Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

இந்தியா முழுதும் 28 கடைகள், ரூ.26 கோடி விற்றுமுதல்: ’பர்கர் சிங்’ வெற்றிப்பயணம்!

பர்கர் சிங் நிறுவனர் கபீர் ஜீத் சிங் யூகே செயல்பாடுகள் முதல் வட இந்தியாவில் மிகப்பெரிய பர்கர் சாம்ராஜ்யத்தை உருவாக்கியது வரையிலான பயணத்தை பகிர்கிறார்.

இந்தியா முழுதும் 28 கடைகள், ரூ.26 கோடி விற்றுமுதல்: ’பர்கர் சிங்’ வெற்றிப்பயணம்!

Tuesday July 09, 2019 , 5 min Read

கபீர் ஜீத் சிங் 2007-ம் ஆண்டு பிர்மிங்காம் பிசினஸ் ஸ்கூலில் எம்பிஏ படித்துக் கொண்டிருந்தபோது தேவையான பணம் இல்லாமல் கஷ்டப்பட்டார். ’பர்தேஸ்’ திரைப்படத்தில் வருவது போன்று வகுப்பு முடிந்த பிறகு இரவு நேரத்தில் பர்கர் அவுட்லெட் ஒன்றில் பணிபுரிந்தார்.

1

மாலை ஷிஃப்ட் முடிந்த பிறகு அவருக்கு இலவசமாக ஒரு பர்கர் வழங்கப்படும். மசாலாக்களை விளையும் பகுதியைச் சேர்ந்த கபீருக்கு வழக்கமான சுவையுடன்கூடிய பர்கர் சுவை சலிப்பூட்டியது. ஒரு முறை இந்திய மசாலா சுவை சேர்க்கப்பட்ட ஃபிராங்கி பர்கரை வழங்கவேண்டும் என தீர்மானித்தார்.

"நான் அருகில் இருந்த கடைக்குச் சென்று ஷான் மசாலாக்களை வாங்கினேன். பர்கர் பேட்டியில் அவற்றை கலக்க முயற்சி செய்தேன். எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அதன் சுவை அற்புதமாக இருந்தது. அப்போதிருந்து அதை வழக்கமாக்கிக் கொண்டேன். படிப்படியாக அங்கிருந்த எனது நண்பர்களுக்கு இந்திய-பிரிட்டானிய சுவை கலந்த பர்கரை வழங்க ஆரம்பித்தேன்,” என்கிறார் கபீர்.

விரைவிலேயே கபீரின் இந்த ஃப்யூஷன் பர்கர் சுவையினால் அந்த பர்கர் அவுட்லெட்டின் உரிமையாளர் மிகவும் பிரபலமாகிவிட்டார். அந்த பர்கர் மெனுவில் இடம்பெற்றது. அந்த ரெசிபிக்கான கட்டணத்தை கபீருக்கு வழங்கினார். ஆங்கிலேயர்களிடையே இந்திய உணவு மீதான விருப்பம் தொன்று தொட்டு காணப்படுகிறது. விரைவில் அவருக்கு ’பர்கர் சிங்’ என்கிற பெயர் வந்தது.

இந்திய சந்தையை புரிந்துகொண்டார்

கபீர் எம்பிஏ முடித்த பிறகு யூகேவில் பணி கிடைத்தது. ஆனால் பர்க்ர் சிங் திட்டம் எப்போதும் அவர் நினைவில் நீங்கா இடம் பிடித்திருந்தது.

”யுகேவில் இருந்துகொண்டு இந்திய சந்தையைப் புரிந்துகொள்ள முடியாது,” என்றார் கபீர். எனவே 2011-ம் ஆண்டு இந்தியா திரும்பினார். இந்திய சந்தையில் சில்லறை வர்த்தக பிரிவு குறித்து புரிந்துகொள்ளவும் விரைவான சேவை வழங்கும் உணவக அமைப்பு குறித்து தெரிந்துகொள்ளவும் பீர் கஃபே நிறுவன குழுவில் இணைந்து கொண்டார்.

