#100Unicorns | 'யுனிக்' கதை 06 | Paytm: அன்று ஆங்கிலம் பேசத் திணறிய விஜய் சேகர் சர்மாவின் பில்லினியர் பாய்ச்சல்!
உத்தர பிரதேசத்தில் ஒரு ஆசிரியரின் மகனாக பிறந்து ஆங்கில பேச கஷ்டப்பட்ட ஒரு இளைஞர் பின்னாளில் பில்லியன் டாலர் மதிப்பு நிறுவனத்தை கட்டமைப்பார் என எண்ணிப் பார்க்காத வளர்ச்சியை அடைந்த பேடிஎம் விஜய் சேகர் சர்மா.
#100Unicorns | 'யுனிக் கதை 06 | Paytm
பேடிஎம் கரோ... இனி பேடிஎம் பேசும்... என இந்தியா முழுவதும் தங்களது விளம்பரங்களால் மக்கள் மனதில் இடம்பிடித்த பிரபல ப்ராண்டாகியது
.எங்கு பார்த்தாலும் பேடிஎம். எதிலும் பேடிஎம், என சுமார் 10 ஆண்டு காலத்தில் ஓஹோ என்ற வளர்ச்சியை பெற்றிருக்கிறது இந்நிறுவனம். இந்த பிரம்மாண்ட வெற்றியை சாத்தியமாக்கியிருக்கிறார் அதன் நிறுவனர் விஜய் சேகர் சர்மா. அவரின் வெற்றிக்கதை உற்சாகம் அளிப்பதாகவே இருக்கிறது.
சாதாரணப் பின்னணியைச் சேர்ந்த ஒருவர் கோடீஸ்வர தொழிலதிபராக உருவாகி இருக்கிறார் என்பது மட்டும் அல்ல, தொழில்முனைவின் மீதும், இந்திய ஸ்டார்ட்அப் பரப்பின் மீதும் அவருக்கு இருக்கும் நம்பிக்கை மற்றும் ஊக்கத்தின் அடையாளமாகவும் அவரது வெற்றிக்கதை அமைகிறது.
Vijay Shekhar Sharma-வின் தொலைநோக்கும், டிஜிட்டல் உலகம் பற்றிய புரிதலும் நிறுவன வெற்றிக்கு அடித்தளமாக இருப்பதை புரிந்து கொள்ளலாம்.
மக்கள் அணுதினமும் பேடிஎம்மை பயன்படுத்தி வரும் சூழலை நாம் பார்க்கிறோம். அதேசமயம், 2.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐபிஓ வெளியீட்டுடன், பேடிஎம் பங்குச்சந்தையில் நுழைந்து கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இப்படியிருக்க நிறுவனர் விஜய் சேகர் சர்மாவின் வெற்றிக்கதையை திரும்பிப் பார்ப்பது தற்போது பொருத்தமாக இருக்கும்.
18,300 கோடி ரூபாய் அளவிலான ஐபிஓ, அதன் முன்னாள் மற்றும் தற்போதைய ஊழியர்களில் கிட்டத்தட்ட 350 பேர் தலா ரூ.1 கோடி நிகர மதிப்புடன் கோடீஸ்வரர்களாக மாறுவார்கள் என்று கூறப்படுகிறது. ராய்ட்டர்ஸ் ரிப்போர்டின்படி, ஏழு அல்லது 10 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 1,000 ஊழியர்களைக் கொண்ட நிறுவனம், தற்போது 10,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் இயங்கி வருகிறது.
யார் இந்த விஜய் சேகர் சர்மா?
இந்தியாவின் இளம் கோடீஸ்வர தொழில்முனைவராக உருவான விஜய் சேகர் சர்மாவின் நிகர மதிப்பு வியக்க வைப்பதாக இருந்தாலும், அவரது ஆரம்பம் எளிமையாகவே இருக்கிறது. சர்மாவின் சொந்த மாநிலம் உத்தரப் பிரதேசம். அலிகாரில் பள்ளி ஆசிரியரின் மகனாக பிறந்து வளர்ந்தவர், டெல்லியில் பொறியியல் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார்.
ஆரம்பத்தில் விஜய் சேகர்சர்மாவுக்கு டெல்லி வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. காரணம், சிறிய நகரத்தில் வளர்ந்த ஒருவருக்கு டெல்லி போன்ற பெரும் நகரம் அச்சமூட்டியது.
குறிப்பாக, ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியாத அவரின் கல்லூரி நாட்கள் பெரும் தடையாக இருந்தது. எல்லாவற்றையும் இந்தியிலேயே பேசிப் பழகியவர், ஆங்கிலம் சரியாகத் தெரியாததால், கடைசி பெஞ்சில் தஞ்சம் அடைந்து வகுப்புப் பாடங்களைக் கவனிப்பதையும் விட்டுவிட்டதாகக் கூறியிருக்கிறார்.
இப்படி மன உளைச்சலுக்கு உள்ளான சூழலிலும், இந்த நிலையில் இருந்து வெளியே வர வேண்டும் எனும் உத்வேகம் அவருக்கு இருந்தது. அதன் பயனாக ஆங்கில அகராதிகள் உதவியோடு ஆங்கில மொழியில் பயிற்சி பெற்றார்.
கனவை நோக்கிய பயணம்
தனக்கு வராத ஒன்றை துரத்திப் பிடிப்பது விஜய் சேகர் சர்மாவின் வைராக்கியக் குணம். அப்படி தனக்கு வராத ஆங்கிலத்தை எட்டிப்பிடிக்க பழைய ஆங்கில பத்திரிகைகளை வாங்கி படிக்க ஆரம்பித்தார். ஒரு முறை ஃபார்ச்சூன் பத்திரிகை கட்டுரைகள் மூலம் சிலிக்கான் வேலி மற்றும் இணையம் பற்றி தெரிந்து கொண்டு, தான் இருக்க வேண்டிய இடம் இதுதான் என முடிவு செய்தார்.
ஆனால், அவரது சிலிக்கான் வேலி கனவுக்கு பெரும் தடை இருந்தது அவரது கல்வித்தகுதி. 1990-களில் ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் எம்பிஏ பட்டம் பெற வேண்டும் என்றால் 2 லட்சத்திற்கும் மேல் கல்விக்கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது.
பணம் இல்லாததால் படிப்பை தொடர முடியவில்லை. ஆனால், அவரிடம் மனம் இருந்தது. தனக்குள் இப்படி சொல்லிக்கொண்டார்...
'ஒருநாள் எல்லாவற்றையும் மாற்றி செல்வம் ஈட்டி, பட்டதாரிகளை பணியில் அமர்த்துவேன்!' என்று மனதிற்குள் உறுதி பூண்டார் விஜய் சேகர்.
கல்லூரியில் இருந்த போதே அவர் தேடியந்திரம் ஒன்றை நடத்திக்கொண்டிருந்தார். அந்த நிறுவனத்தை விற்றுவிட்டு 2000ம் ஆண்டில் ரூ.8 லட்சம் கடன் பெற்று One97 Communications நிறுவனத்தைத் துவக்கினார். மொபைல் நிறுவனங்களுக்கான உள்ளடக்கச் சேவையை இந்நிறுவனம் வழங்கியது.
இந்நிலையில்தான், கடந்த 2010-ம் ஆண்டு One97 Communications-ன் அங்கமாக டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான ‘Paytm’ சேவை உதயமானது. டிஜிட்டல் வாலெட் மூலம் பரிவர்த்தனை சேவையை வழங்கிய பேடிஎம், மெல்ல வளர்ச்சி அடைந்த நிலையில், உபெர் நிறுவனம் அதை பரிவர்த்தனை வசதியாகத் தேர்வு செய்தது மற்றும் 2016-ம் ஆண்டின் பணமதிப்பு நடவடிக்கை ஆகியவற்றுக்கு பின் வேகமான வளர்ச்சி கண்டது.
மக்கள் அனைவரும் டிஜிட்டலை நோக்கி ஓட ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு பேடிஎம் உற்ற துணையாக இருந்தது. இதனிடையே, ரத்தன் டாடா மற்றும் அலிபாபாவின் ஜாக் மா, சாப்ட்பேங்கின் மாயசோஷி சன் ஆகியோரின் முதலீட்டை பெற்ற பேடிஎம் டிஜிட்டல் பரிவர்த்தனை மட்டும் அல்லாமல் இ-காமர்ஸ் மேடையாகவும் உருவாகி இன்று பொதுப் பங்குகளை வெளியிட்டுள்ளது.
