சர்வதேச நிறுவனங்களுடன் போட்டியிடும் ரூ. 1,400 கோடி வருவாய் ஈட்டும் இந்திய எலெக்ட்ரிகல் நிறுவனம்!
உத்தர பிரதேசத்தில் வளையல் வியாபாரியின் மகன் ரூ.2.5 லட்சம் மூலதனத்தில் தொடங்கிய இந்நிறுவனம், மூன்று தலைமுறைகள் தாண்டி தற்போது அவரின் பேரன்கள் எடுத்து நடத்தி ஆண்டுக்கு ரூ.1,400 கோடி வருவாய் ஈட்டுகிறது.
உத்தர பிரதேசத்தின் ஃபிரோசாபாத்தின் கிளாஸ் நகரில் உள்ள ஓர் வளையல் விற்பனை செய்யும் வணிகக் குடும்பத்தில் பிறந்தவர் ஒட்மல்ஜி கோராஜி. குடும்ப வணிகத்தை விட்டுவிட்டு, வேறு தொழிலில் இறங்க அவர் முடிவெடுத்தார். இதையடுத்து அவர் தனது குடும்பத்தோடு ஆந்திராவின் விஜயவாடாவுக்கு இடம்பெயர்ந்தார். இதுதான் அவரது பிரமாதமான வாழ்க்கைப் பயணத்தின் தொடக்கமாக அமைந்தது.
அங்கு ஏற்கெனவே மின்சாரப் பொருள்கள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த உறவினரின் வழிகாட்டலின்பேரில் தானும் அதேத் தொழிலில் இறங்க முடிவெடுத்தார். இதையடுத்து தனது மகன் ஜுக்ராஜ் ஜெயினுடன் இணைந்து 1979ஆம் ஆண்டில் ’கோல்ட்மெடல் எலக்ட்ரிக்கல்’ என்ற பெயரில் ஒரு சிறிய கடையைத் தொடங்கி, சுவிட்சுகள் மற்றும் மின் கம்பிகளை விற்பனை செய்யத் தொடங்கினார். அப்போது தனது வணிகத்துக்காக ரூ .2.5 லட்சத்தை மூலதனமாக போட்டார். வணிகமும் கொடிகட்டி பறந்தது.
இதுகுறித்து எஸ்எம்பி ஸ்டோரியிடம் கோல்ட்மெடல் எலக்ட்ரிக்கல் நிறுவனத்தின் இயக்குநராக இருக்கும் கிஷன் தெரிவித்ததாவது,
“எனது தாத்தாவும், தந்தையும் இணைந்து ஆங்கர், சோனா, எஸ்.எஸ்.கே. போன்ற பிராண்ட் மின்சாரப் பொருள்களை விற்பனை செய்யத் தொடங்கினர். இந்நிலையில், 1980ம் ஆண்டில், எனது தாத்தா காலமானதைத் தொடர்ந்து, எனது தந்தை ஜுக்ராஜ் தனது கடின உழைப்பால் ஆந்திரா முழுமைக்கும் தனது வணிகத்தை விரிவாக்கினார்.
ஆந்திரா முழுவதும் நல்ல வாடிக்கையாளர் நெட்வொர்க்கை உருவாக்கிய நிலையில் மற்ற பிராண்டுகளை விற்பனை செய்வதை விட, நாமே ஏன் சொந்தமாக உற்பத்தி செய்து விற்பனை செய்யக்கூடாது என சிந்தித்தார். இதுதான் எங்கள் வணிகத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது என்கிறார்.
இதையடுத்து, 1995ல், ஜுக்ராஜ் தனது சொந்த உற்பத்தி பிரிவை தொடங்கத் தீர்மானித்தார். இதற்காக அவர் தனது முதல் தொழிற்சாலையை அமைப்பதற்காக தனது குடும்பத்தினருடன் மும்பைக்கு இடம்பெயர்ந்தார். ”கோல்ட்மெடல் யூரியா சுவிட்சுகள் தயாரிப்பு தொடங்கியது. இத்தயாரிப்புகள் கர்நாடக மாநிலம் முழுமையும் தனது சிறகை விரித்தது. இதைத் தொடர்ந்து, ஆந்திரா சந்தையிலும் தனது சொந்த தயாரிப்புகளை விற்பனை செய்யத் தொடங்கினர்.