கபீர் சுமார் இரண்டாண்டுகள் பீர் கஃபே உடன் பணியாற்றினார். 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவரது நண்பர் நிதின் ரானா உடன் இணைந்து 30 லட்ச ரூபாய் முதலீட்டுடன் பர்கர் சிங் முதல் அவுட்லெட்டைத் துவங்கினார். 98 சதுர அடி பரப்பளவு கொண்டு இந்த கடை குருகிராமின் கோல்ஃப் கோர்ஸ் சாலையில் திறக்கப்பட்டது.

”எளிமையான முறையில் துவங்கினேன். அங்கு நானே பர்கர் பேட்டியைத் தயாரித்தேன். பர்கரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவர் செய்யவேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது. அந்த சமயத்தில் யாரும் தீவிரமாக பர்கர் டெலிவரியில் ஈடுபடவில்லை. டோமினோஸ் போன்ற டெலிவரி தளத்தை எங்களது வாடிக்கையாளர்களுக்கு உருவாக்க விரும்பினோம்,” என்று கபீர் தெரிவித்தார்.

தனித்துவமான செயல்பாடுகள்

கபீர் பர்கர் சிங் செயல்பாடுகளைத் துவங்கியபோது தனித்துவமாக அமைந்திருந்தது. இந்தியர்களுக்கு பர்கர் என்பது அமெரிக்க பண்டமாகவே வழங்கப்பட்டு வந்தது. இந்தியர்களின் சுவைக்கு ஏற்ப நிறுவனங்கள் ரெசிபிகளை மாற்றியமைக்கவில்லை. எனவே பர்கரை இந்திய சுவையில் வழங்கியது பர்கர் சிங்கின் தனித்துவமான அம்சமாக இருந்தது.

அதன் பிறகு கபீர் பிஹாரி கோஸ்ட் பர்கர், சன்னா பர்கர், ராஜ்மா பர்கர், யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் பஞ்சாப் பர்கர் என அடுத்தடுத்து இந்திய சுவைகள் அறிமுகப்படுத்தினார். ஒவ்வொரு ரெசிபியும் கபீரால் உருவாக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தனித்துவமான ரெசிபிக்களை சிறப்பாக உருவாக்கிய பிறகு கபீர் விரிவுபடுத்துவதில் கவனத்தை திருப்பினார். அதிகளவிலான வாடிக்கையளார்களைச் சென்றடைந்தார். டெலிவரி தளத்தை வலுப்படுத்தினார். ஆனால் ஆரம்ப நாட்களில் குருகிராமில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு தானே சென்று பர்கர் டெலிவர் செய்தார். அவர் கூறும்போது,

”நாங்கள் சந்தையில் செயல்படத் துவங்கியபோது விரைவாக டெலிவர் செய்யும் நிறுவனங்கள் ஏதும் செயல்படவில்லை. மெக்டொனால்ட்ஸ் மட்டுமே சந்தையில் இருந்த ஒரே பெரிய நிறுவனமாக இருந்தபோதும் அந்த சமயத்தில் அந்நிறுவனமும் அதன் டெலிவரி தளத்தை உருவாக்கிக் கொண்டிருந்தது.

Carl’s Jr. Wendy’s எங்களுக்கு பிறகே சந்தையில் அறிமுகமானது. 2004-ம் ஆண்டு பீட்சா எதிர்கொண்ட அதே காலகட்டத்தை இந்தத் துறையும் அந்த சமயத்தில் எதிர்கொண்டது. நாங்கள் வெற்றிகரமான பர்கர் டெலிவர் தளத்தை உருவாக்க விரும்பினோம்,” என்றார்.

