்குவது ‘இருட்டுகடை அல்வா’. இந்தக் கடை நெல்லையின் புகழ்பெற்ற நெல்லையப்பர் கோவிலை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு அல்வா பொட்டலமாகக் கட்டப்பட்டு விற்பனை செய்யப்படும். மாலை நேரங்களில் மட்டுமே செயல்படும் இருட்டுக்கடை அல்வாவுக்கு எப்போதும் கூட்டம் அலைமோதும்.
இத்தகைய உலகப்பிரசித்தி வாய்ந்த இருட்டைக்கடை அல்வாவின் தற்போதைய உரிமையாளர் ஹரி சிங் இன்று காலமானார். பல ஆண்டுகளாக அதே சுவையுடன் திருநெல்வேலி அல்வாவை தயாரிக்கும் அந்நிறுவனத்துக்கு இது ஒரு பெரிய இழப்பு.
தொடக்கம் மற்றும் நிறுவனர்கள்
1900-களில் ராஜஸ்தானைச் சேர்ந்த கிருஷ்ணா சிங் என்பவரால் இருட்டுக்கடை அல்வா தொடங்கப்பட்டது. அவரது மறைவிற்குப் பின்னர் அவரது மகன் பிஜிலி சிங் கடையைத் தொடர்ந்து நடத்தினார். பிஜிலி சிங்கின் மறைவை அடுத்து அவரது மனைவி சுலோசனா பாயும் பிஜிலி சிங்கின் சகோதரரான ஹரி சிங்கும் தற்போது கடையை நடத்தி வருகின்றனர்.
இருட்டுக்கடை அல்வா – பெயர் காரணம்?
ஆரம்பத்தில் இந்தக் கடையில் ஹரிகேன் விளக்கு ஒளியில் விற்பனை செய்யப்பட்டது. இருட்டு நேரத்தில் கிடைக்கும் அல்வா என்பதால் மக்களால் இருட்டுகடை அல்வா என்று அழைக்கப்பட்டு நாளடைவில் அதுவே கடையின் நிரந்தர அடையாளமாக மாறிவிட்டது. இன்றளவும் இங்கு பெயர்பலகை, விளக்கு அலங்காரம் என ஆரவாரம் ஏதுமின்றி சிறிய பல்ப் ஒளியில் தான் அல்வா விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே பெயரில் பல கடைகள் அப்பகுதியில் வந்தாலும், இவர்களது கடையே உண்மையான இருட்டுக்கடை அல்வா என்பது பலருக்கும் தெரிவதில்லை.
தயாரிப்பு முறை
“அல்வா என்பது நேரடியாக அடுப்பில் இருந்து எடுத்து சாப்பிடுவது இல்லை. அதை சமைத்த உடனேயே சூடாக பேக் செய்யக்கூடாது. இன்று விற்பனை செய்யப்படும் அல்வாவைத் தயாரிக்க குறைந்தது மூன்று நாட்கள் ஆகும்.
முதல் நாள் கோதுமையில் இருந்து பால் பிழிந்தெடுக்கப்படும். இரவு முழுவதும் இது புளிக்கவைக்கப்படும். மறுநாள் அல்வா தயாரிக்கப்பட்டு, மூன்றாவது நாள் விற்பனை செய்யப்படும்,” என்று ஹரிசிங் ஒருமுறை இருட்டுக்கடை அல்வா தயாரிப்பு முறையை விவரித்திருந்தார்.
“இருட்டுக்கடை அல்வாவின் சிறப்பே அது செய்யப்பட்டு 24 மணி நேரத்துக்கு பின் சூடில்லாமல் சாப்பிடுவதே..” என்கிறார் ஹரிசிங்.
அல்வாவின் தனித்துவம்
இந்த அல்வா, கோதுமை கொண்டு தயாரிக்கப்படுகிறது. அதிக சுவை கொண்ட தாமிரபரணி தண்ணீர் பயன்படுத்துவது அல்வாவிற்கு கூடுதல் சுவையளிக்கிறது. இந்த தண்ணீர் மூலிகை நற்குணங்கள் கொண்டது. இந்த ரெசிபி கொண்டு நாடு முழுவதும் அல்வா தயாரிக்கப்பட்டாலும் இருட்டுக்கடை அல்வாவின் தனித்தன்மைமிக்க சுவை கிடைப்பதில்லை. திருநெல்வேலி சுற்றுப்புறங்களில் அமைந்துள்ள அல்வா கடைகளிலும்கூட இந்த சுவை கிடைப்பதில்லை.
பெரியளவிலான மார்க்கெட்டிங் உத்திகள், விளம்பர உத்திகள் ஏதுமின்றி இந்த பாரம்பரியமான கடை சிறந்த தரத்தை மட்டுமே தாரக மந்திரமாகக் கொண்டு இத்தனை ஆண்டுகளாக செயல்பட்டு உலகளவில் பிரபலமாகி உள்ளது.
இந்தச் சூழலில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஹரிசிங்கிற்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்தச் சம்பவம் நெல்லை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.