தொடர்ந்து அவர்கள் சுவிட்களின் ஓரங்களில் பார்டர் டிசைன் செய்து புதுமையாக அறிமுகப்படுத்தினர். மின்வணிக சந்தையை கைப்பற்ற கோல்ட்மெடல் புதுமைகளைத் தேடத் தொடங்கியது.
இந்நிலையில் கிஷன் 1998ம் ஆண்டு, தனது பட்டப்படிப்பை முடித்து, தந்தையுடன் தொழிலில் இறங்கினார். கிஷனின் வருகை நிறுவனத்தில் ஓர் மிகப்பெரிய மாற்றத்துக்கு வழிவகுத்தது. நிறுவனத்தின் விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கல் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் முதலீடு செய்த கிஷனின் தொலைநோக்கு பார்வை, நிறுவனத்தின் விரைவான வளர்ச்சிக்கு வழிவகுத்தது.
இதுகுறித்து கிஷன் கூறியதாவது,
நான் தொழிலில் புதுமைகளை புகுத்த விரும்பினேன். தற்போதுள்ள சுவிட்சுகள் சில வரம்புகளைக் கொண்டிருந்தன, இவற்றை மாற்ற முயன்றேன். முதல்முறையாக, பிளாஸ்டிக் சுவிட்சுகளை அறிமுகப்படுத்தினோம், என்கிறார்.
2001ஆம் ஆண்டு கோல்ட்மெடல் நிறுவனம் பாலிகார்பனேட் சுவிட்சுகளைத் தயாரிக்கத் தொடங்கியது. இந்நிலையில் கிஷனின் சகோதரர் பிஷன் ஜெயினும் குடும்பத் தொழிலில் இணைந்தார். அதன்பிறகு நிறுவனத்தின் வளர்ச்சி பிரம்மிக்கத்தக்கதாக இருந்தது. 2007 இல் பூட்டுதல் அமைப்புடைய சுவிட்சுகளை அறிமுகப்படுத்தியது.
பொதுவாக சுவிட்சுகளை மாற்றும்போது, அந்த முழு சுவிட்சு போர்ட்டையும் மாற்றவேண்டும். இதனால் சில நேரங்களில் சுவர்கள் மற்றும் மேல்தளத்தில் சேதாரம் ஏற்பட்டு வந்தது. இக்குறைகளை நிவர்த்தி செய்வது போல இருந்தது கோல்ட்மெடல் நிறுவனத்தின் தயாரிப்புகள். இவர்களின் இந்த புதுமையான கண்டுபிடிப்புகளால் நாடு முழுவதும் மக்களின் கவனத்தை ஈர்த்தனர். இதையடுத்து தங்களின் டிசைன் மற்றும பிராண்ட்களுக்கு கோல்ட்மெடல் நிறுவனத்தினர் காப்புரிமை பெற்றனர்.