வளர்ச்சிப் பயணம்

“எங்களது முதல் அவுட்லெட் 60 நாட்களிலேயே ரொக்கத்தில் லாபமோ நஷ்டமோ இல்லாத நிலையை எட்டியது,” என்றார் கபீர். எதிர்பார்த்ததைக் காட்டிலும் இவர்களது தயாரிப்பு வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. வார இறுதி நாட்களில் தேவை அதிகம் இருந்ததால் திட்டமிட்ட நேரத்திற்கு முன்பே கடையை மூடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

”வாடிக்கையாளர்களுக்கு அதுவரை வழங்கப்படாத சேவையை நாங்கள் வழங்கினோம். அவர்கள் வாங்கும் பொருட்கள் சிறந்த மதிப்புடையதாக இருக்கவேண்டும் என்பதே அவர்களது எதிர்பார்ப்பாக இருந்தது. நாங்கள் அவற்றை அவர்களது வீட்டிற்கே கொண்டு சேர்த்தோம்,” என்றார் கபீர்.

பர்கர் சிங் பரிந்துரைகள் வாயிலாக விரிவடையத் துவங்கியது. வாடிக்கையாளர்கள் மீண்டும் வாங்கும் விகிதம் அதிகமாக இருந்தது. இரண்டு மாதங்களில் வார நாட்களில் 25 என்கிற எண்ணிக்கையில் இருந்த பரிவர்த்தனைகள் 60-ஆக உயர்ந்தது. வார இறுதியில் 35 என்கிற எண்ணிக்கையில் இருந்த பரிவர்த்தனைகள் 100-ஆக உயர்ந்தது.

2
”எங்களது தயாரிப்பு மீது எங்களது அதிக நம்பிக்கை இருந்தது. ஏனெனில் ரெசிபிக்களை உருவாக்கவும் சரியான ப்ரெட் வகையையும் எங்கள்து பர்கர்களுக்கான மூலப் பொருட்களையும் தேர்வு செய்ய கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் ஆனது. சந்தையில் எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது,” என்றார் கபீர்.

வாடிக்கையாளர்களின் வரவேற்பையும் அதிகரித்து வரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் கவனித்த கபீர் நம்பிக்கையுடன் செயல்பாடுகளை விரிவடையச் செய்தார். பர்கர் சிங் அறிமுகப்படுத்தப்பட்ட ஆறு மாதங்களில் 2015-ம் ஆண்டு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் வாயிலாக ஒரு கோடி ரூபாய் நிதி உயர்த்தி குருகிராமில் மேலும் மூன்று அவுட்லெட்களைத் திறந்தார்.

மற்றுமொரு நிதிச்சுற்றில் அஷ்வின் சட்டா மற்றும் அவ்தார் மோங்கா (ஐடிஎஃப்சி வங்கி சிஓஓ) வாயிலாக 2.5 கோடி ரூபாய் நிதி உயர்த்தினார். இந்த சமயத்தில் க்ரேட்டர் கைலாஷ், கன்னாட் ப்ளேஸ், த்வாரகா போன்ற பகுதிகளில் அவுட்லெட்கள் திறக்கப்பட்டு பர்கர் சிங் டெல்லி-என்சிஆர் முழுவதும் பரவியிருந்தது.

2017-ம் ஆண்டு இறுதியில் கபீர் 8 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி உயர்த்தி 10 அவுட்லெட்களுடனும் நான்கு ஃப்ரான்சைஸிக்களுடனும் வளர்ச்சியடைந்திருந்தார்.

2018-ம் ஆண்டு அந்த சமயத்தில் இணைந்திருந்த முதலீட்டாளர்களுடன் கூடுதலாக ஆஷிஷ் தவான் மற்றும் சஞ்சீவ் பிக்சாந்தனி ஆகிய இரு புதிய முதலீட்டாளர்களையும் இணைத்துக்கொண்டு மீண்டும் கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் நிதி உயர்த்தினார்.

தற்சமயம் பர்கர் சிங்கிற்கு 28 அவுட்லெட்கள் உள்ளன. இதில் 20 அவுட்லெட் டெல்லி என்சிஆரில் உள்ளது. ஒன்று புனேவிலும் இரண்டு தெஹ்ராதூனிலும் இரண்டு ஜெய்பூரிலும் உள்ளது. நாக்பூரில் ஒரு ஃப்ரான்சைஸும் லண்டனில் இரண்டு ஃப்ரான்சைஸும் உள்ளது. பர்கர் சிங் வருடாந்திர விற்றுமுதல் 26 கோடி ரூபாய் ஆகும்.

