கோடிகளில் வருமானம் ஈட்டும் 5 ‘மேட் இன் இந்தியா’ காலணி பிராண்டுகள்!
பாட்டா, நைக், அடிடாஸ்-க்கு போட்டியாக கோடிகளில் வருமானம் ஈட்டும் 5 காலணி பிராண்டுகள்!
சைனாவிற்கு அடுத்த படியாக இந்தியா தான் மாபெரும் காலணிகள் உற்பத்தியாளர். இந்திய காலணிச் சந்தையில் 75% அதிகமாக, அமைப்புசாரா உற்பத்தியாளர்களிடம் இருந்து தான் வருகிறது என ஆய்வு அறிக்கை கூறுகிறது.
கான்பூர், ஆக்ரா, ராணிப்பேட்டை, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகியவைதான் காலணி உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் ஊர்கள். மேலும் இன்றைய நிலையில் மக்களின் வாழ்வாதார, பொருளாதார முன்னேற்றம், மற்றும் ஊடக வளர்ச்சி ஆகியவை எவ்விதமான காலணிகள் அவர்கள் அணிகிறார்கள் என்பதன் பின்னணியில் உள்ளன.
அமைப்பு சார்ந்த சந்தையில் பாட்டா, நைக்கி, அடிடாஸ், பூமா, போன்ற நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. ஆனால் வாடிக்கையாளர்களின் எண்ணம் வெகுவேகமாக மாறி வருகிறது. இதன் காரணமாக புதியவற்றை உற்பத்தி செய்தாக வேண்டிய சூழல் காலணி சந்தையில் உருவாகியுள்ளது. இந்நிலையில் அப்படிப்பட்ட பொருட்கள் கொண்டு அமைப்புசாரா துறையைக் கைப்பற்றவும் போட்டி உள்ளது.
அப்படி இந்தத் துறையில் வளர்ந்து வரும் 5 ‘மேட் இன் இந்தியா’ பிராண்டுகள் அவற்றின் வருமானம் குறித்த கட்டுரை இது.
உட்லண்ட் (Woodland) :
இப்பொழுது உள்ள இளைஞர்கள் பலரும் விரும்பி அணியும் உட்லண்ட் நிறுவனம் இந்திய தொடர்பு கொண்டது. இதன் தாய் நிறுவனமான 'ஏரோ குரூப்ஸ்' நிறுவனத்தை கனடாவில் அவதார் சிங் 1980களில் நிறுவினார்.
அப்பொழுது கனடா மற்றும் ரஷ்யாவிற்கு குளிர்கால காலணிகளை தயாரித்து வந்தது இந்நிறுவனம். ஆனால் 1990 களில் சோவியத் யூனியன் உடைந்த பிறகு ரஷ்ய சந்தை சரிந்தது.
பின்னர் 1992ல் இந்திய சந்தையின் நிலையை ஆராய்ந்து இங்கு நிலவும் வளர்ச்சியை பயன்படுத்த ஏரோ குரூப்ஸ் முடிவு செய்தது. எனவே ஏரோ குரூப்ஸ் அங்கமாக உட்லாண்ட்ஸ் உருவாகியது.
"இன்று பல்வேறு நாடுகளில் உட்லண்ட் காலணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. சுலபமான ஏற்றுமதிக்காக இந்த ஏற்பாடு. முக்கிய தயாரிப்பு ஆலை இந்தியாவில் நொய்டாவில் நடக்கிறது. பஞ்சாபில் ஜலந்தர் நகரில் இருந்து எங்களுக்குத் தேவையான தோல் கிடைக்கிறது. மேலும் பங்களாதேஷ், தைவான், மற்றும் சைனா போன்ற நாடுகளில் உள்ள வணிகர்கள் மூலம் மூலப்பொருட்கள் கிடைக்கின்றன.
ஷூக்கள் தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருட்கள், அவற்றின் மிதியடி முதற்கொண்டு எங்கள் தயாரிப்பே. இத்தாலிய இயந்திரங்கள் கொண்டு தோல் பதப்படுத்தப்பட்டு, பின்னர் கைகளால் அந்த இத்தாலிய தோல் காலணியாக மாற்றம் அடைகின்றது. ஜெர்மன் தொழில்நுட்பம் மூலம் கடினமான ரப்பர் கீழ்ப்பாகம் உருவாகிறது.
தனது பிராண்டிற்கு மட்டுமே 600 கடைகளை நாடெங்கும் கொண்டுள்ளது உட்லண்ட். மேலும் 5,500 கடைகளில் இவர்களின் பொருட்கள் கிடைக்கின்றன. வருடத்தில் ரூ.1250 கோடி மதிப்புள்ள வணிகம் நிகழ்கிறது.
