Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ys-analytics
ADVERTISEMENT
Advertise with us

‘மற்றவர்கள் முடியாது என்று சொன்னால் அதை சவாலாக முடிக்க வேண்டும்’ - டாடா சுரங்கத்தில் பணிபுரியும் சிங்கப் பெண்கள்!

டாடா ஸ்டீல் நிறுவனம் Women@Mines என்கிற திட்டத்தின் மூலம் பெண்களுக்கு ஹெவி எர்த் மூவிங் மெஷினரி (HEMM) இயக்குவதற்கு பயிற்சி வழங்குகிறது.

‘மற்றவர்கள் முடியாது என்று சொன்னால் அதை சவாலாக முடிக்க வேண்டும்’ - டாடா சுரங்கத்தில் பணிபுரியும் சிங்கப் பெண்கள்!

Saturday October 02, 2021 , 4 min Read

வெஸ்ட் பொகாரோ பிரிவு மற்றும் நோவாமுண்டி பகுதிகளில் உள்ள டாடா ஸ்டீல் சுரங்கங்களில் Women@Mines என்கிற டாடா ஸ்டீல் திட்டத்தின் ஒரு பகுதியாக 38 பெண்கள் ஹெவி எர்த் மூவிங் மெஷினரி (HEMM) இயக்குவதற்கு பயிற்சி பெற்று வருகிறார்கள்.


டாடா ஸ்டீல் நிறுவனத்தின் Women@Mines திட்டம் திறனற்ற பெண் ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பதை நோக்கமாகக் கொண்டது. எழுத்து தேர்வு, நேர்காணல் ஆகியவற்றுடன் இதற்குத் தேர்வு செய்யப்படுகின்றனர்.


தேர்வு செய்யப்படு நபர்கள் HEMM ஆப்பரேட்டர்களாக திறம்பட செயல்படுவதற்காக வெஸ்ட் பொகாரோ பிரிவில் ஓராண்டிற்கு தீவிர பயிற்சியளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி முடிந்த பிறகு இவர்கள் டம்பர், டோசர், ஷோவெல், எக்ஸ்கவேடர், ட்ரில் உள்ளிட்டவற்றை இயக்குவதற்காக ஆபரேஷன்ஸ் அசிஸ்டெண்ட் பதவியில் நியமிக்கப்படுவார்கள்.

tata

டாடா ஸ்டீல் மனித வள மேலாண்மை பிரிவில் துணைத் தலைவர் அட்ரயி சன்யல் கூறும்போது,

”டாடா ஸ்டீல் எப்போதும் திறன்மிக்க இளைஞர்களை ஊக்குவித்து வாய்ப்பளித்து வருகிறது. Women@Mines திட்டம் இந்தப் பயணத்தின் மற்றுமொரு மைல்கல்,” என்று குறிப்பிட்டார்.

Women@Mines திட்டத்தில் பங்களிக்கும் இளம் பெண்கள் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்தப் பிரிவில் கால்பதித்துள்ளனர். டாடா ஸ்டீல் மூலப்பொருட்கள் பிரிவின் துணைத் தலைவர் சுந்தர ராமம் கூறும்போது,

“டாடா ஸ்டீல் வளர்ச்சிப் பயணத்தில் பங்களிக்க விரும்பும் பெண்களுக்கு அதிக வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவே Women@Mines திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு நோவாமுண்டி இரும்பு சுரங்கத்தில் முதல் பேட்ச் 22 பெண்கள் வெற்றிகரமாக நியமிக்கப்பட்டார்கள். இந்தத் துறையில் மேலும் பல பெண்களை இணைத்துக்கொள்ள இது நம்பிக்கையளித்தது,” என்றார்.

வழக்கத்திற்கு மாறான இந்த வேலை குறித்தும் வருங்கால திட்டங்கள் குறித்தும் 5 HEMM ஆபரேட்டர்கள் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

தீபிகா குமாரி, வெஸ்ட் பொகாரோ

22 வயதாகும் தீபிகா குமாரிக்கு மருத்துவர் ஆகவேண்டும் என்பது கனவு. பிடிஎஸ் படிப்பிற்கு சீட் கிடைத்தது. மருத்துவத் துறையைக் கைவிட்டு வேறு பிரிவில் செயல்படத் தீர்மானித்தார்.