”உங்களது தயாரிப்பை உலகளவில் கொண்டு சேர்ப்பது குறித்து சிந்திப்பது எளிது. ஆனால் அதற்கு கடின உழைப்பு அவசியம். இந்திய உணவு வகைகள் உலகளவில் பிரபலமாக உள்ளது. லண்டனில் சோதனை முறையில் ஃப்ரான்சைஸ் செய்ய விரும்பினேன். ஓராண்டு இந்த சோதனை முயற்சி நடைபெற்று தற்போது மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது,” என்றார் கபீர்.

முக்கிய சவால்கள்

ஆனால் இந்த வளர்ச்சி அனைத்தும் சவால்கள் இன்றி சாத்தியமில்லை. கபீரைப் பொறுத்தவரை இந்திய தேவைகளுக்கு ஏற்ப மெனுவை உருவாக்குவது சவாலாக இருந்தது.

”இந்தியாவில் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு அதிகம். வெளிநாடுகளில் மெனு பட்டியலில் உள்ள ஒரு முக்கிய உணவு வகையில் இருந்து 60 சதவீத விற்பனை இருக்கும். ஆனால் இந்தியாவில் அப்படியில்லை. இங்கு பெரிய மெனு பட்டியல் அவசியம். பர்கர் சிங்கில் ஒவ்வொரு காலாண்டிலும் எங்களது பழைய தயாரிப்பை நிறுத்திக்கொண்டு புதிய உணவு வகைகளை அறிமுகப்படுத்துகிறோம்,” என்றார்.

போட்டி மற்றும் எதிர்கால திட்டம்

பர்கர் சிங் பிரபலமாகியிருப்பினும் கபீர் போட்டியாளர்கள் மீது கவனமாக இருக்கிறார்.

“வாடிக்கையாளர்களுக்கு எனக்கு பதிலாக சேவையளிப்பவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் என்னுடைய போட்டியாளர்களே,” என்கிறார்.
3

போட்டி எழும்போது அதை முறியடிக்கத் தேவையான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்கிறார். சமீபத்தில் வட இந்தியாவில் மெக்டொனால்ட்ஸ் அவுட்லெட் மூடப்பட்டது. இது மற்ற பர்கர் உணவகங்களுக்கு நன்மை பயத்தது. மெக்டொனால்ட்ஸ் அருகாமையில் அமைந்திருந்த பெரும்பாலான பர்கர் சிங் அவுட்லெட்களிலும் ஆர்டர்களும் சுமார் 36 சதவீதம் வரை அதிகரித்தது.

மெக்டொனால்ட்ஸ் அவுட்லெட் மூடப்பட்டபோது புதிய வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் கபீர் தனது குழுவுடன் இணைந்து தீவிரமாக விளம்பரப்படுத்தினார். அவர் கூறும்போது,

மெக்டொனால்ட்ஸ் மூடப்பட்டபோது அனைவரும் பலனடைந்தனர். இது காட்டில் யானை இறந்துபோவதற்கு சமமாகும். எனவே நாங்கள் இந்த செய்தியைக் கேள்விப்பட்டபோது, ’மெக்டொனால்ட்ஸ் விலகிய இந்த சமயத்தில் நாங்கள் இருக்கிறோம்’ என்கிற பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தினோம்.

எதிர்கால திட்டம் குறித்து கபீர் கூறும்போது வரும் ஆண்டுகளில் வட இந்தியாவில் 75 அவுட்லெட்களைத் திறக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். அடுத்த மூன்றாண்டுகளில் யூகேவில் 18 அவுட்லெட்களைத் திறப்பதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் செயல்முறையும் நடந்து வருவதாக தெரிவித்தார்.

ஆங்கில கட்டுரையாளர்: பலக் அகர்வால் | தமிழில்: ஸ்ரீவித்யா