யுவர்ஸ்டோரி தமிழ் வெளியிட்ட 'பட்ஜெட் 2021’ கட்டுரைகளின் தொகுப்பு!
இந்திய அரசின் 2021-22ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இது அவர் தாக்கல் செய்யும் மூன்றாவது பட்ஜெட் ஆகும்.
இந்திய அரசின் 2021-22ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இது அவர் தாக்கல் செய்யும் மூன்றாவது பட்ஜெட் ஆகும். சுதந்திர இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக அவர் காகிதம் இல்லா பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இதன்மூலம் அரசுக்கு ரூ. 140 கோடி மிச்சமாகியுள்ளது.
சவாலான சூழல்
கடந்தாண்டு கொரோனா பிரச்சினையால் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்த மக்கள் இந்த பட்ஜெட்டை மிகவும் ஆவலாக எதிர்பார்த்திருந்தனர். ‘கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த பட்ஜெட் சிறப்பானதாக இருக்கும்’ என சமீபத்தில் நிர்மலா சீதாராமன் கூறியிருந்ததும் எதிர்பார்ப்பிற்கு ஒரு காரணம் ஆகும்.

கொரோனாவிற்கு எதிராகப் போராடிய களப்பணியாளர்களுக்கு நன்றியைத் தெரிவித்து தனது பட்ஜெட் உரையை ஆரம்பித்த நிர்மலா சீதாராமன்,
“முன்னெப்போதும் இல்லாத சூழலில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன். லாக்டவுனால் பொருளாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. லாக்டவுன் அமல்படுத்தப்படாவிட்டால் நாம் பெரும் சேதத்தை சந்திக்க நேர்ந்திருக்கும்,” என்றார்.
2021-2022 மத்திய பட்ஜெட் நாட்டின் முன்னேற்றத்திற்கு அவசியமான ஆறு முக்கிய அம்சங்களின் கீழ் அமைக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதில் முதலாவதாக சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு அமைந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, உள்கட்டமைப்பு, உள்ளடக்கிய வளர்ச்சி, மனித மூலதனத்தின் வளர்ச்சி போன்றவை இடம்பெற்றுள்ளன.
மகாகவி ரவீந்திரநாத் தாகூரின் ‘விடியல் இன்னமும் இருளாக இருக்கும் போது ஒளியை உணரும் நம்பிக்கைப் பறவை’ என்ற கவிதையை மேற்கோள் காட்டிய நிர்மலா சீதாராமன், கொரோனா பிரச்சினையில் இருந்து நாடு மீண்டு வரும் மிகவும் அசாதாரண காலக்கட்டத்தில் இந்தப் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாகத் தெரிவித்தார். மேலும் உலகப் பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிவப்பு நிற வெல்வெட் பை
வழக்கமாக பட்ஜெட் குறித்த முக்கியத் தகவல்கள் அடங்கிய கோப்புகளை பெட்டியில் வைத்து எடுத்து வருவதே வழக்கம். ஆனால், நிர்மலா சீதாராமன் இதுவரை தாக்கல் செய்த முந்தைய இரண்டு பட்ஜெட்களின் போது, சிவப்பு நிற வெல்வெட் துணியில் வைத்து லெட்ஜராக எடுத்து வந்தார். அதேபோல் இம்முறையும் சிவப்பு நிற வெல்வெட் துணியால் ஆன பையில் வைத்து டேப்-ஐ எடுத்து வந்திருந்தார் நிர்மலா சீதாராமன்.

வரலாற்றிலேயே முதல்முறையாக டிஜிட்டல் பட்ஜெட், அதாவது காகிதம் இல்லாமல் கையடக்க கணினியான டேப்லெட்டில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன். சிவப்பு நிற வெல்வெட் துணியால் செய்யப்பட்ட பையில் வைத்து அந்த டேப் கொண்டு வரப்பட்டிருந்தது. டிஜிட்டல் முறையில் மொபைல் செயலி மூலம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
சுகாதாரத்திற்கு முன்னுரிமை
“கொரோனா தடுப்பூசிக்கு மத்திய பட்ஜெட்டில் 35,000 கோடி ரூ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டிலும் கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும். புதிய தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும். சுய சார்பு இந்தியா திட்டத்தை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் உள்ளன,” என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறைக்கு கடந்த ஆண்டை விட கூடுதலாக 137 சதவீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது சுகாதாரத்துறைக்கு ரூ.2.23 லட்சம் கோடி இந்தாண்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 64,180 கோடி ரூபாய் செலவில் பிரதமரின் ஆத்மநிர்பர் ஸ்வஸ்த் யோஜனா எனப்படும் சுயசார்பு ஆரோக்கிய திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய சுகாதார இயக்கத்திற்கு உறுதுணையாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 13 சதவீத அளவிற்கு ஆத்மநிர்பர் திட்டங்களில் உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
“சுய சார்பு இந்தியா திட்டம் 5 மினி பட்ஜெட்டுகளுக்கு சமமானது. 27 லட்சம் கோடி ரூபாய்க்கான ஊக்கத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. கொரோனா காலத்தில் 80 கோடி பேருக்கு தடையின்றி உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன,” என பட்ஜெட் தாக்கலின் போது நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிதியாண்டில் விவசாயக் கடன் இலக்கு இந்த நிதியாண்டில் ரூ.16.5 லட்சம் கோடியாகவும், சிறு நிறுவனங்களின் மூலதனம் ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.2 கோடியாகவும் உயர்ந்திருக்கிறது. 16.5 லட்சம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு, தொழில்களின் வளர்ச்சிக்காக 15,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Photo courtesy: Indiatvnews
மத்திய பட்ஜெட்டில் உற்பத்தி துறைக்கு ரூ.1.97 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன. நம் நாட்டின் உற்பத்தித் துறை இரட்டை இலக்க அளவில் வளர்ச்சியை பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதை அடைய, 13 துறைகளுக்கு ஆத்மநிர்பர் பாரதத்திற்கான உற்பத்தி உலகளாவிய வல்லுனர்களை உருவாக்குவதற்கான பி.எல்.ஐ திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இளைஞர்களின் திறமைகள் ஊக்குவிக்கப்பட்டு, உலகளாவிய தரத்தில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன.
அடுத்த 3 ஆண்டுகளில் 7 ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அனைத்து விதமான தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் செய்யப்படவுள்ளது. கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலனைக் காக்க இணையதளம் ஒன்று ஆரம்பிக்கப்பட உள்ளது.
அனைத்துத் துறைகளிலும் மகளிர் இரவு நேரப் பணியை போதியப் பாதுகாப்புடன் மேற்கொள்ள தகுந்த திட்டம் அறிமுகப்படுத்தப் படவுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சாலையோர வியாபாரிகளுக்கும் சமூக பாதுகாப்பு திட்டம் விரிவுப்படுத்தப்படுகிறது.
எந்தவித செலுத்தப்பட்ட மூலதன கட்டுப்பாடும் இல்லாமல் ஒரு நபர் நிறுவனத்தை துவக்க அனுமதி உள்ளிட்ட ஸ்டார்ட் அப் மற்றும் சிறுதொழில்களுக்கு ஊக்கம் அளிக்கும் திட்டங்களை இந்த பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வரிச்சலுகை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. வரித்தணிக்கை வரம்பு 5 கோடியில் இருந்து 10 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.