பெண்கள் சொந்தமாக வணிக முயற்சியில் ஈடுபட உதவும் வணிக யோசனைகள்!
பெண்கள் தங்களது வீட்டிலிருந்தே வணிகத்தைத் துவங்க தொழில்நுட்பம் உதவுகிறது. ப்ளாக் எழுதுதல், பேக்கிங், ஃபேஷன் டிசைன் என ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.
பெண்கள் வீட்டிலும் அலுவலகத்திலும் பணிபுரிகின்றனர். எனினும் பெண்கள் வீட்டில் செய்யும் வேலை அங்கீகரிக்கப்படுகிறதா? இந்தியப் பெண்கள் நாள் ஒன்றிற்கு 352 நிமிடங்கள் வீட்டு வேலைகளுக்காகச் செலவிடுகின்றனர். அதேசமயம் வீட்டு வேலைகளுக்காக ஒரு நாளைக்கு 52 நிமிடங்கள் செலவிடும் ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் 577 சதவீதம் அதிகமாக செலவிடுகின்றனர் என்று பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) தரவுகள் சுட்டிக்காட்டுகிறது.
பெண்களின் இந்தப் பங்களிப்பு முறையாக அங்கீகரிக்கப்படுவதில்லை. ஆனால் இத்தகையச் சூழலில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதே உண்மை. வீட்டுப் பொறுப்புகளைப் பெண்களே அதிகம் சுமந்தாலும் அவர்களது உழைப்பிற்கான ஊதியமோ பாராட்டோ கிடைப்பதில்லை. வீட்டு வேலைகளில் உதவ யாரும் இல்லாத நிலை, அவர்கள் வாழும் பகுதிகளில் குறைவான வேலை வாய்ப்புகள் போன்ற பல்வேறு காரணிகளால் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் பணிக்குச் செல்ல முடிவதில்லை.
எனினும் தொழில்நுட்பமும் இணையமும் நாட்டின் தொலைதூரப் பகுதிகளையும் சென்றடையும் நிலையில் பெண்கள் தங்களது வீட்டில் இருந்தே பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கிறது. இதன் மூலம் அவர்கள் நிதிச் சுதந்திரம் அடையமுடியும்.
பெண்கள் சுயமாக முயற்சியைத் துவங்க 5 வணிக யோசனைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
மின்வணிகம் / மொத்த விற்பனை
பெண்கள் ஆர்கானிக் பொருட்கள், ஆபரணங்கள், புடவைகள், ஆடைகள், வீட்டு அலங்காரப் பொருட்கள் என அனைத்துப் பொருட்களையும் விற்பனை செய்ய ஆன்லைன் சந்தைப்பகுதிகளும் மின்வணிகமும் வாய்ப்பளிக்கிறது.
இவற்றை அவர்களாகவேத் தயாரிக்கலாம் அல்லது வெளியில் இருந்து வாங்கி வீட்டிலிருந்தே விற்பனை செய்யலாம்.
சண்முகப்பிரியா வாட்ஸ் அப்பைப் பயன்படுத்திப் புடவைகளை மறுவிற்பனை செய்துள்ளார். ரித்து கௌசிக் ஃப்ளிப்கார்ட் மூலம் வெற்றிகரமாக வணிகத்தை உருவாக்கியுள்ளார்.
நூற்றுக்கணக்கான பெண்கள் ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்து லாபம் ஈட்டி வருகின்றனர். நீங்கள் வேறு நகரத்திற்கு மாற்றலாகி சென்றாலோ வெளிநாடுகளுக்கு மாற்றலாகிச் சென்றாலும்கூட உங்கள் வணிகத்தைத் தொடர்ந்து நடத்தலாம். ஃப்ளிப்கார்ட், அமேசான் போன்ற தளங்களைப் பயன்படுத்தியோ அல்லது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்தியோ உங்களது பொருட்களை விற்பனை செய்யலாம்.
ப்ளாக் எழுதுதல்/கதை சொல்லுதல்
ப்ளாக் எழுதுபவர்களும் கதை சொல்பவர்களும் பணம் ஈட்டுவதில்லை என்கிற தவறான கருத்து மக்களிடையே காணப்படுகிறது. ஃபேஷன் மற்றும் லைஃப்ஸ்டைல் தொடர்பாக ப்ளாக் எழுதும் மசூம் மினாவாலா மற்றும் ஆயூஷி பங்கூர் ஆரம்பத்தில் சிறியளவிலேயே துவங்கியுள்ளனர். ஃபேஷன் துறையில் செயல்படும் நிறுவனங்கள் மற்றும் பிராண்டுகளிடையே பிரபலமாகியுள்ளனர்.
உங்களுக்கு எழுதும் திறன் இருக்குமானால் ஃப்ரீலான்ஸ் முறையில் உள்ளடக்கம் எழுதும் வாய்ப்பும் உள்ளது. ஏதேனும் ஒரு துறை அல்லது விரிவான மையக்கருத்தை தீர்மானித்ததும் டொமெயின் பெயரையும் ஹோஸ்டிங் ப்ரொவைடரையும் தேர்வு செய்து ப்ளாக் எழுதத் துவங்கலாம்.
விருந்தோம்பல் சேவை
தற்போது உலகம் முழுவதும் இருந்து வரும் பயணிகளுக்கு மக்கள் தங்களது வீட்டை தங்குமிடமாக வழங்குவதற்கான வசதியை உலகளவில் செயல்படும் ஆன்லைன் சந்தைப்பகுதியான ஏர்பிஎன்பி வழங்குகிறது. பெண்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏர்பிஎன்பி உடன் கையெழுத்திட்டு நீங்கள் விருந்தோம்பல் செய்யலாம்.
உங்களுக்கும் உங்களது சொத்துகளுக்கும் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுவதுடன் உங்களது விருந்தினரை நீங்களே தேர்வு செய்து கட்டுப்பாடுகள் விதிக்கலாம். மேக்மைட்ரிப் போன்ற பிற பயண ஏற்பாட்டு நிறுவனங்களும் ஹோம்ஸ்டே பட்டியலை வழங்குகிறது. எனவே உங்கள் வீட்டின் ஒரு பகுதியைப் பயன்படுத்தி நீங்கள் வருவாய் ஈட்டலாம்.
கேட்டரிங், சமையல், பேக்கிங்
வீட்டிலேயே பேக்கிங் செய்வது அல்லது கேட்டரிங் என உணவுத் துறை லாபகரமான பிரிவாக உள்ளது. உங்களது சமையல் திறனைப் பயன்படுத்தி லாபம் ஈட்டுவதுடன் சிறப்பாக வளர்ச்சியடையவும் முடியும். பலர் இவ்வாறு சிறியளவில் வீட்டிலேயே பேக்கிங் செய்யத் துவங்கி கேக் ஷாப், கஃபே, பேக்கிங் பள்ளிகள் என பெரியளவில் வளர்ச்சியடைந்துள்ளனர்.
உங்களது திறனையும் தயாரிப்பையும் பரிசோதனை செய்ய உள்ளூரில் இருக்கும் மலிவு விலை சந்தையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அல்லது வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற தளங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். வீட்டிலேயே பேக்கிங் செய்பவர்களை அவர்களுடைய வாடிக்கையாளர்களுடன் இணைக்க அனுராதா காம்பி, அஞ்சத் லத் ஆகிய தொழில்முனைவோர் உருவாக்கியுள்ள HomeBakers.co.in போன்ற சந்தைப்பகுதிகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
உங்களால் தரமான சுத்தமான உணவைத் தயாரிக்கமுடியும் எனில் வீட்டிலிருந்து டிஃபன் செண்டரை நடத்தலாம். ஒரு சில ஆர்டர்களுடன் சிறியளவில் துவங்கி படிப்படியாக வளர்ச்சியடையலாம்.
ஆன்லைன் வகுப்புகள்
தனிப்பட்ட நிதி, சமைப்பது, சுய மேம்பாட்டு புத்தகங்கள் என யூட்யூபர் சலோனி ஸ்ரீவாஸ்தவாவிற்கு யூட்யூபில் ஏராளமான ஃபாலோயர்கள் உள்ளனர். அதிகளவிலான பெண்கள் தங்களது பணிவாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள யூட்யூபைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
புடவை டிரேப்பிங், கணிதம் கற்றுக்கொடுத்தல், மேக்அப் பயிற்சி, அம்மாக்களுக்கும் குழந்தைகளுக்கும் வீடியோக்கள் என உங்களது மாறுபட்ட சிந்தனைகளைக் கொண்டு வருவாய் ஈட்டி பிரபலமாகலாம்.
பெண்கள் பயன்படுத்திக்கொள்ள ஆன்லைனில் ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. எனவே நீங்கள் மற்றவர்கள் செயல்படுவதை கவனித்து கற்றுக்கொண்டு உங்களது முயற்சியைத் துவங்கலாம்.
உங்களுக்கு ஆர்வம் அதிகமுள்ள துறையைக் கண்டறிந்து நீங்கள் களமிறங்கலாம். சரியான பாதையில் பயணிக்க சிறிது அவகாசம் தேவைப்படலாம். ஆனால் அதன் பின்னர் வளர்ச்சியும் வெற்றியும் சாத்தியப்படும்.
ஆங்கில கட்டுரையாளர்: தன்வி துபே | தமிழில்: ஸ்ரீவித்யா