“தொழில்முனைவுத் திறனும், தன்னம்பிக்கையும் கலந்திருக்கிறது. நீங்கள் சிறிய நகரில் இருந்து அல்லது பெரிய நகரில் இருந்து வந்தவர் என்பதெல்லாம் ஒரு பிரச்சனையே அல்ல ஈடுபாடு தான் முக்கியம்!”
- இதுதான் விஜய் சேகர் சர்மாவின் வாக்கு.
இன்று கோடிகளில் கொழித்தாலும் விஜய் சேகர் சர்மாவின் ஆரம்ப கால சம்பளம் எவ்வளவு தெரியுமா? வெறும் பத்தாயிரம் மட்டுமே.
ஆனால், 2017-ம் ஆண்டு இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியலில் இடம்பிடித்தவர் அவர். இந்த மலையளவு சாதனை அவரின் உழைப்பால் விளைந்தது. தொடக்கத்தில் 10,000 ரூபாய் வருமானம் ஈட்டியதால் திருமணம் அவருக்கு ஒரு பெரிய சிக்கலாக இருந்தது. ஏன் சில இடத்தில் பெண் வீட்டார் அவர் சம்பளத்தை அறிந்துகொண்டு 'மாப்பிள்ளை வேண்டாம்' என திருப்பி அனுப்பிய நிகழ்வும் அரங்கேறியது. மிகுந்த மன உளைச்சுக்கு ஆளாகியிருந்தார் அவர்.
அப்போது அவரது தந்தை, ''நிறுவனத்தை மூடிவிட்டு, வேறு வேலையை தேடிக்கொள், 30 ஆயிரம் கிடைத்தாலும் போதும்...'' என கூறினாராம். ஆனாலும் விஜய் சேகர் சர்மா தனது தொழில்முனைவு தாகத்தை விடுவதாக இல்லை.
நிறுவனத்தை மூடிவிடுமாறு தந்தை கூறிய நிலை மாறி, சீனாவின் ஆன்ட் குழுமம் பேடிஎம் நிறுவனத்தில் முதலீடு செய்த போது, அதன் சந்தை மதிப்பு உயர்ந்து, விஜய் சேகர் சர்மாவின் நிகர மதிப்பு தொடர்பாக இந்தி பத்திரிகையில் செய்தி வெளியானதை பார்த்து,
‘உன்னிடம் நிஜமாகவே இவ்வளவு பணம் இருக்கிறதா?’ என அவர் அம்மா வியந்து கேட்கும் நிலையும் உருவானது. ஃபோர்ப்ஸ் பத்திரிகை அவரது மதிப்பு 2.4 பில்லியன் டாலர் என மதிப்பிட்டுள்ளது.
நம்பிக்கையால் நடந்த அசாத்தியம்
தொழில் முனைவிலும் சரி, இந்திய ஸ்டார்ட் அப்பிலும் சரி விஜய் சேகர் சர்மா அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்தார். அதுதான் அவரை இந்த இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது.
பேடிஎம் பாதை பற்றியும் அவருக்குத் தெளிவான திட்டமும், தொலைநோக்கும் இருந்துள்ளது. ’நான் நிதிநுட்பத் துறையை பின் தொடர்வதில்லை, வாடிக்கையாளர் பயணத்தை பின் தொடர்கிறேன்,’ என அவர் கூறியிருக்கிறார்.
“பேடிஎம் வளர்ச்சி வியக்க வைப்பதாக இருந்தாலும் அதன் லாபம் ஈட்டும் தன்மை பற்றிய கேள்விகளும் இல்லாமல் இல்லை. லாபம் ஈட்டுவதை விட ரொக்க வரத்தே முக்கியம்,” என்று விஜய் சேகர் சர்மா கூறியிருக்கிறார்.
ஸ்டார்ட்அப் குறித்து ஒருமுறை அவர்...