முழுதாக அறிய இங்கே கிளிக்கவும் :
லக்கானி (Lakhani)
1966ல் பரமேஸ்வர் தயாள் லக்கானி, ‘லக்கானி’ நிறுவனத்தை நிறுவினார். இன்றும் இந்தியாவில் தயாராகும் இந்த நிறுவன காலணிகளுக்கு இந்திய வீடுகளில் வரவேற்பு உள்ளது. ஆனால் 2000-வது ஆண்டில் சர்வேதச நிறுவனங்கள் இந்தியாவின் உள்ளே வந்த பொழுது லக்கானி நிறுவனத்திற்கு சற்று பின்னடைவு ஏற்பட்டது.
மயங்க் லக்கானி, லக்கானி வார்தானில் இரண்டாம் தலைமுறை தொழில்முனைவோராக வந்தவர் நிறுவனத்தின் பாரம்பரிய வியாபார முறையை மாற்றி அமைத்தார்.
"மக்களில் பெரும் பகுதியானவர்களுக்காக லக்கானி காலணிகள் தயார் செய்கிறது. அதே விஷயத்தை வேறு விதமாக செய்ய நான் முடிவு செய்தேன். உற்பத்தியில் 90% வெளியாட்களிடம் ஒப்படைத்தேன். இதே முறையை தான் சர்வதேச நிறுவனங்கள் பின்பற்றுகின்றன," என்கிறார் மயங்க்.
அவர்தான் லக்கானி இன்பினிட்டியில் பிராண்ட் சோர்சிங் என்ற முறையை துவக்கி வைத்துள்ளார். வெளியாட்கள் இவர்கள் பொருட்களை தயாரித்து கொடுக்க, இவர்களிடம் உள்ள அணி அவற்றை மிகக்கடுமையாக தரத்திற்காக சோதனை செய்கின்றன.
மூலப்பொருட்களை டெல்லியில் இருந்தும், ரப்பரை தென் இந்தியாவில் இருந்தும் பெறுகின்றனர். ரூபாய் 100ல் இருந்து 1400 வரை இவர்கள் பொருட்களின் விலை உள்ளது. விளையாட்டு காலணிகள், கேன்வாஸ் காலணிகள், சிலிப்பர்கள், ஹவாய் செருப்புகள் மற்றும் பல காலணி வகைகள் உள்ளன.
2018ல் நிறுவனம் 100 கோடி மதிப்புள்ள வணிகத்தை எட்டியுள்ளது. தற்போதைய நிலையில் 105 கோடி பெறுமானமுள்ள வணிகம் இவர்கள் வசம் உள்ளது. 2021 ல் 200 கோடி வருமானமாக பெற வேண்டும் என லட்சியம் கொண்டு இயங்கி வருகின்றனர்.
எஸ்கேஓ (SKO)
இதயம் இருக்கும் இடம்தான் வீடு என்று கூறுவார்கள். எஸ்கேஓ நிறுவனர் நிஷாந்திற்கு இது கட்சிதமாக பொருந்தும். 13 ஆண்டுகளுக்கு முதலீட்டு வங்கியாளராக அயல் நாட்டில் பணியாற்றி வந்தார் நிஷாந்த். அவருக்கு மீண்டும் இந்தியா வந்து தொழில் துவங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.
30 ஆண்டுகளாக அவரது குடும்பம் காலணி தொழில் செய்து வந்தனர். எனவே தானும் அதேth துறையில் நுழைய முடிவு செய்தார் நிஷாந்த்.
"இந்தியாவில் காலணிகள் சந்தையில் அழகான காலணிகளுக்கு இடம் இருந்தது. உயர்தரம் கொண்ட தோல் கொண்டு தயாரிக்கப்படும் காலணிகளை உருவாக்க முடிவுசெய்தேன். அவற்றின் ஆயுட்காலம், அணியும் அனுபவம் வடிவம் ஆகியவற்றில் கவனம் செலுத்தினேன்," என்கிறார் நிஷாந்த்.
2018 ல் தனது சொந்த பணத்தை 'எஸ்கேஓ' நிறுவனம் துவங்க முதலீடு செய்தார். ஸ்கேன்டினேவிய வடிவம் தரம் கொண்ட காலணிகளை உருவாக்கினார். எஸ்கேஓ நிறுவனத்திற்கு ஸ்கேன்டினேவிய வடிவம் தரம் இரண்டும் வளர உதவியாக இருந்தன. முதல் வருடத்திலேயே 1.5 கோடி வருமானம் ஈட்டியுள்ளது இந்நிறுவனம்.
ஸ்னீக்கர்ஸ், எஸ்பாட்ரில்லீஸ், மியூல்ஸ், சாண்டில்ஸ், மற்றும் ஆண்களுக்கு லோபர்கள் பெண்களுக்கு ஹீல்ஸ் போன்றவற்றை தயாரிக்கிறது. இந்த காலணிகள் அனைத்தும் மும்பையில் ஐரோப்பிய வடிவமைப்பாளர்கள் கொண்டு உருவாக்கப்படுகின்றன. பின்னர் டேராதூனில் உள்ள இவர்கள் தொழிற்சாலையில் 150 பணியாளர்கள் கொண்டு உற்பத்தி நிகழ்கிறது.