வழக்கமான சுவிட்சுகள் தவிர, இவர்களின் இசை அமைப்பு மற்றும் எஃப்.எம்., வைஃபை (retrofit) சுவிட்சுகள், ஸ்டோன்வுட் சுவிட்சுகள் மற்றும் கண்ணாடித் தட்டு சுவிட்சுகள், பூட்டுதல் அமைப்புடன் சுவிட்சுகள். தொடுதல், தட்டு அல்லது ஸ்வைப் மூலம் செயல்படக்கூடிய பலவிதமான சுவிட்சுகளை தயாரிக்கின்றன. குறிப்பாக 5.5 மி.மீ., தூசி இல்லாத ஜிஃபா சுவிட்சுகளை கோல்ட்மெடல் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
எத்தனை விதமான சுவிட்சுகளை அறிமுகப்படுத்தினாலும், அவர்களின் குறி என்னவோ எலெக்ட்ரீசியன்கள்தான். ஏனெனில் அவர்கள்தான் சந்தையில் உள்ள பொருள்களை நேரடியாக மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கிறார்கள். மேலும், அவர்களால்தான் நிறைகுறைகளை சரியாக கண்டறிந்து கூறமுடியும். இதற்காகவே சுவிட்சுகளை தயாரிக்க நவீன CAD / CAM மென்பொருள்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது கோல்ட்மெடல் எலக்ட்ரிக்கல் தயாரிப்புகள் இந்தியா முழுவதும் கிடைக்கின்றன. நிறுவனம் அகமதாபாத், விஜயவாடா, மும்பை, சிலிகுரி மற்றும் ஹைதராபாத் முழுவதும் விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ளது. இங்கு சுவிட்சுகள் மட்டுமல்லாமல் கம்பிகள், மினியேச்சர் சர்க்யூட் பிரேக்கர் (எம்.சி.பி), எல்.ஈ.டி, டோர் பெல்ஸ், பவர் க்யூப்ஸ், அடாப்டர்கள், எக்ஸ்டென்ஷன் கயிறுகள் மற்றும் பிற தயாரிப்புகளையும் உற்பத்தி செய்கின்றனர்.
இவர்களின் தயாரிப்புகள் ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம், பங்களாதேஷ் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தெற்கு பிராந்தியத்தில் கிஷனின் தந்தை மற்றும் அவரது மாமா பிரவீன் ஜெயின் ஆகியோரால் சந்தைப்படுத்துதல் நிர்வகிக்கப்படுகிறது.
கம்பிகள், குழாய்கள் மற்றும் சுவிட்சுகள் தயாரிக்க கோல்ட்மெடலில் பிவாடி, விஜயவாடா மற்றும் மும்பையில் என மூன்று அலகுகள் உள்ளன. இந்நிறுவனம் வதோதரா மற்றும் ஜாம்நகரில் இருந்து பெரும்பாலான மூலப்பொருள்களை வாங்குகிறது. மேலும் தைவானில் இருந்தும் முக்கிய பாகங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
நிறுவனத்தில் தற்போது சுமார் 20,000 விநியோகஸ்தர்கள் உள்ளனர். நிறுவனத்தில் 1000க்கும் மேறபட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். 600 பிற நிறுவன விற்பனையாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
கோல்ட்மெடல் நிறுவனம் லெக்ராண்ட் மற்றும் பானாசோனிக் போன்ற நிறுவனங்களுடன் போட்டியிடுகிறது. இது 2019ஆம் ஆண்டில் 1,400 கோடி ரூபாய் வருவாயைப் பதிவு செய்துள்ளது.
இந்நிறுவனம் 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது சொந்த ஐடி குழுவை உருவாக்கியது. இதன்முலம் நிறுவனம் மின்னணு முறையில் தனது வணிகம் மற்றும் பரிவர்த்தனைகளைத் தொடங்கியது. இதனால் அனைத்து விநியோகஸ்தர்களும் நிறுவனத்தின் மென்பொருளில் உள்நுழைந்து நிறுவனத்துடன் தங்கள் பரிவர்த்தனைகளைக் காணலாம்.
விலைப்பட்டியல்கள், விற்பனை, முகவர் அட்டவணைகள் முதல் அனைத்துத் தகவல்களும் ஒரு பட்டனைத் தட்டினால் விநியோகஸ்தர்களுக்கு கிடைக்கும் வகையில் இது மிகவும் எளிமையாக உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்காலத் திட்டங்களில், விநியோகஸ்தர்களோடு சேர்த்து சுமார் 40,000 எலக்ட்ரீசியன்களையும் இணைக்க முடிவு செய்துள்ளனர்.
மேலும், மனித தலையீடு குறைவாக இருக்கும் சுவிட்சுகளை கண்டுபிடிப்பதற்கான சவாலையும் தற்போது நிறுவனம் மேற்கொண்டுள்ளது என்கிறார் கிஷன்.
ஆங்கிலத்தில்: பல்லக் அகர்வால் | தமிழில் திவ்யாதரன்