HEMM ஆப்பரேட்டர் பணி குறித்துக் கேள்விப்பட்டு விண்ணப்பித்துள்ளார்.

1

தீபிகா குமாரி

“எழுத்துத் தேர்விலும் நேர்காணலிலும் தேர்ச்சி பெற்றேன். சுரங்கத்தைப் பார்வையிட்ட பிறகு இதுதான் எனக்கான பணி என முடிவு செய்துவிட்டேன்,” என்கிறார் தீபிகா.

இவரது முடிவைக் கண்டு குடும்பத்தினர் முதலில் ஆச்சரியப்பட்டாலும் பின்னர் ஆதரவாக இருந்துள்ளனர். அக்கம் பக்கத்தினர் தீபிகாவின் முடிவைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். ஆனால் அவர் எதையும் பொருட்படுத்தவில்லை.


தற்போது பயிற்சியில் இருக்கும் தீபிகா களத்திலும் சிமுலேட்டர் மூலமாகவும் வெவ்வேறு வகையான வாகனங்களை இயக்கக் கற்றுக்கொண்டு வருகிறார்.

”உடல் உழைப்பு அதிகமிருப்பது குறித்து எனக்குக் கவலையில்லை. பயிற்சியில் புது விஷயங்களைக் கற்றுக்கொள்வது உற்சாகமளிக்கிறது. பாலின பாகுபாடு இல்லாமல் யார் வேண்டுமானாலும் எந்தத் துறையில் வேண்டுமானாலும் செயல்படலாம்,” என்கிறார்.

கிரண் முந்தாரி, நோவாமுண்டி

மெக்காட்ரானிக்ஸ் டிப்ளமோ முடித்த கிரண் Women@Mines திட்டத்தில் சேருவதற்கு முன்பு சுரங்கத்தின் கட்டுப்பாட்டு அறையில் வேலை செய்து வந்தார்.

2

கிரண் முந்தாரி

“டாடா ஸ்டீல் HEMM ஆப்பரேட்டர்களை நியமிப்பது குறித்து கேள்விப்பட்டதும் நான் விண்ணப்பித்தேன். எழுத்துத் தேர்விலும் நேர்காணலிலும் தேர்ச்சி பெற்றேன். பயிற்சியின்போது சிமுலேட்டர் மூலம் அடிப்படையில் இருந்து கற்றுக்கொடுத்தார்கள். ஏழு மாதங்கள் தியரி வகுப்பும் இரண்டு மாதங்களுக்கும் மேலாக களத்திலும் பயிற்சியளிக்கப்பட்டது,” என்கிறார் கிரண்.

இது பெண்கள் செய்யும் வேலை அல்ல என்று குடும்பத்தினரும் நண்பர்களும் தயங்கியுள்ளனர். ஆனால் கிரணின் பெற்றோர் அவரது முடிவிற்கு முழு ஆதரவு கொடுத்துள்ளனர்.

”எந்தவித பயமும் இன்றி வாகனங்களை இயக்க ஆப்பரேட்டர்கள் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார்கள். முன்பைக் காட்டிலும் தற்போது நம்பிக்கை அதிகரித்துள்ளது,” என்கிறார்.

அவர் மேலும் கூறும்போது,

“மற்றவர்கள் முடியாது என்று சொல்லும்போது அதை சவாலாக எடுத்துக்கொண்டு முடித்துக்காட்ட வேண்டும்,” என்கிறார்.

பூனம் ப்ரீத்தி சிங், வெஸ்ட் பொகாரோ

26 வயது பூனம் வேதியியல் பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். வழக்கத்திற்கு மாறான ஒரு பிரிவில் தனித்துவமாக செயல்படவேண்டும் என்று விரும்பியதால் இந்த வேலையைத் தேர்வு செய்துள்ளார்.

3

பூனம் ப்ரீத்தி சிங்

”இதுவரை யாரும் முயற்சி செய்யாத ஒன்றை நான் செய்ய விரும்பினேன். ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறைகளில் கால் பதிக்கத் தயங்கும் பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க விரும்புகிறேன்,” என்கிறார்.

கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு சாதிக்கவேண்டும் என்கிற வேட்கை இவருக்குள் இருக்கிறது.

”இந்த வேலைக்கு முழுமையான கவனமும் சமயோஜித புத்தியும் அவசியம். ஊக்கத்துடன் நாம் சவால்களை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஒரே மாதிரியான சிந்தனைகளைத் தகர்த்தெறிந்து சாதனை படைக்கவேண்டும்,” என்கிறார்.

ப்ரியா மிஷ்ரா, நோவாமுண்டி

ப்ரியாவின் அப்பா டாடா ஸ்டீல் நிறுவனத்தில் வேலை செய்கிறார். அவர் மூலமாகவே இவருக்கு HEMM ஆப்பரேட்டர் வேலை குறித்து தெரியவந்துள்ளது. இவருக்கு முன்பு மூன்று தலைமுறையினர் இந்த நிறுவனத்தில் வேலை செய்துள்ளனர்.

4

ப்ரியா மிஷ்ரா

”முதல் முறை சுரங்கத்திற்கு சென்றபோது சற்று சவாலான வேலையாகவே தோன்றியது. எனக்கு இருசக்கர வாகனம்கூட ஓட்டத் தெரியாது என்பதால் கனரக வாகனங்களை இயக்குவது கடினம் என்றே தோன்றியது. ஆப்பரேட்டர்கள் மற்றும் இதர ஊழியர்களின் ஆதரவு கிடைத்ததால் என்னுடைய பயம் மறைந்து தன்னம்பிக்கை பிறந்தது,” என்கிறார்.

ஷிஃப்ட் அடிப்படையில் வேலை செய்வது குறித்து எந்தவித தயக்கமும் இவரிடம் இல்லை. பயிற்சி முடிந்து முழுநேரமாக வேலையில் இணைய ஆர்வமாக இருக்கிறார்.

”பெண்கள் எந்தத் துறையை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். முடியாது என்று எதுவுமில்லை. சவால்களை ஏற்றுக்கொண்டு சாதிக்கவேண்டும், அவ்வளவுதான்,” என்கிறார்.

சுஷ்மிதா மண்டல், வெஸ்ட் பொகாரோ

சுஷ்மிதாவின் அப்பா டாடா ஸ்டீல் நிறுவனத்தில் வேலை செய்கிறார். ஊழியர்களுக்கு இங்கு கிடைக்கும் வாய்ப்புகள் மற்றும் சலுகைகள் பற்றி நன்கறிந்த சுஷ்மிதா பத்தாம் வகுப்பு முடிதத்தும் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்துள்ளார்.

5

சுஷ்மிதா மண்டல்

”எழுத்துத் தேர்வில் என்னால் தேர்ச்சி பெறமுடியவில்லை. எனவே பி.காம் படித்தேன். அதைத் தொடர்ந்து முதுகலைப் பட்டமும் பி.எட் படிப்பும் முடித்தேன்,” என்கிறார்.

HEMM ஆப்பரேட்டர் வாய்ப்பு குறித்து கேள்விப்பட்டதும் விண்ணப்பித்தார். பெண்களால் இந்த வேலையை செய்யமுடியாது என்றும் அனுமதிக்கவேண்டாம் என்றும் பலர் சுஷ்மிதாவின் அப்பாவிடம் கூறியுள்ளனர்.

”பெண்களால் விமானத்தை இயக்கமுடியும், பேருந்து, ரயில் போன்ற வாகனங்களை இயக்க முடியும். இந்த வேலையை ஏன் செய்யமுடியாது?,” என்று சுஷ்மிதாவின் அப்பா அவர்களிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.

அப்பா கொடுத்த ஊக்கத்துடன் எழுத்துத் தேர்விலும் நேர்காணலிலும் தேர்ச்சி பெற்றுள்ளார் சுஷ்மிதா.

“பயிற்சி அற்புதமான அனுபவமாக இருக்கிறது. டாடா ஸ்டீல் நிறுவனத்தின் கலாச்சாரம் ஊக்கமளிப்பதாக இருக்கும். அனைவரும் மரியாதையுடன் நடத்தப்படுவார்கள். கடுமையான உழைப்பிற்கு அங்கீகாரம் கொடுப்பார்கள்,” என்கிறார்.

ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா