ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் புக்கிங் தொடக்கம்: ரூ.499 செலுத்தி முன்பதிவு செய்யலாம்!
இப்போது முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை!
கால் டாக்சி நிறுவனமான ஓலா-வின் மின் வாகனப் பிரிவான ஓலா எலெக்ட்ரிக், தனது சென்னைப் பிரிவில் உற்பத்தியை விரைவில் துவங்கவுள்ள நிலையில், நேற்று தனது ஓலா ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளை ஆரம்பித்துள்ளதாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில்,
499 ரூபாய் செலுத்தி வாடிக்கையாளர்கள் தங்கள் ஓலா ஸ்கூட்டரை olaelectric.com தளத்தில் முன்பதிவு செய்யலாம் என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த தொகை திருப்பிச் செலுத்தக்கூடிய வைப்புத்தொகையாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இப்போது முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஓலா நிறுவனர் பவிஷ் அகர்வால்,
“இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன புரட்சி இன்று தொடங்குகிறது, நாங்கள் எங்கள் மின்சார ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளை தொடங்குகிறோம்,” என்றார்.
வரவிருக்கும் எலெக்ட்ரிக் வாகனங்களில் இது முதன்மையானது. நம்பமுடியாத செயல்திறன், தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு, விலை நிர்ணயம் ஆகியவற்றுடன், நிலையான இயக்கத்திற்கான மாற்றத்தை துரிதப்படுத்த இது உதவும். எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டில் உலகத் தலைவராவதற்கு இந்தியாவுக்கு வாய்ப்பும் ஆற்றலும் உள்ளது, ஓலாவின் மூலம் இதை வழிநடத்துவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அம்சங்கள் மற்றும் விலையை ஓலா வரும் நாட்களில் வெளிப்படுத்தும் என்று தெரிகிறது. வாடிக்கையாளர்கள் அணுகக்கூடிய வகையில் விலை நிர்ணயம் செய்யப்படும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, ஓலா ஸ்கூட்டர் ஏற்கனவே பல மதிப்புமிக்க விருதுகளை வென்றுள்ளது. இதில் CES-ல் IHS Markit Innovation Award மற்றும் ஜெர்மன் வடிவமைப்பு விருது குறிப்பிடத்தக்கது.
கால் டாக்சி நிறுவனமான ஓலாவின் மின் வாகனப் பிரிவான ஓலா எலெக்ட்ரிக், சில மாதங்கள் முன்பு உலகின் மிகப்பெரிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆலையை தமிழகத்தில் அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. ரூ.2400 கோடி முதலீட்டில் இந்த ஆலையானது அமைக்கப்படும் என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டது. இந்த ஆலையின் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இந்த மாதத் தொடக்கத்தில் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆங்கிலத்தில்: சிந்து கஷ்யப் | தமிழில்: மலையரசு