"நாங்கள் நிறுவனத்தை துவங்கிய பிறகு ஸ்டார்ட்அப் மனநிலையில் பெரும் பாய்ச்சல் நிகழ்ந்துள்ளது. அப்போது முதலீட்டாளர்களே இல்லை. ஆனால், இன்று இந்தியாவில் எதையும் உருவாக்கலாம். இந்திய தொழில் முனைவோராக இருந்தால் உலகின் எந்த முதலீட்டாளரையும் உங்களால் சந்திக்க முடியும்.”
இது பற்றி அவர் கடந்த ஆண்டு யுவர்ஸ்டோரி டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்ச்சியில் பேசும்போது குறிப்பிட்டிருந்தார்.
உங்களின் இன்ஸ்பிரேஷன் யார் என கேட்டபோது, ஃபிளிப்கார்ட்டின் சச்சின் பன்சல் மற்றும் ஒலாவின் பாவிஷ் அகர்வால் போன்றோரே தனக்கான ஊக்கம் என்றும் அவர் கூறினார்.
இந்தியச் சந்தை தவிர வெளிநாடுகளிலும் நிறுவனம் விரிவாக்கம் செய்து வருகிறது. சர்வதேச விரிவாக்கத்தில் கவனம் செலுத்தினாலும் இந்தியச் சந்தை முக்கியமானது என அவர் கருதுகிறார்.
எப்போதுமே பிரதானமாக இந்திய வருவாய் நிறுவனமாக இருப்போம், சர்வதேச லாபத்தை இந்தியாவில் முதலீடு செய்வோம் என்றும் அவர் யுவர்ஸ்டோரி பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
இந்த வெற்றி பயணத்தின் மற்றொரு மைல்கல்லாக பேடிஎம் பங்குச்சந்தையில் நுழைந்து பொது பங்குகளை வெளியிட்டுள்ளது. இன்று மும்பை பங்குச்சந்தையில் நிறுவன பங்குகள் வர்த்தகமாகத் துவங்கிய போது விஜய் சேகர் சர்மா உணர்ச்சி வசப்பட்டு கண்ணீருடன் காணப்பட்டார்.
“எங்கள் எதிர்காலம் என்ன என்பதை ஒரு நாள் தீர்மானித்துவிடாது. இது புதிய வர்த்தக மாதிரி. இதைப் புரிந்து கொள்ள ஒருவருக்கு அவகாசம் தேவை,” என்று விஜய் சேகர் சர்மா உதிர்த்த வார்த்தைகளுக்குக் காரணம்...
முதல் நாள் வர்த்தகத்தில் நிறுவன பங்குகள் விலை சரிந்தது சற்று ஏமாற்றமாக அமைந்தது. பேடிஎம் நிறுவனத்தின் வர்த்தக மாதிரியின் தன்மை குறித்த முதலீட்டாளர்கள் மத்தியில் இருக்கும் கேள்விகளே இந்த சரிவிற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. ஆனால், விஜய் சேகர் சர்மா இந்த சரிவால் கவலைப்படவில்லை என அவர் கூறியிருக்கிறார்.
“பேடிஎம் லாப விகிதம் இல்லாத வர்த்தகத்தில் இருக்கிறது. உள்ளடக்கம், வர்த்தகம், விளம்பரம் மூலம் தான் வருவாய் கிடைக்கும். இவற்றின் மீது நிதிச்சேவைகளை உருவாக்குவோம்,” என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தியாவின் 6-வது யூனிகார்ன் நிறுவனமாக உருவெடித்த பேடிஎம், தொடர்ந்து ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது என்னமோ உண்மை.
Paytm-ன் இ-காமர்ஸ் தளமான Paytm Mall-இல் இருந்து பிரபல தொழில்முனைவரும், முதலீட்டாளருமான அலிபாபா நிறுவனர் ஜாக் மா வெளியேறியது முதல், பேடிஎம் பங்குகள் தொடர் சரிவு வரை பல பிரச்சனைகள் வந்தாலும், மனம் தளராத காளையாக தொடர்ந்து, தான் கட்டியெழுப்பிய நிறுவனத்தை தாங்கிப்பிடித்து 1 பில்லியன் டாலர் வருவாய் கனவை நோக்கிச் செல்வதில் விஜய் சேகர் சர்மாவை விட வேறு எவராலும் முடியாது...
யூனிகார்ன்ஸ் தொடரும்...
கட்டுரை உதவி: ஜெய்