ரெட்சீஃப் (Red Chief)
மனோஜ் கியான்சந்தானி, தனது 20வது வயதில் காலணிகள் ஏற்றுமதி தொழிலைத் துவங்கினார். 1995ல் லீயான் குளோபல் பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்தை ஐரோப்பாவிற்கு காலணிகள் ஏற்றுமதி செய்யத் துவக்கினார்.
இருந்தாலும் இந்திய காலணிகள் சந்தையானது அமைப்பு சாரா சந்தையாக இருப்பதை உணர்ந்தார். அதன் பின்னர் ஏற்றுமதி தொழிலை விடுத்து, இந்திய சந்தையை ஆய்வு செய்து தன் நிறுவனத்தின் அங்கமாக ‘ரெட்சீஃப்’ பிராண்டை 1997ல் துவக்கினார்.
முதலில் கான்பூரில் திடமாக தனது நிறுவனத்தை நிறுவ விரும்பினார். அங்கிருந்த காலணி கடைகளில் தனது பொருளையும் விற்பனைக்கு கொடுத்து வந்தார். இது 2010 வரை தொடர்ந்து நடந்து வந்தது. பின்னர் மற்ற மாநிலங்களிலும் தனது காலணிகளைக் கடைகளுக்கு கொடுக்கத் துவங்கினார். 2011ல் ரெட்சீஃப்புக்கு என தனியாக கடைகளை கான்பூரில் திறந்தார்.
இன்று உத்தர் பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, சதீஸ்கர் உட்பட இந்தியாவில் 175 கடைகள் உள்ளது. மேலும் 3000 கடைகளில் மற்ற பிராண்டோடு சேர்ந்து இவர்கள் ரெட்சீஃப் பிராண்டும் விற்பனையாகின்றது.
வருடத்திற்கு 324 கோடி வருமானமாக பெறுகின்றது இந்நிறுவனம்.
"80% பொருட்கள் எங்களால் தயாரிக்கபடுகின்றது. எங்களிடம் ஒட்டுமொத்தமாக தோல் மற்றும் காலணி தயாரிப்பு ஆலை உள்ளது. மேலும் சொந்தமாக பதனிடும் தொழிற்சாலையும் உள்ளது. கான்பூர், ஹரித்வார் நகரங்களில் மேலும் 3 தொழில்சாலைகள் உள்ளன," என்கிறார் மனோஜ்.
இன்க்.5 (Inc.5)
ஒரு காலணியை வடிவமைக்கும் பொழுது ஸ்டைல் மற்றும் அணியும் சுகம் இரண்டையும் ஒரு சேரத் தருவது மிகவும் கடினம். இவை இரண்டும் தனக்கு வேண்டும் என அல்மாஸ் நந்தாவும் மிகவும் கடினமாக தேடி வந்தார். 1998ல் அவரது 24 வயதில், இன்க்.5 ஐ அவர் துவக்கினார். காலணிகளில், தான் தேடிய இரண்டும் மற்றப் பெண்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பது அவரது நோக்கமாக இருந்தது.
அல்மாஸ் சகோதரர் அமின் விர்ஜி, எவ்வாறு மும்பையில் உள்ள ஹீரா பண்ணா மாலில் ஒரு கடையில் துவங்கி இன்று இந்தியா முழுவதும் 54 கிளைகள் திறந்தோம் என்பதை நினைவுகூருகிறார்.
" 1954ல் ரீகல் ஷூஸ் என்ற நிறுவனத்தை எங்கள் தாத்தா துவங்கினார். அந்த தொழிலை எங்கள் குடும்பம் நடத்திவந்தது. சாதாரண மற்றும் பள்ளி காலணிகள் மட்டுமே நாங்கள் உற்பத்தி செய்துவந்தோம். 1998ல் இந்திய காலணிகள் சந்தையில் இறங்கினால் என்ன என்று தோன்றியது. அவ்வாறு தான் இன்க்.5 உருவாகியது," என்கிறார் அவர்.
2001ல் ரீகல் ஷூஸ் மற்றும் இன்க்.5 இணைந்து இன்க்.5 ஷூஸ் பிரைவேட் லிமிட்டட் ஆனது. டெல்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், அஹமதாபாத், கான்பூர், லக்னோ, பூனே உட்பட முதல் மற்றும் இரண்டாம் தர நகரங்களில் உறுதியாக கால்பதித்துள்ள இந்நிறுவனம் ஒரு ஆண்டில் 163 கோடி வருமானத்தை எட்டியுள்ளது.
தற்பொழுது சில பொருட்களை சீனா, வியட்நாம், தைவான் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கின்றனர். டெல்லி ஆக்ரா கான்பூர், சென்னை போன்ற இடங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு ஆர்டர் தந்து உற்பத்தி செய்கின்றனர்.
ஆக்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில் : கெளதம் தவமணி